வெள்ளி, 28 மார்ச், 2014

சேது...

சேது... நினைவு தெரிந்த நாளிலிருந்தே பிடித்துப் போன ஒரு பெயர்.
இந்தப்  பெயரில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் எங்கேயோ எதன் காரணமாகவோ அல்லது காரணமேயின்றியும் கூட  எனக்குள் புதைந்து போயிருக்கலாம்.

மகன் பிறந்திருக்கிறான் என்றவுடன், அவனுக்கானப் பெயரைத் தேர்ந்தெடுக்கையில் வருண் என்ற பெயருக்கு இணையாக சேது என்ற பெயரும் விருப்பத்திற்குரியதாய்  இருந்திருக்கிறது.

உச்சரிக்கவே அழகாக இருக்கும் பெயராக தெரிகிறது. வாய்விட்டு மகிழ்ச்சியோடு கூப்பிடுவதற்கு என யாருமில்லை. சமயங்களில், வருணிலிருந்து பிடித்தவர்கள் சிலரை பொதுவாக அழைக்க பொதுப் பெயராக "சேது" என கூப்பிடலாம் என்று கிறுக்குத்தனமாக கூட தோன்றியது உண்டு.. :)

நான் நேரிலே பார்த்திராத, அப்பாவின் இரண்டாவது அண்ணன், அவரது இருபத்தாறாவது  வயதிலேயே மறைந்து விட்டார். அவரின்  பெயர் சேதுராமன்.

பனிரெண்டாம் வகுப்பில் ஒரு திருப்புதல் தேர்வை முடித்துவிட்டு, தாத்தா இறந்துவிட்டதாக வந்த மரண செய்தியைக் கேட்டு, மதியமே விரைந்து சென்று பார்த்த அம்மாவின் அப்பா பெயரும் சேது ராமன். (இந்த தாத்தா சற்று  தொலைவில் வசித்து வந்ததால், பார்த்துப் பழகிய நேரங்கள் குறைவே என்றாலும், மற்ற பேரன், பேத்திகளைப் போல சமமான அன்பையே எனக்கும் வழங்கி இருந்திருக்கிறார். ஏதோ ஒரு நாள் அம்மாவிடம் தாத்தா பேசுகையில், வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்ததில் புரிந்தது என்னவென்றால், என்னைப் பற்றிய அவரது அதிகபட்ச கவலையே இந்த உயரத்திற்கு மாப்பிள்ளைத் தேடணும் என்பதே)
பெரிய அளவில் இவர்கள் இருவரும் அகத்திற்குள் நெருங்காவிட்டாலும், இந்த பெயர் அதிகமாகப் பிடித்தே இருக்கிறது.


இறந்து போன இந்த இருவரைத் தவிர, சேது என்ற பெயரில் உறவோ, நட்போ இல்லை. ஆயினும், இந்தப் பெயர் இனம் புரியாத ஒரு வசீகரத் தன்மையோடு இருப்பதாகவே தோன்றுகிறது. இயக்குனர் பாலாவின், "சேது" படம் வெளியான மூன்றாவது நாளே, அந்தப் படம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே, பெயருக்காக மட்டுமே மினிப்ரியா தியேட்டர் சென்று படம் பார்த்திருக்கிறேன்.


விஜய் டிவியில், ஒரு காலத்தில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தவர் பெயர் சேது என்று தெரிந்ததிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். மம்மூட்டி போல சேது பேசும் பொழுது, மம்மூட்டி பேசுவதை விட கேட்க நன்றாக இருக்கும். :)


அத்தனை எளிதில் நடிகர்களை கொண்டாடிப் பழகி இருக்காத எனக்கு, சமீபத்தில் அதிகமாய் பிடித்துப் போன நடிகர்களில் விஜய் சேதுபதி, வந்து சேர்ந்ததில், அவரது பெயரில் இருக்கும் சேதுவும் ஒரு காரணம் என்றால், அது பொய்யில்லை.

இதன் பின்னணியில் பலமான எந்த ஒரு காரணமும் இல்லை. இத்தனை வருடங்கள் கடந்தும், இந்தப் பெயரின் மீது இருந்த ஈர்ப்பு, அப்படியே உயிர்ப்போடு இன்றும் இருக்கிறது. இருக்கும் காலம் வரை, இவ்வீர்ப்பு தொடரும் என்ற நம்பிக்கையும் உண்டு.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இத்தனை தகவலின் சேகரிப்பு மூலம் சேது பெயரின் ஈர்ப்பு புரிகிறது...

Rathnavel Natarajan சொன்னது…

அருமை. ஒரு விஷயத்தை எடுத்து எழுதும் தமிழ் நடை அழகு. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Deepa Nagarani. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

போன ஜென்மத்தில் சேதுன்னு யாரும் உங்களுக்கு நல்லது செஞ்சிருப்பாங்களோ? நல்ல எழுத்து நடை...

thambu சொன்னது…

வாழ்வில் காரணமே தேவைஇல்லாமல் சில வார்த்தைகள்,சில முகங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஏன் என்ற ஆராய்ச்சி இல்லாது அதனை அனுபவிப்பவகள் பலர். சிலர் பிடித்ததால் அதனை எதனுடனாவது தொடர்பு படுத்த முயல்வர். எல்லோருக்கும் பொதுவான உணர்வு புரியாத நிலையில் அது தரும் ஒரு சந்தோஷ உணர்வு . எடுத்துச் சொல்ல ஒரு எழுத்தாளர் இல்லாவிடில் வாழ்வில் பலதையும் கடந்தது தெரியாமல் கடந்து விடுவோம். நினைத்து ருசிக்கச் செய்யும் எழுத்து உங்கள் வரம் :)