வியாழன், 22 மே, 2014

:)

விடுமுறைக்காக விருதுநகரில் தாத்தா வீட்டிலிருந்த வருணை அழைத்துக் கொண்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். 25 நாட்கள்... மொபைலில் கூட பேசவில்லை. எட்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பையனுக்கு, பிரிந்திருந்த நாட்களில் அம்மாவை பார்க்கனும் என சொல்ல வேண்டாம், பேசனும் என கூடவா சொல்லத் தோன்றாது. இதெல்லாம் பெருமை என்று எண்ணியிருந்ததால், இந்த நாட்களில் வீம்பாக நானும் பேச முயற்சிக்கவில்லை. ஆனால், நேற்று என்னவோ தாங்கிக் கொள்ளவே முடியாததால், கோபத்தில் ஏதேதோ திட்டினேன். ஏதோ விளக்கம் சொல்ல வாயெடுத்தவனை, பேசாதே என்று கோபத்துடன் அதட்டி விட்டு, கைப்பையில் இருந்த பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தான். பேருந்து ஏதோ அக்னிக் கடலில் மிதப்பது போல சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் நெருங்கிக் கொண்டிருக்கையில், எனது வலது முழங்கையை அவனது இரு விரல்களால் தட்டினான். வருண் பக்கம் திரும்பி என்னவென்பது போல பார்த்தேன். முகம் கொள்ளாதப் புன்னகையுடன் இருந்தான். அவனது வலது கையின் ஆள்காட்டி விரல் ஜன்னலுக்கு வெளியே சுட்டிக் காட்டிய திசையில், சில நூறு அடிகள் தள்ளி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. மெலிதாகப் புன்னகை படர்ந்த முகத்துடன், வருண் முகத்தைப் பார்க்க, சமாதானப்படுத்தி விட்டோம் என்று  பலத்த சிரிப்புடன், என் வலது கையைப் பிடித்துகொண்டு, மீண்டும் ரயிலைப் பார்க்க ஆரம்பித்தான். சிறிது தூரம் வரை ரயிலுடன் வெயிலை மீறி குதூகலத்துடன் பயணித்தோம்.

1 கருத்து:

thambu சொன்னது…

குஞ்சு மிதித்த கோழியின் உணர்வு ,நேர்த்தியான பதிவு. இது ஆரம்பம் மட்டுமே . பிள்ளையின் உலகில் பெற்றவளைத் தவிர மற்றவைக்கும் முக்கியத்துவம் உண்டு என காலம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. நான் அனுபவித்துக் கடந்து விட்டேன் இது உங்கள் முறை . வாழ்த்துக்கள் :)