புதன், 23 ஜூலை, 2014

கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!



குறிப்பிட்ட ஊரில் உள்ள கோவில், கடவுளை மையப்படுத்திக் கொண்டாடப்படும் திருவிழாக்கள், பலதரப்பட்ட மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வல்லமை பெற்றவை என்றே சொல்லலாம். ஒரே திருவிழாவில் நமக்கு பிடித்தமானவர்களை காண்பதைப் போல, பேச்சுவார்த்தை நின்று போன உறவுகளையும், நட்புகளையும்  பார்க்கலாம்.

பொதுவாகவே அன்பிற்கு உரியவர்களிடம் விரைவாக தோன்றும் கோபம், வெறுப்பு போன்றவை வந்த  வேகத்தில் ஆவியாகி காணாமல் போக பாசம் மட்டும் எஞ்சி நிற்கும்.  முதலில் சென்று யார் பேசுவது என்பதில் விட்டுக் கொடுக்காத வீராப்பிற்கு சொந்தக்காரர்கள் தான் நம்மிடையே பலர். இவர்கள் உட்பட நாம் அனைவரும், நம் கடந்த காலத்தின் நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவி செய்பவைகளில் ஒன்றாக திருவிழாக்களும் இருக்கின்றன என்றே தாராளமாக சொல்லலாம்.

மழை என்ற அர்த்தத்தில் வரும் மாரி, அம்மனாக வீற்று இருக்காதே ஊரே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். முன்னால் சேர்ந்து கொள்ளும் பெயர் மட்டும், சந்தனம், முத்து, சமயபுரம் என்று இடத்திற்கு இடம் மாறுபடும். பொதுவாக இந்தக் கோவில்களில் எல்லாம் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். ( கொளுத்தும் கோடையில் மழை வேண்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் இந்தத் திருவிழாக்கள் என்று யூகிக்கிறேன்)

மதுரையில் ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பில் இருக்கின்ற மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் நடக்கும் பங்குனித் திருவிழா, எனக்கு நினைவு தெரிந்து  பார்த்த முதல் கோவில் விழா. திருவிழா என்றால் இப்படிதான் இருக்கும் என்று புத்திக்கு தெரியத் தொடங்கியப் பிறகு, திரைப்படங்களில் திருவிழாக் காட்சிகள் காட்டுப்படும் பொழுது ஒப்பிட்டு பார்த்துள்ளேன்.

ரிசர்வ் லைன் மாரியம்மன்  கோவிலிலும் அம்மன் கோவில்களுக்கே உள்ள இலக்கணப்படி திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை போன்றவை நடத்தப்படும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வரும் பொழுதும், மீண்டும் அழகர் கோவிலுக்கு செல்லும் பொழுதும், இந்தக் கோவிலில் தலையைக் காட்டி செல்லும் அவரின் வருகையைக் காணக் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருக்கும்.

இந்தக் கோவில் ஓரளவு பெரிய கோவில். பங்குனித் திருவிழா ஆரம்பமானதின் அடையாளமாக முதல் நாளில் காப்பு கட்டப்படும். அங்கங்கே வேப்பிலைகள் கயிற்றில் சீரான இடைவெளிகளில் முடிச்சிடப்பட்டு, வீதிகளின் இரண்டு பக்கங்களையும் இணைத்து தோரணமாக தொங்க விடப்படும். அன்று மாலையே பிரசாதமாக,  தாராளமாக மோர் விட்டு, வெங்காயம் கலந்து வழங்கப்படும் கேப்பைக் கூழுக்கென்று உள்ள அலாதி சுவை இன்று வரை மாறவில்லை. அதற்கடுத்த நாட்களில் மாலை வேளைகளில் பிரசாதமாக வழங்குவதற்கென்றே பொங்கல் பிரியர்களுக்கு பிடித்த சுவையிலேயே பெரிய, பெரிய அண்டாக்களில் பொங்கல் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

விழாக்காலங்களில் கோவிலின்  முன்புறம் விரிந்திருக்கும் பந்தல், வேலைப்பாடு நிறைந்த பந்தலின் உள், வெளி அலங்காரங்கள், இலை, பழங்களாலான தோரணங்கள், தென்னம்பாளைகள்,  பக்கவாட்டில் பல வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் சீரியல் பல்புகள், பாடல்களை அதிரவிட்டுக் கொண்டிருக்கும் ஒலிப் பெருக்கிகள், திடீரென முளைத்தக் கடைகள், கோவிலின் நேரெதிரே பந்தலுக்கு அப்பால், சற்று தொலைவில் சின்னஞ்சிறிய இடைவெளிகளில் பொங்கலைக் கிண்டிகொண்டிருக்கும் எண்ணிக்கையற்றக் குடும்பங்கள், திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி அல்லது அமைதி பூத்த முகங்கள் என்று ஒட்டு மொத்த இடமே வண்ணமயமாக மயக்கும்.

பத்து நாட்களுமே மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்கில் பாட்டுக் கச்சேரி, பட்டி மன்றம், நடனம், நாடகங்கள் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்தாவது நாள் நடைபெறும் "வள்ளி திருமணம்", நாடகம் மட்டும்  இன்று வரை மாறாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
மற்ற மாரியம்மன் கோவில்களைப் போலவே முளைப்பாரி எடுத்தல், அக்கினிச்சட்டி எடுத்தல், அங்கப்ரதட்சணம் உட்பட சகலப் பிரார்த்தனைகளும், பிரார்த்தித்தவர்களால் நிறைவேற்றப்படும். நவதானியங்களைத் தொட்டிகளில் பதித்து, நீர் விட்டுப்  பாதுகாத்து, மாலை நேரங்களில் காப்புக் கட்டி முளைப்பாரி சுமப்பவர்கள் கும்மியடித்து, தானானே பாட்டுப்பாட செடிகள் ஒரு பக்கம் முளைத்து வளர ஆரம்பிக்கும். (சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் வரும் அதே ரக தானானேப் பாட்டு தான் பெரும்பாலும்  இங்கும் கேட்டிருக்கிறேன்)

எட்டாவது நாள் மாலை வேளையில் வைகை ஆற்றுக்கு சென்று சக்திக் கரகம் எடுத்து வந்து ஒவ்வொரு தெருவின் வழியாக மேள தாளத்துடன் வருபவரை அந்த தெய்வமே நேரில் வந்தது போன்று பயபக்தியுடன் கூடிய மரியாதையை அளிப்பர் குடியிருப்பு மக்கள். மாலை நேரத்தில் வாசல் தெளித்து வண்ணங்களால் நிரம்பிய பெரிய கோலங்கள் இட்டு காத்திருப்பர். அத்தனை தூரம் நடந்து சென்று திரும்பி வந்த கால்களுக்கு பலரின் வீட்டு வாசலில் தயாராக இருக்கும் மஞ்சள்பொடி, வேப்பிலை கலக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி, அவர் அளிக்கும் விபூதியைப் பெற்றுக் கொள்வர். அதற்கடுத்த நாள் முளைப்பாரி ஊர்வலம் வரும். பத்தாவது நாள் மீண்டும் அவரவர் தொட்டிச் செடிகள் அவரவர் தலைகளில் சுமந்து வரப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்படும்.

கரகம் எடுத்து வரும் அன்று மாலையில், எங்கள் பகுதியில் ஊற வைத்த பச்சரிசியை உரலில் இட்டு, உலக்கையால் குத்தி, எடுத்த மாவை, சல்லடையிலிட்டு சலிப்பர். சற்று ஈரமாக இருக்கும் அந்த சலித்த மாவுடன், மண்டவெல்லம், ஏலக்காய்,சுக்கு பொடி  கலந்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைப்பர். மறுநாள் காலையில் இந்த மாவில் ஒரு பகுதியை எடுத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி நடுவில் சிறிதாக உண்டாக்கியப் பள்ளத்தை நெய்யால் நிரப்பி திரியை இட்டு மற்றவர்களைப் போல நாங்களும் கோவிலுக்கு எடுத்து செல்வோம்.  நீண்டு கொண்டிருக்கும் வரிசையில், வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டே எப்பொழுது உள்ளே சென்று விளக்கை ஏற்றி அம்மனை வழிபட்டு திரும்புவோம் என்று அம்மா, பாட்டி நிற்க, நானோ எப்பொழுது மாவிளக்கை சுவைப்போம் என்றிருந்திருக்கிறேன்.

மாவிளக்கு...... மிகக் குறைவான பொருட்களின் சேர்மானத்தில், அடுப்பில் வைத்து பார்க்கும் எந்த வேலையும் இன்றி, தேங்காய்ச்சில்லுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அற்புதமான சுவையாக மாறிவிடுவதை, சாப்பிட்டவர்கள் அனைவரும் அறிவர். "பொங்க வைக்கப்போறோம்", என்று அக்கம் பக்கத்தில் உள்ளோர் கோவிலுக்கு போகும் பொழுது, பதிலுக்கு "மாவிளக்கு வைக்கப் போறோம் நாங்க", என்று மிகப் பெருமையாக சின்ன வயதில் சொன்ன ஞாபகம் இருக்கிறது.

பெரிய பாத்திரத்திலிருக்கும் மாவிளக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு, தேங்காய், வாழைப்பழத்துடன், அருகில் பொங்கல் கொடுத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் தந்த பாத்திரத்தில் நிரப்பப்பட்டுக் கொடுக்கப்படும். பசிக்கும் பொழுதெல்லாம், ஒரு சிறிய தட்டில் மாவிளக்கை கை கொள்ளாமல் அள்ளி எடுத்துத் கடித்துக்கொள்ள தேங்காய் சில்கள், என்று மாவு தீர்ந்து போகும் வரை சப்புக்கொட்டி சாப்பிட்டிருக்கிறேன்.

திருவிழாக்காலங்களில் வீதிக்கு வீதி கட்டப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் வழியாக மாலை நேரங்களில் வீடுகளை வந்தடையும், தானேன்னே, பாடல்களுக்கு  முன்பாக, ஏற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள், கற்பூர நாயகியே கனகவல்லி, செல்லாத்தா செல்ல மாரியாத்தா, தீர்த்தக்கரை மாரியம்மா போன்ற பல அம்மன் பாடல்கள் ஒலிக்கும். எட்டு நாட்களில் பக்திப் பாடல்களைத் தவிர வேறு பாடல் வரிகள் தப்பித்தவறி கூட காதுக்கு கேட்காது. ஒன்பதாவது, பத்தாவது நாட்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகும். பக்திப் பாடல்களில் இருந்து விடுபட்ட உடன் திரைப்படங்களில் வெளியாகி புகழ் பெற்ற அம்மன், கோவில் திருவிழா சம்பந்தப் பட்ட பாடல்களில் சிலவற்றை ஊரெல்லாம் கேட்க செய்து ஒரு சமநிலைக்கு கொண்டு வந்த பிறகு மற்ற பாடல்களுக்குள் செல்லும் ஒலிபெருக்கிக்காரார் எங்களையும் அதே வரிசையில் எதிர் பார்த்துக் கேட்கும்படி பழக்கி இருந்தார்.

குடியிருப்பில் கட்டிடங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்க, முப்பது வருடங்களுக்கு முன்பு பணியாற்றிய பலரும் ஓய்வு பெற்று வேறுவேறு இடங்களுக்கு சென்றிருக்க, இப்பொழுதெல்லாம் திருவிழாவில் தெரிந்த முகங்கள் தட்டுப்படுவதே அரிதாக உள்ளது. கோவில் இன்னும் விரிவு படுத்தப்பட்டு, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பாக சமீபத்திய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்குள் சென்று, கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட வரிசையில் நகர்ந்து செல்வதற்கு பதிலாக கோவிலை மட்டும் சுற்றிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, அரிதாக தெரிந்த முகங்கள்  ஒன்றிரண்டை  அடையாளப்படுத்தி, வீட்டிற்கு வரும் பொழுது வடிந்து விடுகிறது இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிய அளவிலான திருவிழா ஆர்வம். அம்மாவை மட்டும் அனத்தி எப்படியேனும் மாவிளக்கு செய்ய சொல்லி சாப்பிட்டால் முடிந்து விடுகிறது திருவிழா!

கூட்டத்துடன் கொண்டாடிக் கும்பிட்டது கடந்த காலமாக மாறி, ஓரிருவருடன் அமைதியாக கோவில் பிரகாரம் இருப்பதைப் பார்க்கும் பொழுதில் மனதில் பொங்குகிறது கொண்டாட்டம்.

சில வருட இடைவேளைக்கு  பிறகு மீண்டும் தற்பொழுது...  வண்டியிலோ, நடந்தோ அடிக்கடி காலை நேரங்களில் மாரியம்மன் கோவிலை கடந்து செல்ல வேண்டும். எங்கோ ஒரு சிலர் இருப்பதே தெரியாமல் நின்றிருப்பர். விரிந்த வாசலிலிருந்து சில அடிகள் தொலைவில் உள்ள கருவறையில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நின்று கொண்டிருக்கும் அம்மனை, சில வினாடிகளில் நலம் விசாரித்தபடி கடந்து செல்வதே எனக்கு போதுமானதாக இருக்கிறது.  :)


பிடித்தப் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பது...
நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்தும் பிடித்துப் போவது...
இப்படியான மகிழ்ச்சியான சூழ்நிலையும், மனநிலையும் அமையும் நாளெல்லாம்  திருவிழாவே! :)

 ( குங்குமம் தோழி ஜூலை  16- 31 )

4 கருத்துகள்:

ezhil சொன்னது…

பண்டிகை நிகழ்வுகளில் நேரிடையாக ஈடுபட்டதில்லை என்றாலும் காலையில் கேட்கும் பாடல்களும், யாராவது கொடுக்கும் மாவும் , மாலைகளில் நடக்கும் பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களும் இன்னமும் ஞாபகமிருக்கிறது.. இந்தத் தொடர்புகளும் விட்டுப் போய் 20 வருடத்திற்கு மேலாகிவிட்டது

Rathnavel Natarajan சொன்னது…

கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!
அருமையான பதிவு. அருமையான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். எங்கள் அருமை மகள் Deepa Nagarani க்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

thambu சொன்னது…

ஒரு திருவிழாவின் நிகழ்வையும், சந்தோசத்தையும் ,அது சார்ந்த நினைவுகளையும் வெகு அழகாகப் பதிந்துள்ளீர்கள் .இதில் விடுபட்டுப் போனது என நான் நினைப்பது பருவ வயதில் இருக்கும் இரு பாலினரின் களிப்பும் கொண்டாட்டங்களும் . ஒரு திருவிழா பெரும்பாலும் இக்காலத்திய டேட்டிங் போல இருக்கும். ஒரு பார்வை, ஒரு சிரிப்பு கொஞ்சம் கேலி என மற்றவர்கள் கவனிக்காத பொழுது தங்களுக்கான உலகத்தில் உலா வருவது வெகு சுவாரசியமான நிகழ்வு. அலைபேசியின் வருகை இந்த சுவாரசியத்தை வெகுவாக காணாமல் செய்து விட்டதில் எனக்கு வருத்தமுண்டு. பெரும்பாலும் ஊர் திருவிழாக்கள் எல்லா ஜாதி மக்களையும் முன்னிலைப்படுத்தி கௌரவிப்பதால் பல பிணக்குகள் தீரக் கண்டிருக்கிறேன் .
இவ்வளவு முக்கியத்துவம் உடைய ஒரு நிகழ்வு இன்று சண்டைகள் தீர்க்கும் களமாகவும் , குடித்து தரம் கெட்ட வகையில் நடக்கும் நிகழ்வாகவும் மாறிப் போனது வேதனையின் உச்சம்.எடுத்து நடத்தும் பெரிய தலைகள் முயன்றால் ,மனது வைத்தால் வளரும் தலைமுறைகளுக்கு பெரிய பேறாகும்.
எது எப்படியாயினும் மனதுள் உறங்கிக் கிடந்த பல நினைவுகளை எண்ணி எண்ணி களிப்படைய செய்த உங்களுக்கு நன்றி தீபா .கடைசியாக இவற்றை எல்லாம் தாண்டிக் கடந்த மனதின் பக்குவத்தையும் பதிந்தது அழகு .

gunasekaran சொன்னது…

தங்கையின் பதிவைப் படித்து
என் இளம் வயது காலம்
எண்பதுகளுக்குச் சென்று வந்தேன்...
துளியும் மாற்றமில்லை
மாவிளக்கின் மனம் உட்பட...
அம்மன் பாடல்கள் உட்பட...
இரவு நாடகம் உட்பட...
அட...
இன்னும் மறக்க முடியாத ஞாபகங்கள். ஏராளம்...
ராட்டினம்...
பஞ்சுமிட்டாய்...
மூணு சீட்டு...
பட்டுடை உடுத்திய பெண்களின் அணிவகுப்பு
வித விதமான விளையாட்டு
மண்ணடியில் சிறார்களின் உற்சாகக் கூக்குரல் கலந்த விளையாட்டு
கரகாட்டம்
காவடி
ஜாடையாய் பேசிட காதலர்களுக்கு அபூர்வமாய் அமைந்திடும் அற்புத தருணங்கள்...
வீடு தோறும் விருந்து உபசரிப்புகள்
ஒளிந்து கொண்டிருந்த மாமா பெண்ணின் தரிசனம்...
வருடத்திற்கு ஒன் டைம் மட்டும் " கள் " குடிக்கும் நல்லவர்கள் (காளியாத்தா சத்தியமாக நான் இல்லை தங்கை...)
ஊரே திரளும் ஆன்மிக கலாச்சார அன்புக் கலவை
அப்பப்பா...
மறக்க முடியுமா?
நினைவலைகளில் எம்மைத் தவழ வைத்தமைக்கு அன்புத் தங்கைக்கு நன்றிகள்...