செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

14.2.15- மதுரை மேலமாசி வீதியில்.. மாலை சில நிமிடங்கள்....


சென்ற சனிக்கிழமை மேலமாசி வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்தோம். 
கோவிலின் உள்ளே இருந்த கருவறையில் மூலவர், வெளியே அமர்ந்திருந்த உற்சவர் என இரு சிலைகளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை கடந்த பார்வை அருகில் இருந்த சிலையின் கண்களில் கூடுதல் நேரம் விழுந்தது. பக்கத்திலேயே பாதியாக உடைக்கப்பட்ட தேங்காய்களில் நிரப்பப்பட்டிருந்த நெய்யில் எரிகின்ற தீபம், அவ்விடத்தை கூடுதல் பிரகாசமாக்கியது. வீரமணி பாடிய இருமுடி தாங்கிப் பாடல் இன்று வரை விருப்பத்திற்குரிய பாடலாக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே கேட்டு வந்த கதைகளால் ஐயப்பன் சிலையிடம் கூட ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டுகளில் எப்பொழுதாவது, அமர்ந்தபடி மீனாட்சியிடம் ஒரு வழிப்பாதையில் நடத்தும் உரையாடலே போதுமானதாக இருந்ததால், மற்ற கோவில்களுக்கு அவ்வளவு சென்றதில்லை. 

இருமுடி கட்டி செல்பவர்களின் கூட்டம் அதிகமாகவும், சிறிய பரப்பளவில் கோயில் இருந்ததாலும், வெளியே உள்ள டீ கடை அருகில் நானும் வருணும் நின்றிருந்தோம். ஓரிருவர் மட்டுமே அந்தக் கடையின் முன் நின்று கொண்டிருந்தனர். கடையின் இடது மூலையின் ஓரத்தில் தொங்க விடப்பட்டிருந்த அட்டையில் காபி, டீ விலை ரூபாய் 20 என்றும், ஒன் பை டூ ரூபாய் 18  எனவும் இருந்தது. ஒன் பை டூ கிடையாது என்பதை இப்படியும் சொல்லலாம் போல.

ஒரு வழி போக்குவரத்தாக மாற்றப்பட்டிருந்த மாசி வீதி, வாகனங்கள் ஓரங்களில் நிறுத்தப்பட்டு, நடைபாதையில் நின்று நிதானமாக வேடிக்கைப் பார்க்கும் படி இருந்தது. பாவம் போல வீசிக்கொண்டிருந்த காற்று தன்னாலான தூசியை சுமந்தே வந்தது. சில அடிகள் தொலைவிலிருந்த மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் எக்கச்சக்கமான அரசியல் கூட்டங்கள் நடந்துள்ளன. இன்னும் எத்தனைக் கூட்டம் நடத்தினாலும் இப்படித்தான் இருப்போம், என மற்ற சாலைகளைப் போலவே பரிதாபமாக இருந்ததை, அந்த  மற்ற சாலைகள்  வரவேற்குமோ என்னவோ  :P . 

கோவிலின் உள்ளே இருந்து வந்த ஒருவர் ஓரடி உயரமுள்ள தூக்கு வாளியில் இருந்த சர்க்கரைப் பொங்கலை கரண்டியில் அள்ளித் தர, அருகில் இருந்தவர் சிறிய காகிதத் தட்டில் பெற்று கோவில் வாசலில் நின்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே வந்தார். நெய் மணம் தூக்கலாக வந்த அந்தப் பொங்கல் தட்டை வருண் வாங்கினான். புளியோதரை என்றால் நானும் வாங்கி இருப்பேன். 

சரியாக கோவிலுக்கு நேர் எதிரே வெளியே நின்ற நபர் கையை மேலே ஓங்கினார், கீழே சிதறிய பிறகு தான் தெரிந்தது அவர் கைக்குள்ளே அடங்கி இருந்தது  ஒரு தேங்காய் என. தேங்காய் விலை கூடியதால் இப்படி ஒரு கைக்கு அடக்கமான அளவு போல. உடைந்து கிடந்தது புழுதியில் என்பதால் யாரும் எடுத்த மாதிரி தெரியவில்லை. கோவிலுக்கு செல்பவர்களை வழி அனுப்பிவிட்டு, வருணை முன்னால் உட்கார செய்து, வண்டியை முடுக்கிய பின் பார்த்தால், மங்கிய ஒளியில் வேகத்தைக் காட்டிய  மேற்பகுதி  மீது பெயர் எழுதி விளையாடும் அளவிற்கு புழுதி படிந்திருந்தது. 

3 கருத்துகள்:

balaji karthik சொன்னது…

மாசிவீதிகளில் வண்டி பார்க்கிங் செய்ய இடமே கிடைக்காமல் கோவிலையே சுற்றி விடுகிறோம்

Rathnavel Natarajan சொன்னது…

அற்புதமான எழுத்தாற்றல். எங்கள் அருமை மகளுக்கு வாழ்த்துகள்.

thambu சொன்னது…

சில எழுத்துக்கள் நம்மை யோசிக்க வைக்கும், சில நமக்காக யோசிக்கும். இந்த இரண்டின் அழகான கலவையாக இந்தப் பதிவு. ஒரு மிகச் சாதாரண கணத்தில் எவரின் மனமும் பெரிய இலக்கில்லாமல் ஆனால் கண்ணில் படும் காட்சிகளின் வழியே பயணம் செய்யும். அந்தப் பயணம் சுதந்திரமாய், தன் பறக்கும் திறனின் தன்மையால் ஒரு பறவை வானில் நடத்தும் சாகசமாய் அமையும்.
இடம், வலம், மேல், கீழ், சுழன்று,மிதந்து என அதன் மனம் போன வகையில் ஆனால் ஒரு அற்புத லயத்தில் அந்தப் பயணம் இருக்கும்.கோவில், சாமி, நம்பிக்கை, இடம், அதன் தன்மை, மாறாத இருப்புகள், இன்றைய நிலை என நீங்கள் பதிந்த உங்கள் மனப் பயணம் ஒற்றை வார்த்தையில் .............................. ஆஹா.
நாட்கள் கடந்த பதிவானாலும் உங்கள் இருப்பை இயல்பாய் சின்ன சிரிப்போடு படிக்க வைத்த அழகான பதிவு :) :)