செவ்வாய், 26 மே, 2015

கேங்டாக் - டார்ஜீலிங் சுற்றுலா பயணம்



முதன் முறையாக விமானத்தில் சென்னையிலிருந்து கொல்கத்தா பின் அங்கிருந்து மேற்கு வங்காளத்தின் எல்லையில் இருக்கிற பாக்தோராவில் இறங்கினோம். ரயிலில் என்றால், சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலிகுரி என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து நம் பயணத்தை கேங்டாக் நோக்கித் தொடரலாம். டார்ஜீலிங் மாவட்டத்தின் உள்ளே தான் பாக்தோரா என்ற ஊரும், சிலிகுரியும் உள்ளன. நாங்கள் சென்ற மார்ச் ஆரம்பம் ஹாப் சீசன் நேரம்.   

சில மணி நேரங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு பதிவெண்களுடனான வண்டிகளை பார்த்து பழகிய கண்கள் சடாரென மேற்கு வங்க பதிவெண்களுடன் வலம் வரும் வண்டிகளைக் கண்டு சற்று தடுமாறித்தான் போகின்றன. இணையம் மூலமாக பதிவு செய்திருந்த வண்டியில் ஏறி, 124 கிமீ தொலைவில் இருந்த கேங்டாக் நோக்கி விரைந்தோம். மிக சுமாரான சாலைகள், குறைவான வசதிகள் கொண்ட சாலையோரக் கடைகள் என தமிழகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்த கொல்கத்தாவின் எல்லையோர மாவட்டத்தைக் கடந்து கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து இமயமலையில் ஏற ஆரம்பித்தது வண்டி. மலையின் ஒரு புறம் பாறைகளுக்கிடையே மரங்கள் சற்று நிறம் மங்கி வரவேற்றுக் கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் ஓடிக்கொண்டிருந்த டீஸ்டா நதி, பச்சையும், நீலமும் கலந்த வசீகர வர்ணத்தில் ஓரங்களில் கற்களுடன் ஓடிக்கொண்டிருந்தது. 



ஒரு வழியாக நான்கு மணி நேரப்பயணத்திற்கு பிறகு கேங்டாக் வந்தடைந்தோம். தாளமுடியாத குளிரால் கைகளை குறுக்கேக் கட்டிக்கொண்டு ஊரை வேடிக்கைப் பார்த்தபடி இருந்தோம். பார்க்கின்ற அத்தனை பேரும் ஸ்வெட்டர் அல்லது ஜெர்கின் அணிந்து இருந்தனர். ஜெர்கின் உள்ளேயே கைகளை வைத்திருப்பதன் காரணம் க்ளௌஸ் அணியாததாக இருக்கும். :)
 உணவகங்களுடன் கூடிய மதுபான விடுதிகள் கூடுதலாக தென்பட்டன. நடப்பதற்கான நடைபாதை மிகக்குறைவான இடங்களில் மட்டுமே இருந்தது. 20,30 கி.மீ வேகத்தில் செல்லும் வண்டிகளின் அதிக பட்ச வேகமே 40 கி.மீ தான். அப்பொழுதுதான் கூடுதல் கட்டுப்பாட்டுடன் வண்டியை இயக்க முடியும் என்றார் ஓட்டுனர். அத்தனை நிதானமாக, நேர்த்தியாக வாகனத்தை ஓட்டுகின்றனர். இந்த நான்கு நாட்கள் பயணத்தில் இங்கு புகைப்பிடிப்பவர்களை சந்திக்கவில்லை. ஆனால் பான்பராக் கடைக்கு கடை தொங்கவிடப்பட்டிருந்தது. சரி, அது அந்த ஊர் சிகரெட் என எண்ணிக்கொண்டேன்.

மறைந்து மறைந்து போகின்ற வழியெல்லாம் உடன் வந்து கொண்டே இருந்தது, சீனாவிலிருந்து கிளம்பி ஓடி வரும் டீஸ்டா நதி.

இதே இமயமலையின் இன்னொரு புறத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்ற சிம்லாவில் சாலைகள் மிக நேர்த்தியாக இருந்த நினைவு.

குறுகலான சாலையில் எப்படி லாவகமாக திறம்பட ஓட்டுகிறார்கள் அனைவரும் என தாள முடியாமல் கேட்டதில், ஓட்டுனர் பயிற்சியே இந்த மலையிலுள்ள இதே சாலையில் தான், பத்து நாட்களில் கற்று தேர்வதாக சொன்னார். சூழலே திறமையானவர்களை உருவாக்கிறது. இணையத்தில் பதிவு செய்திருந்த Summit விடுதிக்கு சென்ற பின் அன்றைய இரவு உணவை எடுத்துக் கொண்டு அலுப்பில் உறங்கினோம். 

அடுத்த நாள் காலை வாகனத்தில் கிளம்பிய போது மணி 8.30. ஐம்பத்தைந்தாவது கிமீ தூரத்தில் இந்திய-சீன எல்லையான நாதால பாஸை நோக்கி செல்லும் சாலையில் பயணம் துவங்கியது. எல்லைக்கு முன்பு 17 கிமீ தொலைவில் இருந்த சங்கு ஏரி யைக் காண முக்கிய செக் போஸ்ட் ஐக் கடக்க, எங்கள் புகைப்படங்கள் ஒட்டிய அனுமதி சீட்டை ஓட்டுனர் முதல் தினமே வாங்கி, கையெழுத்து பெற்றிருந்தார். 

மூன்றுக்கும் மேற்பட்ட மரப்பாலங்களை கடந்து மலையில் சென்று கொண்டிருந்தோம். சோதனை சாவடியில் நிறுத்தி, முகங்களை பரிசோதித்தப் பின்னரே வாகனம் செல்ல அனுமதிக்கின்றனர். தூரம் செல்ல செல்ல சாலையின் தரம் மோசமாக இருந்தது. சில இடங்களில் தார் பூசி பல வருடங்கள் ஆகி இருக்கலாம். ஓயாமல் குறை சொல்லிக் கொண்டிருக்கும் நம்மூர் சாலைகளை இம்மக்கள் நேரில் பார்த்தால் கொண்டாடக் கூடும். சில கிலோமீட்டர் இடைவெளிகளில் சில ராணுவ முகாம் தட்டுப்பட்டது போக, அங்கங்கே ராணுவ உடுப்புடன் நடந்து கொண்டிருந்த வீரர்களை அதிகமாகப்  பார்க்க முடிந்தது. 

சற்று வெறிச்சென்ற பள்ளத்தாக்கு ஒரு புறத்தில் மிரட்டினாலும், அங்கங்கு நின்ற மரங்கள் தைரியம் ஊட்டின. மரங்களின் பசுமையின் ஊடே மெலிதாக வெண்மை தெரிய ஆரம்பித்ததை பார்த்த நொடியில் பற்றிக்கொண்டது குதூகலம். சில இடங்களில் இடது புறத்தில் பாறைகளின் மத்தியில், கீழ் பகுதியில் ஓரத்தில் என தண்ணீர் உறைந்து கிடந்தது தெரிந்தது. ஒரு கட்டத்தில் வெண்மையான ஐஸின் ஊடே மெலிதான மரங்களின் பசுமை தெரிய வண்டி சங்கு ஏரியின் முற்பகுதியை அடைந்திருந்தது. இந்தப் பனியை பார்க்கத்தானே இத்தனை தூரப் பிரயாணம் என மகிழ்ச்சிப் பொங்க இறங்கினோம். நூற்றுக்கணக்கில் இருந்த மக்களுக்கிடையே, யாக் எருமைகளும் அதனை ஓட்டிக் கொண்டு  சவாரி செல்பவர்களுடன் சுறுசுறுப்பாக கைக்கூப்பியது சங்கு ஏரி.

ஒரு கிமீ நீளத்தில் பரந்திருந்த சங்கு ஏரியை Tsmoga என்ற பெயராலும் அழைக்கின்றனர். இந்த ஏரி 15 மீட்டர் ஆழம் உடையது. மழை நீர், ஐஸ் உருகும் நீரால் நிரம்பி இருக்கும் சங்கு ஏரியின் பெரும்பான்மையான பகுதி இந்த மார்ச் மாதத்தில் உறைந்திருந்தது. அதன் ஓரத்தில் சில அடிகள் விட்டு இரண்டடி அகலத்தில் நீண்டு சென்ற பாதையும் ஐஸால் மூடி இருக்க, அதன் மீது யாக் எருமையின் மீது அமர்ந்து, ஏரியின் இரண்டு புறங்களையும் ரசித்தபடி சிலர் சவாரி சென்று, திரும்பிக் கொண்டிருந்தனர். ஏரியின் வலது புறத்தில் இருந்து மெதுவாக உயர்ந்து சென்ற மலை முழுவதும் பனித்துகள்களால் நிரம்பி இருக்க, அந்தப் ஐஸ் துகள்களை சேகரித்து ஒருவர் மீது மற்றொருவர் வீசி விளையாடிக்கொண்டிருந்தோம். 

ஐஸில் நடப்பதெற்கென பிரத்யேகமான காலணிகள், கையுறை, ஜெர்கின், தலைக்கு குல்லா என சகலமும் உடன் எடுத்து செல்தல் நல்லது. அவற்றின் வாடகை நாம் அவற்றை இங்கே சொந்தமாக வாங்கிக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். மிக கவனமாக நடக்காததால் அந்த நேரத்தில் கையுறை அணியாததால் கீழே வழுக்கி விட்டதில் உள்ளங்கையில் சிறிதளவு தோல் பெயர்ந்து வெளியே எட்டிப்பார்த்த சிறிதளவு ரத்தம், குளிர்ச்சி தாங்காமல் உறைந்து போனது. 

அதிக கவனமாக நடந்தபடி ஏரியின் அருகே சென்று உறைந்த நிலையில் இருக்கும் தண்ணீரைப் பார்க்கலாம். நல்ல பரப்பளவில் சற்று சரிந்து மேல் நோக்கி சென்ற அவ்விடத்தில் பலர் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மீண்டும் திரும்பி அந்தப்பாதையின் வழியே யாக் சவாரி செல்பவர்களின் பின்னே நடக்கலாம் அல்லது மேல் நோக்கி கவனமாக ஏறலாம். நாங்கள் கொஞ்சம் ஏறிவிட்டு பின்னர் வந்த வழியே நடந்து வந்து முடித்தோம் எங்கள் வெண்மை நடையை. 

ஏரியின் எதிரில் இருந்த கோவிலின் முகப்பில், ஏரி உருவான ஒரு புனைவுக் கதை எழுதப்பட்டிருந்தது. இந்தக் கோவில் மட்டுமல்ல, சிக்கிம், டார்ஜிலிங் கில் பல இடங்களில் உயரங்களில் நீலம், பச்சை, மஞ்சள்,சிவப்பு என பல வண்ணங்களாலான கொடிகள் உயரமான கம்பங்களில் பறந்து கொண்டிருந்தன. சில இடங்களில் எண்ணற்ற வெண்ணிறக் கொடிகளும் பறந்து கொண்டிருந்தன. புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் இக்கொடிகளை புனிதமாக உபயோகிப்பதாக தெரிவித்தனர். என் பங்கிற்கான கொடியை அந்த இமயமலையில் நட்டு அவர்களுக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன் கொடி நடும் வேலையில் ஈடுபடவில்லை. :P 

அங்கிருந்து 17 கிமீ தூரத்தில் இருந்த பாபா மந்திர்க்கும், இந்தியசீனாவின் எல்லையான நாதலா பாஸ்க்கும், அதிகமாக பனி விழுந்து கொண்டிருந்ததால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. சீசன் காலங்களில் கண்டிப்பாக அங்கே செல்ல முடியும். பாபா மந்திர் என்பது இராணுவத்தில் பணிபுரிகையில் காணாமல் போன நபர், பின்னர் பனிக்கு ஊடே கண்டறியப்பட்டுள்ளார். இன்றும் அவர் உயிருடன் இருப்பதாக கருதுகின்றனர். ஹர்பஜன் சிங் பாபாவை எல்லைச்சாமியாக வழிபடும் மக்கள் அங்கே அநேகம். என்றோ ஒரு நாள் அந்தக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் அவரின் காலணியில் ஒட்டியிருந்த சேறு, அங்குள்ளவர்களின் கனவில் வந்து அவர் சொன்ன விஷயங்கள் என ஏராளமான கதைகளை பாபா பற்றி சிலர் சொல்கின்றனர் அவ்வூர் மக்கள். இன்றும், பாபா  நம் நாட்டை, மக்களைப்  பாதுகாத்துக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். 

பனிரெண்டு மணி நெருங்கும் போதே பள்ளத்தாக்குகளில், மேல் நோக்கி சென்ற பனிப் படலத்தைப்  பார்க்க முடிந்தது. இறங்கிக் கொண்டிருக்கையில் இடது புறம் பார்த்தால், சற்று நேரத்தில் பள்ளத்தாக்கு கண்களுக்கு புலப்படாத அளவில் பெரிதாகி இருந்தது பனியின் அளவு. 

வீடுகளின் மேற்கூரையில் விழும் பனி சரிந்து வடிவதற்காக, அத்தனை கட்டிடங்களின் மேற்கூரைகளும், மலையைப் போலவே இரண்டு புறங்களிலும் சரிந்திருந்தன.

நேப்பாளி, ஹிந்தி, பெங்காலி, அதிகமாக பேசுகின்றனர். ஹிந்தியும் ஓரளவு ஆங்கிலமும் தெரிந்திருந்தால், நேரடியாக நிறைய தகவல்களை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். 



அதே தினம் மாலை வேளையில் எம்.ஜி.மார்க் சென்றோம். கிட்டத்தட்ட சிம்லாவின் மால் ரோட்டைப் போல பொருட்கள் வாங்குவதற்கான வீதி. ஓரளவு சமமான நிலபரப்பில் நன்றாக அகன்று இருந்த இந்த சாலையின் இருபுறங்களிலும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட, அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் விலை 4,5 மடங்கு அதிகம். mamoo மம்மோ என்று சொல்லப்படுகின்ற மைதா மாவின் உள்ளே காய்கறி, கோழிக்கறி உட்பட்ட மசாலாக்களை அடைத்து ஆவியில் வேக வைத்துக் கொடுக்கின்றனர். 50 ரூபாய்க்கு எட்டு என்ற எண்ணிக்கையில் சைவ மம்மோ வாங்கினோம். வித்தியாச சுவையை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும். இந்த மம்மோ இங்கு உள்ள மக்களுக்கு மிகப்பிடித்தமான உணவாக இருக்கிறது. இங்கு மூங்கிலில் செய்யப்பட ஊறுகாய் பிரபலம். அச்சார் என்று அழைக்கப்படுகின்ற ஊறுகாயை அனைத்து தர தேநீர் மற்றும் உணவு விடுதிகளில் பார்க்கலாம்.  எங்கு சாப்பிட்டாலும், மிக மிதமானக் காரத்துடன் இருந்தது உணவு. 

சாலையை இரண்டாகப் பிரித்து நடுவில் செடிகள், ஓரங்களில் அமர்ந்து இளைப்பாற இருக்கைகளும் இருக்கின்றன. மெலிதான சாரலும், குளிரும் இருந்ததால் விரைவாக நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குத் திரும்பினோம்.

பார்ப்பதற்கு தான் சற்று சீனர்கள் போல தோற்றம் இருப்பது என்பதற்காக நூடில்ஸ், சாய்மீன் என பல் விதமான சீன உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டுமா இவர்கள் ? :P 
பசியாற சப்பாத்தி, சென்னா மசாலா எல்லாம்  நன்றாகவே கிடைக்கின்றன. இட்லி, தோசை, சட்டினி, சாம்பார் எல்லாம் தீவிர தேடுதலுக்குப் பின் அதிக விலையில்  கிடைக்கும். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கும். ஆனால் சுவை......................... சுவைத்துப் பாருங்கள் :)

இந்த காலநிலையை, சூழ்நிலையை மிக இயல்பாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மக்களின் எவர் ஒருவரின் முகத்திலும் எரிச்சலையோ, கோவத்தையோ, வெறுப்பையோ காணமுடியவில்லை. சத்தமாக பேசியோ, யாரும், யாருடனும் சண்டையிட்டோ பார்க்கவில்லை. அத்தனை சாத்வீகமாக தெரிகின்றனர் பெரும்பான்மையோர் புத்த மதத்தைப் பின் பற்றும் பூமியில் உள்ள இம்மக்கள். சாந்தமான முகத்துடன், எப்பொழுதும் புன்னகை புரிய தயாராய் இருக்கும் உதடுகளின் பின்னணியில், இந்த ரம்மியமான வானிலையும் இருக்கலாம். 

அடுத்த நாள் காலை, 90 கிமீ தூரத்தில் இருந்த டார்ஜீலிங்கிற்கு புறப்பட்டோம்.  கிளம்பி செல்கின்ற வழியில் மிகச்சிறிய திருமண மண்டப அளவில் இருந்தது சிக்கிமின் சட்டமன்றம். ஒன்றரை மணி நேரப்பயணத்தில், நீடித்த மழையால் மெல்லி என்ற இடத்தில் தேநீர் அருந்தினோம்.



 மலைப்பாங்கான இந்தப் பகுதியில் பத்து கிலோமீட்டர் தூரத்தை அடைய அரை மணி நேரம் பிடிக்கிறது. சிக்கிமில் தொடர்ந்த தூறல் வழி எங்கும் பன்னீர் தெளித்துக்கொண்டே வந்தது. மழைச்சாரலில், மரங்களின் அடர் பசுமைப் பின்னணியில் பாய்ந்து ஓடி வருகிற டீஸ்டா நதியைப் பார்ப்பதை எளிதில் வார்த்தையில் வார்க்க முடியாது. முதல் 30 கிமீ வரை துணை வந்த நதியின் வண்ணமும், அழகும் மனம் முழுவதும் நிரம்பி அழுத்தமாக பதிந்துள்ளன. முப்பது கிலோமீட்டர் கடந்த பின் நீண்டு தொடரும் சாலையில் இடது புறம் பிரிந்து ஏறுகிறது, டார்ஜீலிங் செல்வதற்கான மலைப்பாதை.

மலைப்பிரதேசத்தில் ஓங்கி உயர்ந்த மரங்கள் சூழ மழையுடன் பயணம் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. சில இடங்களில் முற்றிலும் பனி மூடியிருக்க, எதிரில் வருகிற வண்டி சரியாக தெரியாமல், மெல்லிய வெளிச்சத்தில், மிக மெதுவாக இயக்கப்பட்ட வண்டியின் உள்ளே இருந்து, ஆகாயத்தில் தொட முடியாதப் பனியை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். மீண்டும் பனியற்ற சாலையிலும் தொடர்ந்து பின் வந்தது மழை. இந்த மழையிலும் குடையைப் பிடித்தவாறே பள்ளிக்கோ, வேலைக்கோ, கடைகளுக்கோ சென்று கொண்டு வெகு இயல்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க முடிந்தது. 

உயர உயர செல்கிறோம். குறுகிய சாலைகள், பாதுகாப்பற்ற விளிம்புகள் பல இடங்களில், சில இடங்களில் நெட்டுக்குத்தலான சாலை இருந்தாலும் அத்தனை ஓட்டுனர்களும் மிக சாமர்த்தியமாக 
வண்டியை செலுத்துகின்றனர். 

டார்ஜிலிங்கில் மக்கள் அதிகம் புழங்கும் சரிவான சில  இடங்களில் தார் சாலைகளை அமைக்கும் போதே, அதன் மீது வரிசையாக, சில அங்குல இடைவெளியில் நேர்த்தியாக சிறிய அளவிலான கற்களை அடுக்கி சொரசொரப்பாக்கி இருந்தனர். இந்த சாலைகள் வண்டிகள் செல்கையில், மற்றும் மக்கள் நடக்கும் பொழுது பிடிமானத்திற்காக என்றனர். இங்கு சாலைகள் எந்த குறையும் சொல்ல முடியாதபடி இருந்ததையும் குறிப்பிட வேண்டும். 

1.10 க்கு டார்ஜிலிங் வந்து அடைந்த பின்னும், தொடர்ந்த மழையை வெளியே நிற்க சொல்லிவிட்டு, தங்கும் விடுதியில் எங்கள் பைகளை வைத்துவிட்டு, மதிய உணவிற்கு பின் சுற்றிப் பார்க்க வர சொன்ன வண்டி 2 மணிக்கு வந்தது.   

டார்ஜிலிங்கில் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் பலவும், சில கிலோமீட்டர் பயண தூரத்திலேயே இருக்கின்றன. தூவானமாக தூறிக்கொண்டிருந்த துளிகளில் சிலவற்றை மேலே வாங்கிக்கொண்டு மிருகக்காட்சிச் சாலைக்குள் நடக்க ஆரம்பித்தோம். முன்னால் சென்றதும் பலவிதமான பறவைகள் அடங்கிய பெரிய கூண்டைப் பார்த்தோம். சில அடிகள் நடந்ததும் வேண்டும் என்றால் ஏறி செல்ல வசதியான படிக்கட்டுகள், அதை ஒட்டி சாய்வான மேல் நோக்கிய சாலையுமாக சென்றது பாதை. இடது ஓரத்திலே வரையாடுகள் இருந்தன. வலது புறம் திரும்பி மேலே ஏறினால், சிவப்பு பாந்தா கரடிகள், மரங்களுக்குள் ஏறி விளையாடுவதைப் பார்க்கலாம். உள்ளே இருந்த புலி உட்பட்ட பல்வேறு மிருகங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும்.

அங்கிருந்து கிளம்பிய ஐந்தாவது நிமிடத்தில் ரோப் காரில் சென்று திரும்பும் இடத்தில் இருந்தோம். அந்த சாலையின் இடது புறம் கீழே இருந்த மிகப் பெரிய பள்ளியில் நேபாள, பூட்டான் மன்னர் பரம்பரைக் குழந்தைகள் தங்கிப் படிப்பதாக ஓட்டுனர் கூறினார். அங்கிருந்து வலது புறம் சில அடிகள் மேல் நோக்கி ஏறினால் வருகிறது டிக்கெட் கௌண்டர். ஒரு நபர்க்கான பயண சீட்டின் மதிப்பு 150 ரூபாய். கிட்டத்தட்ட 5 கிமீ தூரத்தை, நாற்பது நிமிடங்களில் ரோப் கார் உள்ளே இருந்தபடி, டார்ஜிலிங் அழகை பறவைப் பார்வையில் தரிசிக்கலாம். விடாமல் துரத்திய மழைத்துளிகளை இன்னும், இன்னும்  வாங்கிக்கொண்டே, உள்ளே சென்று அமர்ந்தோம். மேலே ஓரத்தில் இருக்கும் சக்கரம் சுழல, சுழல கரகர சத்தத்துடன் அருகே வந்தது நாங்கள் ஏற வேண்டிய கேபின். ஒரு கேபினில் ஆறு பேர் வரை மட்டுமே அமரலாம். தடதடவென்ற சத்தம் கார் கிளம்புகின்ற இடத்திலும், சுற்றி வளைந்து திரும்பும் இடத்தில் மட்டுமே காதை பதம் பார்க்கும். காரில் நிஜமாகவே பறக்க முடிவது ரோப் காரில் மட்டுமே. :)



சில நிமிடங்களில், ஓரத்திலிருந்த பள்ளி, வீடுகளில் இருந்த சிறுவர்கள் டாட்டா காட்டியது மறைய, கீழே தேயிலைத் தோட்டம், அங்கங்கே மூங்கில் உட்பட சில மரங்கள் இடையே நகர்ந்து கொண்டிருந்த பனி சற்று தொலைவில் சூழ்ந்திருந்த இமயமலைத் தொடர் என கண்களுக்குத் திகட்டத் திகட்ட விருந்தை அளித்துக் கொண்டிருந்தது ரோப் கார் பயணம். சாதாரண நாட்களில் காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை இயங்கும் ரோப் கார் சீசன் காலங்களில் 10 லிருந்து 2 மணி வரை மட்டும் செயல்படும். 

கண்ணாடி வழியாக பார்வையை எத்திசையிலும் சுழல விட்டாலும், முழுதும் பருகிட முடியாத பேரழகு பூமியாக டார்ஜீலிங் மிளிர்கிறது. கிளம்பிய இடத்திலேயே இறக்கிவிடப்பட்ட பொழுது மணி நான்கை தாண்டி இருந்தது. தாங்க முடியாத குளிர் அருகே இருந்த தேநீர் கடையை நோக்கி விரட்டியது. இங்கு ஒரு செய்தியை அவசியம் பகிர்ந்தே ஆக வேண்டும், பால் உட்பட பலவும் பாலீத்தீன் கவர்களுக்கு மாற்றாக அட்டைப்பெட்டி, காகிதப்பைகளில் வழங்கப்படுகிறது. பெயரளவில் இல்லாமல், பாலீத்தீன் பைகளுக்கு எதிராக திறம்பட செயலாற்றுகின்றன சிக்கிம், மேற்குவங்காள அரசுகள்.

அடுத்த சில நிமிடங்களில் இருந்த Tenzing Hill Rock, என்ற சிறிய குன்று போன்று இருந்ததைக் காட்டி, இங்குள்ள மலையில் ஏற பயிற்சி எடுப்பவர்களுக்கான இடம் என்று சொல்லப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் சென்ற தேயிலைத்தோட்டத்திலிருந்து தொலைவில் வெள்ளியை உருக்கி வரைந்தது போல தனியாகத் தெரிந்த மலையை கஞ்சன்ஜங்கா என்றனர். ( அடுத்த நாள் காலையில் ஐந்தரை மணிக்கு டைகர் ஹில் சென்றால், அங்கு காணும் சூரியோதயம் அற்புதமாக இருக்கும் என திட்டமிட்டும், பனி அதிகமாக இருந்ததால் அத்திட்டம் ரத்தானது. அடுத்த நாள்,  நாங்கள் தங்கி இருந்த விடுதியின் கண்ணாடி ஜன்னல் வழியாக தெரிந்த அந்த சிகரத்தில் சூர்யோதயத்தின் காட்சி அத்தனை அற்புதமாக இருந்தது )  

சில நிமிடங்களில், இறக்கி விடப்பட்ட சாலை ஓரங்களில் சில தேநீர் கடைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. தேநீர் குடிப்பதுடன், வீட்டிற்கு தேவையான தேயிலைத் தூள் அடங்கியப் பொட்டலங்களை வாங்கிக் கொள்ளலாம். அதன் பின்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு சென்றது தேயிலைத் தோட்டம். எத்தனையோ வருடங்களாக, எண்ணற்றவர்களை பார்த்துக் கொண்டிருந்த அந்தச  செடிகளை கைகளால் வருடினேன். அட்டைப் பூச்சி இருக்கலாம், கவனம் என அறிவுறுத்தியதை திரும்பிப் பார்த்தபடி யோசித்தேன், நாளெல்லாம் இத்தோட்டத்தில் பணிபுரிபவர்கள் எத்தனை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இருட்டத் துவங்கிய நேரத்தில் ஜப்பானியர்களின் புத்த கோவிலை அடைந்திருந்தோம். (அம்மக்கள் கோவிலை பகோடா என்ற அழைக்கிறார்கள்). அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாட்டில் சில நிமிடங்கள் கலந்து கொண்டு, வெளியே வந்தால், சிலபடிகள் மேல் நோக்கி செல்ல, அங்கு அழகிய பின்னணயில் ஸ்தூபி (சமாதி) அழைக்கிறது. கிட்டத்தட்ட பற்கள் நடுங்கிக் கொண்டிருக்க, குளிரின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. நாக்கு தடிமனாகிப் போன உணர்வு. வேகமாக ஓடி வந்து வண்டியில் ஏறினோம். 

இங்கும் கூட கேங்டாக் போலவே காந்தி மார்க் இருக்கிறது. அதே போல அதிக விலை. அதற்கு பதிலாக, பொருட்கள் வாங்குவதற்காக லேடன் லா ரோடு, நிதானமான விலையைக் கூறும் கடைகளால் நிரம்பி இருக்கிறது. ஸ்வெட்டர், சால், உள்ளிட்ட குளிர்ப்ரதேசத்திற்கு தேவையான ஆடைகள் நிறையக் கிடைக்கின்றன. தேயிலைத்தூள் பெட்டிகளும் வாங்கிக் கொள்ளலாம். சுர்பி என்று சொல்லப்படுகிற மிட்டாய் யாக் எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாகும். இங்கும், அம்மிட்டாய்களைப் பல கடைகளில் பார்க்க முடிந்தது. அவ்வூர் மக்கள், விரும்பி வாங்கி செல்வதையும் காண முடிந்தது. 

அடுத்த நாள், காலையில் கிளம்பி வரும் வழியில் இருந்த பூங்காவிற்கு சென்றோம். அந்த வழியில் உள்ள க்ஹூம் (Ghoom) , மிக உயரமான இடத்தில் அமைந்த ரயில்வே ஸ்டேஷன் ஆகும். கீழே வந்தப் பூங்காவின் பெயர் படேசியா லூப். அந்தப் பூங்காவிற்குள் 3,4 பெட்டிகளை மட்டுமே கொண்ட குட்டி மலை ரயில் நேரோ கேஜ் பாதையில் ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் கீழே வரும் ரயில் சாலையை ஒட்டி சென்றது. அங்கு தான் ஆராதனா ஹிந்திப் படத்தில் வரும் புகழ் பெற்ற பாட்டு படமாக்கப்பட்டதாக தெரிவித்தனர். மையத்தில் ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூண் இருந்தது. வழக்கமான பூங்காக்களைப் போலவே பசுமையுடன் காட்சியளித்ததுடன் அங்கிருந்த டெலஸ்கோப் உபயோகித்து மலையை உற்று நோக்கலாம். அங்கு இருந்த நினைவுத் தூண் சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு போர்களில் இறந்த கூர்க்கா ராணுவவீரர்களின் தியாகத்தின் அடையாளமாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்திலும்  நிறுவப்பட்டு இருக்கிறது.

கீழே இறங்க இறங்க, இமயமலை தூரம் சென்று கொண்டே இருந்தது. மரங்களும், குளிர்ச்சியின் அளவும் குறைய ஆரம்பித்தன. மழை, பனி இல்லாமல், மிதமான சூரிய ஒளியில், வளைந்து வளைந்து இறங்கிய வண்டி மூன்று மணி நேரத்தில் பாக்தோரா ஏர்போர்ட் வந்தடைந்தது. 

முதல் தடவை சென்றால், மேலே ஏறுகையில்  அவசியம், எலுமிச்சை உள்ளிட்ட புளிப்பான பழங்கள் அல்லது மிட்டாய்கள் கை வசம் வைத்துக் கொண்டிருந்தால், இம்மலைப்பாதைப் பயணத்தை எளிதாக ஏற்க மறுக்கும் உடல் நிலையை வசப்படுத்தலாம். பின்னர் என்ன, ரசிக்கும் மனதுடன் உடலும் இணைய வாழ்வின் மறக்க இயலாத பயண அனுபவத்தைப் பெறலாம். வெண்மை நடையும், பறவைப்பார்வையும் அளிக்கும் உற்சாகம் நிச்சயமாக நம் மனதை புதுப்பிக்கும்.

(கேங்டாக் - டார்ஜீலிங் சுற்றுலா பயணம் குறித்து, கடந்த 17.5.2015 அன்று தீக்கதிர் - வண்ணக்கதிரில் வெளியான 'பருந்துப் பார்வையோடு வெண்மை நடை'... )

5 கருத்துகள்:

N.R. SEKAR RAJU சொன்னது…

Very Nice narration with layer of humor in it. Thanks for the touring advise.

Bavani சொன்னது…

You can put more photos...here..Deepa! After reading this I wish to see Gangtok soon...Very nicely written!

பாலவேணி சொன்னது…

சகோதரி

அருமை அப்படியே போயிட்டு வந்த சுகம் ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க .
சென்னையில் இருந்து எத்தனை நாள் ட்ரிப் .தோரயமா ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆச்சுத்து /
சீசன் எப்போது ?

அன்புடன்
பாலா

தீபா நாகராணி சொன்னது…


பாலவேணி//
சென்னையிலிருந்து விமானத்தில் சென்றால் மொத்தம் நான்கு நாட்களில் இந்த இடங்களை பார்க்க முடியும். சீசன், இந்த கோடைக்காலம் தான். :)
தோராயமாக நபருக்கு இருபதாயிரம் வரை ஆனது.

thambu சொன்னது…

ஒரு பிரயாணக் கட்டுரை, முதலில் அங்கு செல்ல வேண்டிய முறை, அங்கு சென்றடைந்ததும் கண்ணில் தென்படும் காட்சி மற்றும் சூழல், பின்னர் அங்கு காண வேண்டிய இடங்களும் அது பற்றிய தகவல்கள் என நேர்த்தியான பதிவு. பிரயாணக் கட்டுரையின் வெற்றியே செல்லாத இடத்தை பார்த்த உணர்வும், செல்ல வேண்டும் என்ற உந்துதலும், சென்றால் அங்கு தவிக்காமல் முன்னேற்பாடாக செய்யவேண்டியவற்றை விளக்கும் கையேடாகவும் இருப்பதில் தான் உள்ளது.
இவை யாவற்றையும் அலுப்பு தட்டாத நடையில் படைத்ததில் உள்ளது உங்கள் தனித்துவம். டீஸ்டா நதி, சங்கு ஏரி,மலைபாதைப் பயணம்,ரோப்கார், தேயிலைத் தோட்டம், கிடைக்கும் உணவு, எங்கு சென்றாலும் எதையாவது வாங்கும் நபர்களுக்கான குறிப்பு, அங்குள்ள மக்களின் பொது குணம், கவனம் சிதறினால் நடக்ககூடிய நிகழ்வுகள் அதனையும் மீறி ஈர்க்கும் இயற்கை அழகு, பகோடா என ஒரு முழுமையான பார்வை. அற்புதம்

இவ்வளவையும் படிக்கையில் ஒரு எண்ணம் : இந்த பதிவை இரண்டாகப் பிரித்து முதல் பகுதியின் இறுதியில், ஏற்ப்பட்ட ஒரு சிரமத்துடன் நிறுத்தி பின்னர் இரண்டாம் பகுதியில் அதன் தீர்வோடு ஆரம்பித்திருந்தால் எப்படி இருக்கும்?, இது என் எண்ணம் மட்டுமே.