புதன், 16 செப்டம்பர், 2015

போக வர ஒன்பது கிமீ...!




போக வர ஒன்பது கிமீ. எடுத்துக்கொள்ளும் தூரத்தை பகல் மற்றும் மாலை நேரங்களில் கடப்பது போலான சூழல் அதிகாலை ஐந்து மணிக்கு இல்லை. வாகன இரைச்சலற்ற சாலை, போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டே உடன் வரும் சுத்தமான காற்று, மஞ்சள் ஒளியைஅங்கங்கே பூசியபடி வழி காட்டும் சாலை, திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓரிரு கடைகள், நாளின் முதல் பயணத்தை அமைதியாக துவங்கி நகரும் சில வாகனங்கள் என பிரமாதமாகக் கழிந்தன 25 நிமிடங்கள்.
நிதான வேகத்தில் இருபுறமும் பார்வையை பொறுமையாக ஓடவிட்டு செல்லும் அவசரமற்ற பயணம் தான், பயணம் செய்த திருப்தியைத் தரும் என்பது என் எண்ணம்.
எப்போதாவது, மாலையில், மேகம் கூடி வரும் சமயங்களில், அதிக இடங்களில் மரங்கள் அடர்ந்து வரவேற்கும், நத்தம் சாலையில் சில கிமீ தூரம் வரை சென்று திரும்பவது மனதை பொறுத்து அவ்வப்போது நிகழும். ஆனால் அதிகாலையில் கிடைத்த இந்தப் பயணம், வேறொரு பரிமாணத்தில், எதிர் பாராத மகிழ்ச்சியை அளித்தது.
ஆங்காங்கே ஓரிரு வாகனங்கள் சென்று கொண்டிருந்தாலும், கோர்ட்டிலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில் வண்டிகளின் எண்ணிக்கை சொல்லும்படி இருந்தன. முதலில் வரும் பூ மார்கெட்டிற்கு அருகில் பகல் போலவே ஆட்களின் எண்ணிக்கை. சற்று தள்ளி இருந்த தேநீர் கடையில் இருந்த கடையின் விளக்குகள், பின்புறம் இருந்த இருட்டால் பளிச்சென்று தெரிந்தன. பேச்சரவமின்றி தங்களுடைய பைகளையும், கூடைகளையும் கக்கத்திலும், பக்கத்திலும் வைத்தபடி சில பெண்களும் தேநீர் சுவைத்துக் கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு முன்புறம், வெளியூர் செல்லும் உடன்பிறப்பை இறக்கிவிட்டுத் திரும்பும் போது ஒரு காபி குடிக்க தோன்றிய விருப்பம், வீட்டில் காத்துக் கொண்டிருந்த சமையல் வேலையால் உடனடியாக ஒத்திப்போடப்பட்டது.
மீண்டும் வந்த வழியே உருண்டு கொண்டிருந்தன சக்கரங்கள்.
குறைவான போக்குவரத்தால், இன்டிகேட்டர், ஹார்ன் எழுப்பிய கைகளுக்குரிய வண்டி விநோதமாக பார்க்கப்பட்டது போன்ற உணர்வு. (அத்தனை ஒழுங்காக வேலை செய்யும் கைகளாம் :P)
சொல்லியே ஆக வேண்டும்... 300-350 மீட்டர்க்குள், தோராயமாக 20 + 20 கட்டிடங்களின் மத்தியில் நீளும் ஜவஹர் சாலை - நடப்பதற்கோ, வண்டியில் செல்வதற்கோ மிகப் பிடித்தமான சாலை. நான்குவழிப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகளின் தரத்தில் இருக்கும். சாலை ஆரம்பத்திலும், முடிவிலும் இரண்டு வேகத்தடைகள், கொஞ்ச தூரத்தில் சின்ன அளவில் சீரற்ற மேற்பரப்பு, இவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. அதில் இன்னும் மெதுவாக ஓட்டியபடி, நகர்ந்தது வீட்டை நோக்கிய பயணம். சிலர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.அங்கிருந்து பீபீகுளம் தொட்டு செல்லும் வழக்கமான சாலையில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது வண்டி. வீசிக்கொண்டிருந்த காற்றை ஏகபோகமாக ரசித்துக் கொண்டிருந்த சிலருடன் நானும் இருந்ததில் ஏனோ ஒரு பெருமிதம். வீட்டை அடைவதற்கு சில நூறு மீட்டர் தொலைவிற்கு முன் ஒட்டிக்கொண்டது நிசப்தம். அதன் பிறகு, வளைந்து இடது புறம் திரும்பிய போது ஓரிருவர் வாசலைப் பெருக்க ஆரம்பித்திருந்தனர். வண்டியை நிறுத்தி பூட்டிடும்போது, மனதில் பரவியிருந்த நிறைவை உணர முடிந்தது. உடன் வந்த காற்றின் புத்துணர்வு உள்ளுக்குள்ளும் நிரம்பி இருந்தது. மலர்ந்த அகத்துடனும் தொடங்கிய நாளின் உற்சாகம் நாள் முழுவதும் தொடரும். :)

5 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

போக வர ஒன்பது கிமீ...! =
பேச்சரவமின்றி தங்களுடைய பைகளையும், கூடைகளையும் கக்கத்திலும், பக்கத்திலும் வைத்தபடி சில பெண்களும் தேநீர் சுவைத்துக் கொண்டிருந்தனர். - அருமையான ரசனை. நல்ல நீரோட்டம் போல் அற்புதமான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Deepa Nagarani

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அன்புச் சகோதரிக்கு வணக்கம். மதுரை வலைப்பதிவர் சந்திப்பில் தங்களின் தொகுப்புரை இன்னும் என் காதுகளில் கம்பீரமாக ரீங்காரமிடுகிறது. தங்களின் எழுத்தில் பலவகையான பயண அனுபவங்களைப் பார்க்கிறேன். வியப்பாக இருக்கிறது. நிற்க.
தாங்கள் இன்னும் நமது புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவைப் பற்றி எழுதவில்லை என்பது மட்டுமின்றி வருகைப்பட்டியலிலும் பதியவிலலை் போலுள்ளதே? ஏன்?
மதுரைக் காரர்களின் பெரிய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். ரமணி அய்யா அவ்வப்போது பேசிவருகிறார். பண உதவியும் செய்திருக்கிறார். மற்றவர்களின் பதிவுகளையும் வருகையையும் அன்புடன் எதிர்பார்க்கிறேன். வருக. ஒத்துழைப்பும் தருக. நன்றி வணக்கம்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

விழாப்பற்றிய விவரங்களை அறிய, அன்பு கூர்ந்து இந்த வலைப்பக்கப் பதிவுகளைப் பார்க்க வேண்டுகிறேன் -
http://valarumkavithai.blogspot.com/2015/09/50000.html

http://bloggersmeet2015.blogspot.com/

இரண்டாவதாக உள்ளது விழாவுக்கென்றே ஒருமாத முன்பாக உருவாக்கப்பட்ட வலைப்பக்கம்.

thambu சொன்னது…

அதிகாலைப் பயணம் தரும் ஒரு அற்புதமான உணர்வு அமைதியான நம்பிக்கை.அதிலும் சில நேரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க நேரும்பொழுது கிடைக்கும் மன உணர்வு அனுபவித்தால் மட்டுமே புரியும். அதனை உணரச் செயத எழுத்து அருமை.வாழ்க்கை ஓட்டத்தில் சாதாரணமாய் அனுபவிக்க வேண்டிய பலதையும் மறந்து ஓடும் நடுத்தரவர்க்கத்திற்கு உங்கள் எழுத்து பல சமயங்களில் ஒரு நினைவூட்டி.மிகையில்லாத ஆனால் மிகத் தெளிவான பதிவு :)

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை சொன்னது…

நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்