ஜீன்ஸ் வலுக்கட்டாயமாக அணிய சொன்னாலும், பிடிக்காத ஒரு உடை. எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு கிளம்பினாலும், சேலை உடுத்து என அம்மா சொல்வதை கேட்க பிடிக்காததற்கு ஒப்பானதே 'ஜீன்ஸ் போடு' என்று சொல்வதும். ( நெருங்கிய உறவினர்களின் திருமணத்தில் மட்டும் சில மணி நேரங்கள் புடவை அணிவதே பெரும்பாடாக இருக்கிறது ) சற்று பின்னால் பார்த்தால், ஷார்ட்ஸ் அணிந்து பள்ளி நாட்களில் மைதானத்தில் ஹாக்கி விளையாடியது அந்த நேரங்களில் எளிதான ஆடையாக இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை டீஷர்ட் + (முக்கால்) பாவாடை அணிவதே வழக்கம். கடந்த பல வருடங்களாக சௌகர்யமான உடையாக சுடிதார் மட்டுமே இருக்கிறது. பிடித்த விதத்தில் தைத்து அணிந்து கொள்ளும் சுடிதார் என்னை என் இயல்பில் வைத்திருப்பதாக உணர்கிறேன். ( என் அம்மாவிற்கு அவர் சேலையில் இருக்கும் பொழுது இந்த உணர்வு எழலாம்) கடையில் சென்று விரும்பி வாங்கவும், அணியவும், பிடித்த உடை சுடிதார் மட்டுமே. ஒரு வேளை சுடிதார் அணியக்கூடாது என்று எதிர்மறையாக கடவுளே சொன்னாலும், என் அளவில் கண்ணியமான உடையாக பாவிப்பதால் தொடர்ந்து சுடிதாரையே அணிவேன். ஜீன்ஸ் சில பெண்களின் உடல்வாகிற்கு பாந்தமாக பொருந்துவதைப் பார்த்திருக்கிறேன். சிலருக்கு சேலை பொருந்துவதாகவும் தோன்றும். முன்னாள் முதல்வர் சேலையில் மட்டுமே கம்பீரமாக இருக்கிறார். என் அம்மாவுக்கு கிடைத்திடாத கல்லூரி படிப்பு, சுதந்திரமான ஆடைத்தேர்வு, சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு என பல உரிமைகள் எனக்கு கிடைத்திருப்பதற்கு பின்னால் எண்ணற்ற நல்லவர்களின் கடும் போராட்டங்கள் இருக்கின்றன என்பதை நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக அழைப்பு விடுக்கும் அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ள தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
செவ்வாய், 7 அக்டோபர், 2014
செவ்வாய், 2 செப்டம்பர், 2014
நேசித்து வாசிப்போம்... வாசித்து நேசிப்போம்...சுவாசம் உள்ள வரை...!
எழுத்துக்களை கண்கள் உள்வாங்க, உள்ளே விரிந்து கொண்டே செல்லும் காட்சிகளுக்கு இணையாக எந்த
அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லை. வாசிக்கும் பொழுதே நொடிப்பொழுதில்
நம்மையும் உடன் அழைத்து செல்லும் வல்லமை கொண்டவை எழுத்துகள்.
அ ம் மா என்று எழுத்துக் கூட்டி குழந்தை சரியாக வாசித்த
நாளில், பசு பால் தரும் என்ற வாக்கியத்தை அர்த்தம் புரிந்து வாசிக்கையில்,
ஒரு சிறுகதையை புரிந்து கொண்டபடி நம் குழந்தை நமக்கு விவரித்து சொன்ன
நாளில் எத்தனை பூரிப்பு பெற்றோர்களாகிய நமக்கு.
மெதுமெதுவாக எழுத்தின் வசீகர சுவை உணர்ந்து, கதைகளைத் தேடத் துவங்கிய நாட்களில், "ரத்னா பாலா", என்ற சிறுவர்களுக்கான மாத இதழை வீட்டில் வாங்க ஆரம்பித்தனர். மூன்றாம் வகுப்பு தமிழ் பாட வழியில் படித்ததால், இந்த புத்தகத்தில் உள்ள வண்ணங்களும், படங்களும், கதைகளும் வகுப்புப் பாடங்களை ஓரம் தள்ளிவிட்டு ஈர்த்தன. அப்பொழுது வாசித்த 'இஞ்சி தின்ன குரங்கு', என்ற கதையை இப்பொழுதும் நினைவு படுத்த முடிகிறது.
அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, சிறுவர்மலர் என்று
துரத்திதுரத்திப் படித்த நாட்களில் தெரிந்து கொண்ட ஒற்றை வரி... "ராஜா
எவ்ளோ முட்டாளா இருந்தாலும், மந்திரி புத்தியோட இருந்தால் ராஜ்ஜியம்
பொழச்சுக்கும்"... என்பது. :)
பள்ளிக்கூடத்தில் நூலகம் என்று ஒன்று இருக்கும்.
அழகாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்ல அனுமதி
கிடையாது. வருடத்திற்கு ஒரு முறை, நூலக அலுவலர்களே, ஒவ்வொரு வகுப்பறைக்கும்
வந்து, மொத்த மாணவிகளுக்கும் கொடுக்கும் புத்தகங்களின் பெயரை எழுதி
வைத்துக் கொண்டு வழங்குவர். இரண்டே நாளில் மீண்டும், புத்தகங்களை எந்த
சேதாரமும் இல்லாமல் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பு மட்டும் அந்த
வழங்குதலில் இருக்கும். தொலைந்த நூல்களுக்கு நூலகர்களின் சம்பளத்திலிருந்து
பணத்தைப் பிடிப்பதால், அவர்களின் கவலை அவர்களுக்கு. கொஞ்சமும்
யோசிக்காமல், படக்கதை புத்தகங்களை ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவது
போல தான், ஏனைய புத்தகங்களும் இருக்கும்.
பொதுவாக புத்தகங்களில், சில நேரங்களில் நாமே எளிதில் கணித்துவிடும் படி இருக்கும் அடுத்தடுத்த வரிகள் சோர்வை உண்டாக்கும்.
பொன்னியின் செல்வன், தியாக பூமி, இரண்டுமே நாவல்களின் ஊடே பறந்து சென்று பார்த்து ரசித்து கொண்டாட செய்தவை. மெலிதான நகைச்சுவை, சுவாரஸ்யமாக வாசிக்க செய்யும் வரிகளின் தொடர்ச்சி, உடன் இழுத்துச்செல்லும் கதை அமைப்பு என்று சகலமும் ஈர்க்கும். அதிலும், பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில், குந்தவை, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியன், நந்தினி, சேந்தன் அமுதன் உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களுக்கு பக்கத்தில் நின்று நடப்பவற்றை எல்லாம் நேரடியாக பார்த்து மகிழ்ந்து, வருத்தமுற்று, கலங்கி, சமாதானமாகி என வாசித்த அந்த ஒரு வாரமும் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை வேறு எந்த படைப்பும் தந்ததில்லை. அவர் எழுதி உள்ள கதைகளில், காதல், அரவணைப்பு, போன்ற வார்த்தைகளைக் கூட பார்த்து, வெட்கப்பட்டு, யோசித்து, பயன்படுத்தி இருப்பாரோ என்று யோசிக்கும் அளவிலேயே அவற்றின் பயன்பாடு இருக்கும்.
ஜி.நாகராஜன். - 'நாளை மற்றுமொரு நாளே', என்ற நாவலை வாசிக்க, வாசிக்க, இதென்ன
இப்படி எழுதி இருக்கிறார் என்று சங்கடம் சிறிது நேரம் தொடர்ந்தது. வாசித்து
முடித்ததும், நம்மிடையே வாழும் அதே நேரத்தில் நாம் பார்க்கப் பிரியப்படாத
மனிதர்களைப் பற்றிய கதைக் களத்தில், கதாப்பாத்திரங்கள் அவற்றின் இயல்பில்
வாழ்ந்திருப்பதை அறிய முடிந்தது. ஆரம்பத்தில் வாசிப்பதற்கு நெருடலாக இருந்த
எழுத்துகள், தயங்கி தயங்கி பக்கங்களைப் புரட்ட செய்த வரிகள்,
போலித்தனமற்ற, அறைகிற உண்மையை உணர, உணர, அது வரை இருந்த அத்தனை
தயக்கங்களையும் வரிசையாக உடைக்கிறார் ஜி.என். ஒரு கட்டத்தில் அவருடன்
கைகுலுக்கி சௌகர்யமாக பயணிக்க முடிகிறது.
இது தான் படித்து உள்வாங்குதலா என்றால் நிச்சயம் இல்லை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவ அலைகளை உருவாக்கிக் கொண்டிருப்பது தான் புத்தகக் கடல். எடுத்த உடனேயே ஆன் ரான்ட் கதைகளை உருகிப் படிப்பவர்களும் உள்ளனர். நாம் நான்காம் வகுப்பில் படிக்கும் பொழுதோ அல்லது நமது நாற்பதாவது வயதிலோ, நம்மை மாற்றக் கூடிய புத்தகம் நம்மை அடையாளம் கண்டு கொள்ளும்.
ஆசை ஆசையாய் வாங்கி வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் குரலை அவ்வப்பொழுது கேளுங்கள். அதுவும் முடியாவிட்டால், கேட்க விரும்புபவர்களுக்காவது கொடுங்கள்.
வாசிப்பு...
தெரிந்து கொள்ள, தெளிய வைக்க, பொழுதைப் போக்க, மனதை நெகிழ செய்ய, ஒப்பிட்டு ரசித்து அசைபோட, அறிவை விசாலப்படுத்த, உற்சாகம் பொங்க என இன்னும் இன்னும் பல விந்தைகளை செய்யும் வாசிப்பு. கையடக்க புத்தகம் இத்தனையும் வழங்குமென்றால், வேறு என்ன வேண்டும்?
(குங்குமம் தோழியில் வெளியானது - ஆகஸ்ட் 16-31)
சனி, 2 ஆகஸ்ட், 2014
கொஞ்சம் பசுமை... கொஞ்சும் பசுமை...!
மனதை அழுத்துகின்ற எந்த ஒரு விஷயத்திலிருந்தும் எளிதில் விடுபட கொஞ்சம்
தனிமையும், கொஞ்சம் பசுமையும் உதவும் என்பது என் நம்பிக்கை.
ஒவ்வொரு விதையும், அதன் தன்மைக்கு ஏற்றபடி விதவிதமான இலை, கிளை, பூ, காய், பழங்கள் என அத்தனையையும் தன்னுள்ளே அடக்கி உறங்கிக் கொண்டு இருப்பது இயற்கையின் பிரமிப்புகளில் ஒன்று. உறக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, விதை செழிப்பாக வளர தேவையான மண், நீர், காற்று, சூரிய ஒளி, என அனைத்துமே நமக்கும் அடிப்படைத் தேவை.
உயிர்ப்புள்ள அனைத்திற்கும் தேவைகள் பொதுவானவையே... :)
விளையாட, ஓய்வெடுக்க என்று ஊஞ்சல் கட்டிய
ஒரு வேப்ப மரம், ஒரு புங்கமரம், நிழலுக்காக எங்கள் வீட்டின் முன்
நின்றிருந்தன பல வருடங்கள். உதிர்கின்ற வேப்பம் பூக்கள், காய், பழங்கள்,
இலைகள் என்று அத்தனையும் சிறு வயதில் கடை விளையாட்டு விளையாடும் பொழுது
உபயோகித்து இருக்கிறோம். உதிர்ந்த வேப்பம் பூக்கள், வேப்பிலை வாசம் கலந்து
நாசியின்
வழியாக மனதை அடைந்துள்ள நாட்களில் உணர்ந்த குளிர்ச்சி, இன்றும்
மாசுபடாமல், நினைவடுக்கில் சுகமாக அமர்ந்துள்ளது. ஏதேனும் வேப்பமரத்தை
கடக்கின்ற பொழுதெல்லாம், ' இது நம்ம மரம்', என்று மகிழ்ச்சி எப்பொழுதும்
எட்டிப்பார்க்கும்.ஒவ்வொரு விதையும், அதன் தன்மைக்கு ஏற்றபடி விதவிதமான இலை, கிளை, பூ, காய், பழங்கள் என அத்தனையையும் தன்னுள்ளே அடக்கி உறங்கிக் கொண்டு இருப்பது இயற்கையின் பிரமிப்புகளில் ஒன்று. உறக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, விதை செழிப்பாக வளர தேவையான மண், நீர், காற்று, சூரிய ஒளி, என அனைத்துமே நமக்கும் அடிப்படைத் தேவை.
உயிர்ப்புள்ள அனைத்திற்கும் தேவைகள் பொதுவானவையே... :)
நெருக்கமான இலைகள் கொண்ட புங்கைமரத்திலிருந்து கிடைக்கும் நிழலில் நிற்க, உட்கார அத்தனை குளிர்ச்சியாக, இதமாக இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை பூத்து, காய்த்து, இலைகள் அத்தனையும் உதிர்த்து நிற்கும் பொழுது சில நாட்கள் பார்க்க பரிதாபமாக இருக்கும். குறுகிய நாட்களிலேயே சிவப்பாக துளிர்க்கின்ற இலைகளின் உள்ளே இரத்தம் இருக்குமோ என்று சிறுவயதில் சந்தேகப்பட்டிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக, மரம் முழுவதிலும் உள்ள இலைகள் மெது மெதுவாக வெளிறிய பச்சையிலிருந்து, குளுமையானப் பச்சை வண்ணத்துக்கு மாறும் நாட்களில் பார்க்க அத்தனை அழகாய் இருக்கும். பூத்து, காய்த்து, இலைகளின் வண்ணம் மாறி, உதிர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி நம்மை சிந்திக்க வைப்பதற்கோ என்று பின்னால் யோசித்திருக்கிறேன்.
சில காரணங்களால் வீட்டை சுற்றி சுற்றுசுவர் எடுக்கப்படாமல் இருந்தது .
காலி இடத்தின் அளவு அதிகமாக இருந்தும், இரண்டு தெருக்கள் இணையும்
இடத்தில் வீடு இருந்ததால், அந்த நாட்களில் காலை நேரங்களில், வீட்டின்
முன்பாக ஓட்டி செல்லப்படும் ஆடுகளுக்காக, இரண்டு மரங்களும் மட்டும், வேறு
மரங்களின் துணையின்றி இருந்தன. தரையில் மழை பெய்தால் முளைக்கும் செடிகள்
மட்டும் ஆடு,மாடு மேய்ந்தது போக அங்கங்கே இருக்கும்.
உயர்நிலை வகுப்பில் நாமும் செடி வளர்க்க வேண்டும் என மிக ஆசைப்பட்டு, வீட்டின் முன்புறம் மண்ணைத் தோண்டி
பல வண்ணங்களில் டேபிள் ரோஸ் செடிகளை நட்டு வைத்தேன். மொட்டுக்களோடு
வைக்கப்பட்டதால் இரண்டே நாட்களில் பூத்ததில் மனதும் மகிழ்ச்சியில் பூத்தது.
ஐந்தாவது நாள் பள்ளி விட்டு வந்து பார்த்தால், செடி இருந்ததற்கான
அறிகுறிகளே இல்லை. விசாரித்ததில் யாரோ ஒரு புண்ணியவதி பூ வாசத்திற்கு
பாம்பு வந்துவிடும் என்று அம்மாவை பயமுறுத்தி சென்றிருக்கிறாள் என்பது
தெரிந்தது. அந்த டேபிள் ரோஸ் வாசத்திற்கா பாம்பு வரும் என்று
ஆர்ப்பாட்டம் செய்து தாழம்பூவை தேடிக் கொண்டு வந்து நட்டு வைப்பதாக எடுத்த
உறுதி இன்று வரை நிறைவேறவில்லை. :P
புது வீடு சுற்று சுவருடன் கட்டியபிறகு நிறைய செடிகள் வைத்துக் கொள்ளலாம் என்று பாட்டி சமாதானப்படுத்தினார்.
நிழல்
தர இருக்கின்ற இரு மரங்கள் போக, ஒரே ஒரு முருங்கை மரம் அவசியமாக
தேவைப்பட்டது. முக்கிய காரணம் என்னவென்றால், சாம்பார், புளிக்குழம்பு,
கறிக்குழம்பு என்று அத்தனையிலும் எங்கள் வீட்டில் முருங்கைக்காய்
மிதக்கும். அருகில் மரம் உள்ளவர்களின் வீடுகளில் சென்று காய் வாங்கி வரும்
வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு முருங்கை மரம் இருந்தால் நல்லது என்று
நினைத்தேன். ஒரு நாள், எதிர் வீட்டில் பெரிதாகிக் கொண்டே சென்ற முருங்கை
மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். காய்கள் மட்டும் காசு கொடுத்து பெற்ற
கைகள், அதை விட மதிப்பு மிக்க முருங்கைக் கட்டையை இனாமாக பெற்று வந்தன. :)
வீட்டின் முன்னே இரண்டு மரங்கள் உட்பட காலி இடம் இருந்தாலும், பக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு
போடப்பட்டு இருந்த பேஸ்மென்ட் நடுவில் இருந்த இடத்தில் குழியைத்
தோண்டி,மூன்றடி உயரமான குச்சியை ஊன்றி வைத்த பொழுது, வீட்டில் குடியிருந்த
மாமி, பக்கத்திலிருந்த மண்ணை அவர் பங்கிற்கு பேசிக்கொண்டே தள்ளிவிட்டார். கடந்து செல்லும்
ஆடுமாடுகளிடமிருந்து தப்பித்து காய் வந்தால், உடல் நிலை சரியில்லாத என்
பாட்டி, அந்தக் காய்களை நறுக்கி குழம்பு வைத்து கொடுப்பார் என்று
வேடிக்கைப் பார்த்த என் தாத்தா கிண்டல் செய்தார்.
அது வரை எங்கெங்கோ ஊன்றி வைக்கப்பட்ட கட்டைகளை பார்த்த
அறிவின் படி, நட்டு வைத்த முருங்கைக் கட்டையின் நுனிகளில், பசு சாணத்தை
அப்பி வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி ஆராய்ச்சி செய்ததில் சில நாட்களிலேயே
நான்கைந்து இடங்களில் இலைகளை இளம் பச்சை நிறத்தில் நீட்டத் தொடங்கி
இருந்தது முருங்கை. ஆனாலும், எங்கள் கண்காணிப்பையும் மீறி, அதிகாலையில்
நடந்து போகும் ஆடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு தொடர்ந்து இரையாகிக் கொண்டே
வந்தது முருங்கையின் இலைகள். மரத்தை சுற்றி சாக்கு, கம்பு என்று ஏதேதோ
பாதுகாப்புக்கு வைத்தாலும், கூட்டணி அமைத்தாவது, இலைகள் வளர வளர
மொட்டையாக்கிக் கொண்டே இருந்தன ஆடுகள். அவ்வப்பொழுது ஏமாந்து கொண்டிருந்த
என் நிலைமையை பார்த்த அப்பா, எங்கிருந்தோ கருவேல முள்களை வெட்டி, வண்டியில்
வைத்துக் கொண்டு வந்து, முருங்கை கட்டையை சுற்றி ஆள் உயரத்திற்கு ஊன்றி
வைத்தார். அத்தோடு அடங்கிப் போயின ஆடுகள். எனக்கு முன்பாகவே தினந்தோறும்
தாத்தாவும் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரே வளர்ச்சி மயம் தான்.
வேகவேகமாக கிளைகளைப் பரப்பி பூக்கள் பூத்து காய்க்கத் தொடங்கிய பொழுது,
குடியிருந்த மாமி, தாத்தா என்று சகலரும் தங்களால் தான் அந்த முருங்கை மரம்
காய்க்கத் தொடங்கியதாக சொல்லியது என்னை சீண்டுவதற்காக இருந்திருக்கலாம்.
கசப்புத் தன்மையற்ற சுவையான முருங்கை இலை, மெலிதானத் தோலை
கொண்ட பருத்தக் காயின்
சுவையான உட்பகுதி என்று அபூர்வ ரகமாக இருந்தது அந்த முருங்கை. பூக்கின்ற
காய்கள் எல்லாம் காய்க்குமோ என்று சந்தேகம் கொள்ளும்படி, அத்தனை காய்கள்
தொங்கும். இலை உதிர் காலத்தில் ஒரு பக்கம் உதிர்ந்து கொண்டிருந்தாலும்,
சமையலுக்கு இல்லை என்றில்லாமல் ஏதேனும் ஒரு பக்கத்தில் சில காய்கள்
இருந்து
கொண்டே இருக்கும். சுற்றமும், நட்பும் ஆசையுடன் கேட்டு வாங்கிச் சென்று
சமைக்கும். தற்பொழுது இருக்கும் வீடு கட்டப்படுவதற்காக அந்த மரம் சில
வருடங்கள் முன்பு வெட்டப்பட்டுவிட்டது. :(
ஒரே ஒரு பிடிக்காத விஷயம் முருங்கை மரத்தில் என்னவென்றால், குளிர் காலத்தில்
புழுக்கள் அதிகமாக மரத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் மொத்தமாக வசிப்பதும்,
சமயங்களில் வீட்டிற்கு உள்ளே ஊர்வதும் மட்டுமே.
தற்பொழுது
வீட்டை சுற்றி வளர்ந்த வாழை, பப்பாளி, கொய்யா மரங்களுடன், புதிதாய்
வைக்கப்பட்ட நெல்லிக்காய், மருதாணியும் வளர்கின்றன. துணைக்கு பசலை,
முடக்கத்தான், துளசி, கற்றாழை போன்றவை மீதி இடத்தை நிறைத்து
பசுமையாக்கும் பணியை அழகாக செய்கின்றன. :)
சில மாதங்கள் முன்பு ஊன்றி வைக்கப்பட்ட வாழைக்கிழங்கு ஒரு அதிகாலையில் மண்ணை முட்டி மேலே தலையைக் காட்டிய நாளில் குடும்பமே குதூகலித்தோம். வாழைக்கன்று, மெதுமெதுவாக இலைகளின் எண்ணிக்கையை கூட்டி செல்வதை ஒவ்வொரு நாளும் ரசித்தோம். சுருட்டி இருக்கும் இலை விரிகின்ற பொழுது பளிச்சிடும் சற்றே வெளிறியப் பச்சை வண்ணத்தின் குளிர்ச்சியை கண்கள் வாங்கிக்கொள்ளும் நேரங்களில் மனமும் குளிர்ச்சியால் நிரம்பியது. மேலே இலைகளின் எண்ணிக்கைக் கூடக்கூட இளம்பச்சையிலிருந்து கரும்பச்சை பச்சை வரை பச்சையின் அனைத்து நிறப்பிரிவுகளுடன், நேர்த்தியான கோடுகளால் நிறைந்த வாழையிலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பது தினசரி பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மரத்தை சுற்றி நான்கைந்து கன்றுகள் மரத்திற்கு பாதுகாப்பாக(?!) வளர ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு நாள் கிழக்கு திசையில் குலை தள்ளியிருந்தது. அத்தனைப் பெரிய வாழைப்பூவை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் விறுவிறுவென தானாகவே ஒவ்வொரு அடுக்கின் தோலும் உரிந்து கீழே விழே விழ, ஒவ்வொரு பூவும் காயாக மாறுவதை வெளியில் தெரியும் மாற்றத்தை வைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. வாழைப்பூவை சமையலுக்காக சுத்தம் செய்யும் பொழுது நீக்கும், நீண்ட நரம்பு உட்பட மெல்வதற்கு கடினமான இரண்டு பகுதிகளையும் மரமே வெளியே தள்ளி, தன் காய்களின் உருவத்தை பெரிது படுத்திக் கொள்ளும் அழகை தினமும் பார்ப்பேன்.
சில மாதங்கள் முன்பு ஊன்றி வைக்கப்பட்ட வாழைக்கிழங்கு ஒரு அதிகாலையில் மண்ணை முட்டி மேலே தலையைக் காட்டிய நாளில் குடும்பமே குதூகலித்தோம். வாழைக்கன்று, மெதுமெதுவாக இலைகளின் எண்ணிக்கையை கூட்டி செல்வதை ஒவ்வொரு நாளும் ரசித்தோம். சுருட்டி இருக்கும் இலை விரிகின்ற பொழுது பளிச்சிடும் சற்றே வெளிறியப் பச்சை வண்ணத்தின் குளிர்ச்சியை கண்கள் வாங்கிக்கொள்ளும் நேரங்களில் மனமும் குளிர்ச்சியால் நிரம்பியது. மேலே இலைகளின் எண்ணிக்கைக் கூடக்கூட இளம்பச்சையிலிருந்து கரும்பச்சை பச்சை வரை பச்சையின் அனைத்து நிறப்பிரிவுகளுடன், நேர்த்தியான கோடுகளால் நிறைந்த வாழையிலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பது தினசரி பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மரத்தை சுற்றி நான்கைந்து கன்றுகள் மரத்திற்கு பாதுகாப்பாக(?!) வளர ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு நாள் கிழக்கு திசையில் குலை தள்ளியிருந்தது. அத்தனைப் பெரிய வாழைப்பூவை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் விறுவிறுவென தானாகவே ஒவ்வொரு அடுக்கின் தோலும் உரிந்து கீழே விழே விழ, ஒவ்வொரு பூவும் காயாக மாறுவதை வெளியில் தெரியும் மாற்றத்தை வைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. வாழைப்பூவை சமையலுக்காக சுத்தம் செய்யும் பொழுது நீக்கும், நீண்ட நரம்பு உட்பட மெல்வதற்கு கடினமான இரண்டு பகுதிகளையும் மரமே வெளியே தள்ளி, தன் காய்களின் உருவத்தை பெரிது படுத்திக் கொள்ளும் அழகை தினமும் பார்ப்பேன்.
சக மனிதர்களிடம் எழும் கோபம்,
வருத்தம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்த, உயிர்ப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் தாவரங்களே என் தேர்வு.
தன் வண்ணம், அசைவு, வளர்ச்சி, ஸ்பரிசம் மூலமாக எளிதில் தேற்றி, அமைதி, மகிழ்ச்சி போன்ற
நேர்மறை எண்ணங்களை எத்தனையோ முறை புகுத்தியிருக்கிறது.
தான் பூத்து, நம் மனதை பூக்க செய்யும் ஒவ்வொரு செடியும் நமக்கான இலவச மருத்துவர்...!
(குங்குமம் தோழி : ஆகஸ்ட் 1- 15)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

