வியாழன், 8 ஜனவரி, 2015

கயல்

வழக்கம் போல ரசிக்கும்படியான நகைச்சுவை முதற்பாதியில் தாராளமாக அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. ஊர் சுற்றி ரசிப்பதில் கிடைப்பவற்றை எளிய மக்களுக்கும் புரியும்படி விளக்கும் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. இது தான் க்ளைமாக்ஸ் என முடிவு செய்துவிட்டு வலிய நகர்த்திக் கொண்டு போவதை போல இருந்தது கயல் படத்தின் பிற்பாதி. பிரபு சாலமனின் முந்தைய இரண்டு படங்களைப் போல காதலர்கள் இறந்தோ, பிரிந்தோ போகவில்லை. சேது படத்திற்கு பிறகே (என் அறிவுக்கு எட்டி), துயர முடிவை வரவேற்க நம் மக்கள் பழகிக் கொண்டார்கள். அத்தகைய படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்ததாக நினைவு. ஒரு வேளை இந்தப் படத்திலும் அப்படி ஒரு முடிவு இருந்திருந்தால், சகல தரப்பினரும் உச்சி முகர்ந்து பரவலாக கொண்டாடி இருப்பார்களோ தெரியவில்லை. 

பெற்றோரை இழந்த சிறு குழந்தையை, வளர்க்கும் அந்தப் பெண்மணி, எந்த தைரியத்தில் கயலை கன்னியாகுமரி நோக்கி அனுப்பி வைக்கிறாள் என தெரியவில்லை? மனதிற்கு பிடித்த ஒரே ஒரு பார்வை, ஒற்றை வாக்கியம் மட்டுமே உதிர்த்தவனை, அடுத்த நொடியில் இருந்து முழுமையாக மனதில் சுமப்பதை ஏற்க முடியவில்லை. பதின்பருவத்தில் இது சகஜமாக இருக்கலாம் என யோசித்தால் மட்டுமே  விட்டுவிடலாம். ஆரோன் & சாக்ரடீஸ்க்கு, விளையாட்டுடன் கூடிய சாமர்த்தியம், அறிவு, தெளிவு என அத்தனையும் குவிந்திருப்பதாக முதல் சில காட்சிகளில் நம் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். இதைப் பயன்படுத்தி அந்த பிற்போக்கு கும்பலிடம் இருந்து எளிதாக தப்பித்து, வேறு மாதிரி பயணப்பட்டிருக்கலாம் கதை என தோன்றுகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவில், படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் அழகான பிரதேசம் குளிர்ச்சியூட்டி மகிழ்விக்கின்றது. இறுதியில் வரும் சுனாமி காட்சி அரட்டுகிறது. இத்தனை பரிதாபமான, ஏமாளியான, எதையும் யோசிக்காமல் செயல்படுத்துகிற கயல் மீது, அதீத எதிர்பார்ப்புடன் போனதாலோ என்னவோ அனுதாபம் மட்டுமே வருகிறது. 

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

டிசம்பர் ஆறு - இரவு ஒரு மணியிலிருந்து காலை வரை

கடந்த டிசம்பர் ஆறு, இரவு ஒரு மணியிலிருந்து காலை வரை மருத்துவமனையில் இருந்த சில மணி நேரங்கள்... 

பகல் நேரத்தைப் போலவே உரையாடியபடி சென்றனர் மருத்துவமனை ஊழியர்கள். நூற்றுக்கணக்கான பணியாளர்கள் எந்த சுணக்கமுமின்றி அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர். வெளிநோயாளிகள் இல்லாததால் சற்று வெறிச்சிட்டிருந்தது மருத்துவமனை. பீ.பீ. குளம், வலது புற திருப்பத்திலிருந்து PTR வீடு வரையிலான அந்த சாலை முழுவதும் சீரான வெளிச்சத்துடன், மாலைப் பொழுதைப் போலவே காட்சியளித்தது.  சாலையின் எதிர்புறத்தில் இருந்த வடமலையான் மருத்துவமனையின் இன்னொரு பிரிவின் வாசலின் முன்னே  இருந்த சின்னக்கடையில் ஓரிரு மணி நேரங்களுக்கு ஒரு முறை காபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தேன். உள்ளே தொடர்ச்சியாக அமர்ந்திருந்த இருக்கை, சௌகர்யமாக இருந்தாலும், எழுந்து நிற்பதும், நடப்பதும், அந்த நேரத்தில் பெரிய இளைப்பாறலாக இருந்தது. மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்து காம்பௌண்ட் சுவர் அருகே நின்ற பொழுது உள்ளே செல்லும் பனியின் வேகம், நர்ஸிடம் வாங்கிய பஞ்சை காதில் அடைத்துக் கொள்ள செய்தது. 

இரவை பெரிய அளவில் துளையிட்டு மிதமான வெளிச்சத்தை மின் விளக்குகள் அந்தப் பகுதி முழுவதும் பரப்பி இருந்தன. முன்னால் நின்றிருந்த காவலாளிகள் தங்களுக்குள் ஏதோ தகவலைப் பகிர்ந்த நிமிடத்தில் அவரவர் இடத்திற்கு திரும்பி இருந்தனர். அருகில் இருந்த ATM காவலாளி பத்தடிகளுக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அவரது தூக்கத்தை தொலைப்பதற்காக இருக்கலாம். கூர்க்காக்கள் தவிர்க்கின்ற சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். என்னுடைய ஆச்சரியம் இரவில் சரியான தூக்கம் இல்லாதது தான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம் என கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு பல்வேறு பட்ட வயதினர் வெகு சாதாரணமாக தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்ததை பார்த்ததும், இவர்களின் உடல்வாகு எப்படி ஏற்றுக்கொள்கிறது என்ற சந்தேகம் எழுந்தது.
காபி குடிக்கும் இடத்தில், ஒரு முறை, டீ குடித்துக் கொண்டிருந்தவர் மிகச்சிறிய ஒலியில், மொபைலில் கேட்டுக்கொண்டிருந்த பிடித்தப் பாடலை, ரசிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. மஞ்சள் விளக்கின் ஒளியில் தெரிந்த மரங்களின் அழகோ, வானத்தில் மிதந்த நிலாவோ, கை, முகம் என உள்ளே ஊடுருவிக்கொண்டிருந்த பனியோ வசீகரிக்கவே இல்லை. சால்வையை இறுக்கப் போர்த்திக்கொண்டு, பகலில் பரபரப்பாக இருக்கும் அந்த சாலையின் பேரமைதியுடன் நின்று கொண்டிருந்தேன், சில மணி நேரங்களுக்கு முன்பு கடந்த நிமிடங்கள் உள்ளே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது. 

# இப்போ... யாவும்; யாவரும் நலம். :)  

ஞாயிறு, 23 நவம்பர், 2014

மழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம் (மாங்குளம்)

நேற்று இரவும் பெய்த மழை காற்றிலும் தக்க வைத்திருந்த குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டே மாட்டுத்தாவணியிலிருந்து கிளம்பினோம். மணி ஏழைத் தொட்டிருந்தது.தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் பயணிப்பது வழக்கம் போல பிடித்தமான விஷயம். வலது புறத்தில் மனம் போல விரையும் வண்டிகள், இடது பக்கம் பசுமையின் ஊடே சில ஊர்களின் நுழைவுப் பாதை, அபூர்வமாக தென்படும் குட்டிக் கோவில்கள், சில இடங்களில் தேநீர்க்கடைகள்...... இறுக்கமாக ஒட்டிக் கொண்டது உற்சாகம். வெள்ளை நிறக்கோடு பளீரிட்டு முன்னே இழுக்க, கோட்டில் ஏற்றி செல்வதும், சில நொடிகள் கோட்டுக்குள்ளே செல்வதுமாக மாறி மாறி தொடர்ந்தது. இது மாதிரி சாலையில் சற்று கூடுதல் வேகத்தில் சீராக பயணித்ததில், பெட்ரோல் மிச்சம் பிடித்துவிட்டோம் என அல்ப சந்தோசம் ஏற்படும். :) 

டோல் கேட் வருவதற்கு முன்னால் உள்ள வளைவில் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. கிட்டத்தட்ட 10 கிமீ க்கு அப்பால், ஏறிச் சென்ற ஒரு பாலத்தின் இடது புறம் சென்று ஓரத்தில் நின்றோம்.  தனித்தனியாக வந்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதன் பின் அங்கிருந்து இடது புற சாலையில் திரும்பினோம். மழையின் கனிவால் சூரியனும் இதமாய் ஸ்பரிசித்தது. முன்னே விரிந்த சாலையில், இரண்டு பக்கங்களும் பசுமையான வயல்வெளி மலைப் பின்னணியில் கம்பளம் விரித்து வரவேற்றது. எதிரில் வண்டி எதுவும் வராமல் இருக்க  எளிதாக முன்னேறி சென்று கொண்டே இருந்தோம். 3,4 கி மீ க்கு பிறகு வலதுபுறம் திரும்பினோம். உள்ளே நீண்ட மண் சாலை தண்ணீர்த் தேங்கிய ஏகப்பட்ட பள்ளங்களுடன் அழைத்தது. வேகத்தைக் குறைத்து, மெது மெதுவாக சென்றோம். இடது புறத்தில் தெரிந்த நிறைந்த கண்மாய் கண்களை நிறைத்தது. வழி எங்கும் மரங்கள், கள்ளழகர்க்கு குடைப்பிடிப்பது போல குடைப்பிடிகின்றனவோ என தோன்றியது. தண்ணீரையும், மரம், செடி கொடிகளையும் ரசித்துக் கொண்டே, பள்ளங்களுக்கு ஏற்ப வேகத்தையும் மிக மெதுவாக சென்றதில், மிச்சம் பிடித்த பெட்ரோலை சமன் செய்திருப்போம். :)  

கிட்டத்தட்ட 3 கிமீ கழித்து பிரிந்த இரண்டு சாலைகளில், இடது புறம் திரும்பி ஒரு கோவிலின் முன் கிடைத்த இடங்களில் வண்டிகளை ஒழுங்காக நிறுத்தி விட்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு இடத்தில் இருந்து பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும் மலை, கொடுப்பது என்னவோ ஒரே விதமான ஆனந்தத்தை மட்டுமே. ஊருக்குள் சில தெருக்களைக் கடந்து, சிறு வெளியையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டே நடந்த சில நிமிடங்களில் செடிகள் சூழ பிரம்மாண்டமாக நின்ற மலையில் கால் வைத்தோம்................ மழைக்காலத்தில் பாறையின் அழகு கூடி, குளிர்ச்சி ஏறி இருந்த மலை எங்கள் பாதங்களை இழுத்து ஏற செய்தது. 

மலையில், சுக்குநாறி என்ற ஒரு விதமான புல் காணும் இடத்தில் எல்லாம் முளைத்து இருந்தது. ஒன்றை பிய்த்து முகர்ந்தால் சுக்கும், எலுமிச்சையும் கலந்த அற்புத மணம். நடக்கும் இடங்களிலும் முளைத்த புற்களில், எங்களின் பாதங்கள் அழுத்தியதால் உருவான விஷேச மணம் பயணம் முழுவதும் உடன் இருந்தது. இது தான் இப்படி தான் என்றில்லாமல், பெரிதும், சிறிதுமாக, உனக்கென்ன, எனக்கென்ன என்பது போல இருந்த குட்டி குட்டிப் பாறைகள், எங்கே, எங்க மேல ஏறிப்பாருங்க என்பது போல சவால் விடும் சரிந்த பாறைகள்  பாதையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருந்தன. பாறைகளின் குணமும், நிறமும் இந்த ஒன்றரை வருட பசுமை நடையில், பாதங்களுக்கு ஓரளவு புரிபட ஆரம்பித்திருக்கிறது. மலையைக் கண்டு பிரமித்தாலும், நடக்கும் பொழுது மலைக்காமல் ஏறி இறங்க முடிகின்ற அளவு மலையுடன் நட்பு வலுவடைந்திருக்கிறது. :) 

நடந்து, ஏறி... ஏறி, நடந்து என வந்து சேர்கிறது முதல் படுகை. இங்கு ஐந்து குகைத்தளங்கள் உள்ளன. முதலில் சென்ற தளத்தில் காடி வெட்டப்பட்டு மழை நீர் வடி விளிம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தனை மழை பெய்தாலும், உள்ளே இருந்த சமண துறவிகள் பாதுகாப்பாக இருக்க எத்தனை அருமையான ஏற்பாடு செய்துள்ளனர். கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் ஆறு தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. 

கணிய் நந்தஅ ஸிரிய் இ குல் அன்கே 
தம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன் 
கடல்அன் வழுத்திப் கொட்டு பித்தஅ பளி இய் . என்பது முதல் கல்வெட்டில் கூறப்படும் செய்தி. நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு இப்பள்ளியையும், கற்படுகைகளையும் வெட்டிக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. - இது போன்ற பல தகவல்களை பேராசிரியர் கண்ணன் பகிர்ந்து கொண்டார். 

திறந்த வெளி வகுப்பறை - பசுமை நடையின் ஒவ்வொரு நடையிலும் மலைகளில் அமர்ந்தபடி, ஆகாயம், சூரியன், சற்று தொலைவில் நீர்நிலை, மரம் செடிகள் பார்க்க, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை சுவாரசியமாக காதில் கேட்க வாழ்நாள் முழுவதும் உடன் வரும் பாடமாக மனதில் பதிகிறது. வகுப்பு முடிந்து கீழே இறங்க ஆரம்பிக்கையில் கூடுதல் கவனத்துடன் நடக்க செய்தன பாறைகள். ஆங்கங்கே பதித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், நடையை எளிதாக்கவும், ஓரத்தில் நின்றபடியே பாதுக்காப்பாக பிடித்துக் கொண்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரசிக்கவும் உதவின. . வாட்டர் வாஷ் செய்தது போல கூடுதலாக பளிச்சிட்ட இயற்கையை சலிக்க சலிக்க கண்களுக்கு விருந்தாக்கி இறங்கினோம்.