புதன், 10 ஏப்ரல், 2013

சின்னசாமி ஐயா!




சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ராம் மாற்றலானதால், நான்கு வருடங்கள் திண்டுக்கல்லில் இருந்தோம். திண்டுக்கல் உழவர் சந்தை ஓரளவு சுமாரானப் பரப்பளவில் அமைந்து இருக்கும். மிக எளிதாகக் குறைவான நேரத்திலேயே அனைத்துக் கடைகளையும் ஒரு சுற்று சுற்றி விடலாம். பல விதமான, காய்கறிகள், பழங்களுக்கு மத்தியில், சப்போட்டாப் பழங்கள் மட்டும் வைத்துக் கொண்டு இருப்பார் சுமார் 65 வயது மதிக்கத்தக்கப் பெரியவர் ஒருவர். சப்போட்டாப் பழங்கள் அளவில் சற்றுப் பெரியதாகவும், தித்திப்பு கூடுதலாகவும் இருப்பதால், வழக்கமாக அவரிடமே வாங்குவோம்.

நான், செல்லாத நாட்களில், ராமிடம்,
 'பாப்பா வரலையா, நல்லா இருக்குல்ல', என்று விசாரித்ததாக இவர் என்னிடம் சொல்வார்.
வருண் வீட்டில் தொலைக்காட்சியை விட்டுப் பிரிந்து வர மறுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில், காய்கறி வாங்கப் போகும் பொழுது, எங்கள் இருவரையும் பார்த்து,
 ' பேரன் எங்க? ஏன் கூட்டிட்டு வரல', என்பதோடு  'கண்ணுக்குள்ளேயே இருக்கான், அடுத்த வாரம் வர்றப்போ கூட்டிட்டு வாங்க', என்று உரிமையோடு சொல்வார்.

ஒருமுறை  என்னிடம், 'சார் எவ்ளோ எளிமையா இருக்கார் பாரும்மா, இப்படி எல்லாம் ஆளைப் பார்க்கிறது கஷ்டம்', என்றதும்,

'சார் அங்க வேலை தான் பார்க்கிறார், ஆனா, அந்த காலேஜ் அவருது இல்லை', என்றேன் வம்புக்கு.

'அப்படி சொல்லாதம்மா, நெறைய பேரை நான் பார்த்திருக்கேன், சரியாதான் சொல்றேன் சார் பத்தி', என்று ராம்க்கு ஆதரவாகப் பேசுவார். நான் திரும்பி,
 'காலேஜ் பக்கத்தில தான் இவர் ஊர், தனியா போய் எதுவும் கவனிப்பு நடந்திருக்குமோ',
என்று ராமை சீண்டுவேன்.

எத்தனையோ பேர்களிடம், காய்கறி வாங்கினாலும், எத்தனையோ பேர் தினமும் அங்கு வந்து போனாலும், எங்களுக்கும், அன்பை மட்டுமே காட்டத்தெரிந்த அவருக்கும் ஒரு நல்ல அலைவரிசை அமைந்திருந்தது.

'எம்மா, ஒரு நாள் எல்லாரும் வாங்க, எங்க கிராமத்துக்கு, எங்க தோப்புக்கு கூட்டிட்டு போறேன். வீட்டில அம்மா, நல்லா சமைக்கும். சாப்பிட்டு, சாய்ங்காலம் போங்க', என்றார்.

பல வாரங்கள் கடந்த நிலையில், ஒரு விடுமுறைக்குப் பின், வழக்கம் போல, வாரத்திற்கு ஒரு முறை சந்தைக்கு சென்று கொண்டிருந்தோம். தொடர்ச்சியாக இரண்டாவது வாரமும், உழவர் சந்தையில் அவர் கடையில் வேறு ஒருவர் இருந்ததைப்  பார்த்து, சின்னசாமி ஐயா எங்கே என்று கேட்டோம். அவர் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றார் மிக சாதாரணமாக. தூக்கி வாரிப் போட்டது, எங்களுக்கு. அழைத்ததிற்கு ஒரு நாளாவது போய், அவரின் சப்போட்டா மரங்கள், தென்னை மரங்கள், நிறைந்தத் தோப்பை பார்த்திருக்கலாமோ, தவற விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு இப்பொழுது வரை, இருந்து கொண்டு தான் இருக்கிறது. விடுமுறை நாளில் ஓய்வெடுப்பதிலே நேரம் சென்று விடுவதால், எங்களால் போக முடியவில்லை என்பதை விடவும், நியாயமானக் காரணம் சோம்பேறித்தனமே.

மிகக் குறைவான எண்ணெயில், மிகப்பெரிய அறைக்குத் தேவையான வெளிச்சத்தை தரும் விளக்கு போல, மிகக் குறைவான காலங்களில், விஸ்தாரமான அன்பை எங்களுக்குள் விட்டு சென்றுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடை பெற்ற என் தம்பியின் திருமணத்திற்கு, மூன்று பேருந்துகள் ஏறி இறங்கி வந்து கலந்து கொண்டார். மதுரை வரும் பொழுது, மண்டபம் கண்டுபிடிக்க வசதியாக இருக்குமே என்று பகிர்ந்த அவரின் அலைபேசி எண்ணைப், பாதுகாத்து வருகிறேன். C, வரிசையில் உள்ள ஏதாவது ஒரு பெயரை அழைக்க மொபைலில் தேடும் நேரங்களில் எல்லாம், சின்னசாமி என்ற பெயரைப் பார்க்கிறேன்.அந்த சில நொடிகளில் அவரின் வாஞ்சையான முகம் வந்துப் போகும்.

மாற்றும், எந்த ஒரு புதிய அலைபேசியிலும் அவரின் எண்ணை சேமித்துக் கொள்கிறேன். நான் இருக்கிற காலம் வரை, அவரின் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாத அன்பிற்கு அளிக்கப்படும் மரியாதையின் அடையாளமாக, எனக்குத் தெரிந்த முறையில், அவரின் பெயருடன் ஆன எண்ணைப், பாதுகாத்து வருகிறேன்.

நிரந்தரப் பிரிவு ஏற்படப் போகும் ஒரு சில நாட்களுக்கு முன்பாக, காலம், ஒரு சின்னக் குறிப்பை கொடுத்திருந்திருக்கலாம்.......
.....................

இப்பொழுது என்னவோ சப்போட்டப் பழங்களைப் பார்க்கும் நேரங்களில், வாங்கவோ, சாப்பிடவோ தோன்றுவதில்லை.


5 கருத்துகள்:

Mala சொன்னது…

மிகக் குறைவான எண்ணெயில், மிகப்பெரிய அறைக்குத் தேவையான வெளிச்சத்தை தரும் விளக்கு போல, மிகக் குறைவான காலங்களில், விஸ்தாரமான அன்பை எங்களுக்குள் விட்டு சென்றுள்ளார்.- அருமை தீபா !

சிலசமயங்களில் இந்த மாதிரி தவிப்பை நாம் குற்ற உணர்வுடன் எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது ..என்ன சமாதானம் சொன்னலும்
...அது சரியாவதில்லை - Isha Mala.

Mala சொன்னது…

மிகக் குறைவான எண்ணெயில், மிகப்பெரிய அறைக்குத் தேவையான வெளிச்சத்தை தரும் விளக்கு போல, மிகக் குறைவான காலங்களில், விஸ்தாரமான அன்பை எங்களுக்குள் விட்டு சென்றுள்ளார்.- அருமை தீபா !

சில சமயங்களில் நாம் இதுபோன்றதொரு குற்ற உணர்வை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது ..என்ன சமாதானம் சொன்னாலும் செய்தாலும் அது ஈடாவதில்லை - Isha Mala.

Rathnavel Natarajan சொன்னது…

எத்தனையோ பேர்களிடம், காய்கறி வாங்கினாலும், எத்தனையோ பேர் தினமும் அங்கு வந்து போனாலும், எங்களுக்கும், அன்பை மட்டுமே காட்டத்தெரிந்த அவருக்கும் ஒரு நல்ல அலைவரிசை அமைந்திருந்தது.

அருமையான எழுத்து நடை.
அருமையான பதிவு. வாழ்த்துகள்




.

ராமலக்ஷ்மி சொன்னது…

நெகிழ்வு. எளிய மனிதர்கள் காட்டும் எதிர்பார்ப்பில்லாத அன்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

கே.முருகபூபதி இலக்கியவட்டம் சொன்னது…

.
அன்புசால் பெருந்தகையீர், வணக்கம்.
ஒரு நாவலூக்குத் தேவையான எழுத்து நடையும்,அதற்குரிய செய்தி தங்களின் படைப்புக்களில் இருப்பதாக எனக்குத் தெரிகின்றது.
http://kmurugaboopathy.blogspot.in/