திங்கள், 14 அக்டோபர், 2013

1 1/4 மணி நேரப்பயணம்!

நேற்று காலை ஒரு முக்கியமான விழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் செல்லவேண்டி இருந்தது. பண்டிக்கைக்காலமாக இருப்பதால், நிரம்பி வழியும் பஸ், ரயிலில் பயணிக்க மலைப்பாக இருந்தது. 55 கிலோமீட்டர் தூரம். விரும்பியே இரு சக்கர வாகனத்தை கிளப்பினேன். வாங்கிக் கொள்ளவேண்டிய சில பொருட்களை பெரியார் பேருந்து நிலையம் அருகிலேயே வாங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்த பொழுது மணி காலை பத்து. என் மேல் சற்று கூடுதல் கருணை பார்வை உள்ள இயற்கை, அதிகாலை ஆறுமணிக்கே உரிய வெளிச்சத்தையும், குளிர்ச்சியையும் வழி எங்கும் நிரப்பி இருந்தது. திருப்பரங்குன்றம் அருகில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, மிதமான வேகத்தில் தொடர்ந்தேன்.

திருநகர் தாண்டியபின், வீடுகள், கடைகளின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே செல்லும். பின், திருமங்கலத்தில் மட்டும் நெருக்கமாக இருக்கும்.

இந்த டோல் கேட் ஐ, பாராட்டியே ஆகணும். கப்பம் எல்லாம் கட்டாமலேயே, இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கின்றன. (இந்த பயம் இருக்கட்டும்!  :P )

நான்கு வழிச்சாலையில், நடுவில் வம்படியாக நட்டு வைக்கப்பட்டதில் ஆங்காங்கே பூத்திருந்த அரளிப் பூக்களை விட, வழியில் எருக்கம் பூக்களும், ஆவாரம் பூக்களும் கண்களுக்கு இதம் அளித்தன.


விருதுநகர் நோக்கி செல்லும் சாலையின் ஓரங்களில் ஆரம்பத்தில் இருபுறங்களிலும் மரங்களும் அதன் பிறகு வெட்ட வெளியுமாக தொடர்ந்து சென்றது பாதை. அபூர்வமாக பசுமை தொடர்ச்சியாக கண்ணை நிறைக்க, மற்றபடி காலி இடமுமாக இருந்தது. சீமைக்கருவேல மரங்கள் தான் அதிகமாக தட்டுப்பட்டன.


மின்சாரத்தை எடுத்து செல்லும் உயர் மின் அழுத்த கோபுரங்கள், தொலைவில் இருந்து பார்ப்பதற்கு ராட்சத பொம்மைகள் இடுப்பில் கைகளை  வைத்தபடி இருப்பது போல தெரிந்தன. 
 

நீண்டு கொண்டே செல்லும் சாலையின் எதிரே நோக்கினால், முடிவாக வானம் உள்ளது போல தெரிந்தது. அதிக வெள்ளை நிறத்தில் குறைவான நீலம் கலந்து வேக வேகமாக அடிக்கப்பட்ட வண்ணப்படத்தை விட, வலது புறத்தில் நீலம் அதிகமாக, வெள்ளை குறைவாகவும் தெரிந்த வானம் வசீகரித்தது.

நான்கு வழிச்சாலைகளின் ஓரத்தில் இரண்டரை அடி அகலத்தில் வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோட்டிற்குள் வண்டியை நிதானமான வேகத்தில், முந்தி செல்லக்கூட யாருமில்லாமல், ஆக்சிலேட்டரை மாற்றாமல், பிரேக் பிடிக்க வேண்டிய அவசியமுமின்றி, தொடர்ச்சியாக சற்று பலமாக உடலின் பல பாகங்களின் வழியாகவும் பேசிக்கொண்டிருந்த காற்றுடன் மட்டும் பயணிப்பது சுகானுபவம்.

சில இடங்களில் கோட்டின் மேலேயே எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடிகிறது என்று சென்று பார்த்து, அப்படி செல்ல முடிந்த தூரத்தை முந்தைய பதிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கி மகிழ்வது என்று சிறு சிறு விளையாட்டுடன் தொடர்ந்தது பயணம்.


மனிதர்கள் தான் குறைந்து போனார்கள் என்று, ஒவ்வொரு ஊரின் உள்ளே நுழைகையிலும், வெளியேறுகையிலும் வரவேற்று, நன்றி சொல்லி வழி அனுப்பும் பலகைகள், ஊரின் எல்லையை அறிந்து கொள்ள உதவுவதற்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும். :)


விரும்பிய நேரங்களில் சர்வீஸ் ரோட் ஐ பயன்படுத்தியும், மற்றபடி இரண்டரை அடி சாலையிலும் தொடர்ந்தது பயணம்.
சரியாக ஒன்னேகால் மணி நேரத்தில், விருதுநகர் உள்ளே நுழைந்தாயிற்று!  

மிகக் குறைவான வாகனங்கள் பயணிக்கும் நேரத்தில், விரைந்து செல்லும் வாகனங்களை கொஞ்சம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே, இதமான வானிலையை அனுபவித்துக் கொண்டே, மனம் போல ஓட்டிச் செல்ல ஒரு வாகனத்தில் ரசித்து பயணிக்கையில் கிடைக்கும் புத்துணர்விற்கான ஆயுள் சற்று கூடுதல்! :)




5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த சந்தோசமே தனி... வாழ்த்துக்கள்...

thambu சொன்னது…

சரியான திட்டமிடுதல் ,மிதமான வானிலை, இது உங்களை பயணத்தை ரசிக்க வைத்தது . இவைகளுடன் உடனழைத்துச் செல்லும் தெளிவான உரை பயணத்தை எங்களையும் ரசிக்க வைத்தது. நான்கு வழிச் சாலைக்கு முன்பு பாதை இதை விட ரம்மியமானது. பல நினைவுகள்,சில கனவுகள் , நன்றி தீபா :)

வேல்முருகன் சொன்னது…

பல முறை விருதுநகரில் இருந்து மதுரைக்கு பைக்கில் பயணம் செய்துள்ளேன் ஆனாலும் இவ்வளவு அழகாக பயணத்தை ரசித்தது இல்லை கவிதை போல் அழகான பதிவு ஓவ்வொன்றையும் கவனித்து எழுதியுள்ளீர்கள்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

ஆஹா இரசித்தேன் பயணத்தை தீபாவோடு. அழகிய வர்ணிப்பு. பைக்கில் செல்கிற காட்சி இன்னும் அழகு. கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா ஸ்டையிலா. சூப்பர்.

Rathnavel Natarajan சொன்னது…

என் மேல் சற்று கூடுதல் கருணை பார்வை உள்ள இயற்கை, அதிகாலை ஆறுமணிக்கே உரிய வெளிச்சத்தையும், குளிர்ச்சியையும் வழி எங்கும் நிரப்பி இருந்தது. = இந்த டோல் கேட் ஐ, பாராட்டியே ஆகணும். கப்பம் எல்லாம் கட்டாமலேயே, இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கின்றன. (இந்த பயம் இருக்கட்டும்! ) - இவர்களிடமெல்லாம் சொல்லியிருக்கிறேன் தீபா நீங்கள் வருகிறீர்கள் என்று = சில இடங்களில் கோட்டின் மேலேயே எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடிகிறது என்று சென்று பார்த்து, அப்படி செல்ல முடிந்த தூரத்தை முந்தைய பதிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கி மகிழ்வது என்று சிறு சிறு விளையாட்டுடன் தொடர்ந்தது பயணம். = அற்புதமான பதிவு. அருமையான ரசனை. சுற்றுச் சூழலை உள்வாங்கும் திறமை அருமை. நிறைய எழுதுங்கள். இந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். எங்கள் அருமை மகள் Deepa Nagarani க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.