தீபாவளிக்கு
ஒரு வாரம் முன்பே இது வரை காரணம் அறியப்படாமல் உள்ள முன்னங்காலில் ஏற்பட்ட
ரத்தக்கட்டிற்கு தினமும் இரண்டு முறை வெந்நீர் ஒத்தடம் வைத்ததில், வலி
கொஞ்சம் குறைந்து, கட்டியின் அளவும் சற்று குறைந்தது போல இருக்கவே,
விரைவில் குணமாகும் ஆவலில் மூன்றாவது நாளில், நான்குமுறை ஒத்தடம் கொடுக்க
திட்டமிட்டேன். நான்காவது முறை பொறுக்கும் சூட்டில் சிறிய துணியில்
வெந்நீரை வைத்து ஒற்றி ஒற்றி எடுத்துக் கொண்டே இருக்கும் பொழுதே கூடுதலாக
அழுத்தம் கொடுத்து அழுத்தினேன். உள்ளே இருக்கும் ரத்தக்கட்டு கரைந்து
மாயமாகும் என்று பல்லைக்கடித்துக் கொண்டு அழுத்தியதில், ஐம்பது காசு
அளவிற்கு உஷ்ணம் தாங்காமல் உரிந்து வந்தது தோலின் மேல் பகுதி. போட்ட
சத்தத்தில் சில்வெரெக்ஸ் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதை மெதுவாக நானே
சுட்டுக் கொண்ட புண்ணில் தடவும் பொழுது எல்லாம் நாங்க சாதாரண காயமில்லை
தீக்காயம் என்று உதார் விட்டுக்கொண்டு வந்த எரிச்சல், இரண்டு நாள் இருந்தே
மறைந்தது. ஐந்தாம் நாள் புண் ஆறி விட்டது. ஒன்று(ரத்தக் கட்டு) வெறும் வலி, மற்றொன்று(தீக்காயம்)
எரிச்சல். எரிச்சலை வலி என்று சொல்லலாமா? அல்லது வலியை தான் எரிச்சல்
என்று சொல்வது சரியா என்றெல்லாம் தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தால்,
இன்னும் இரண்டு நாளில் தீபாவளி.
கொஞ்சம் கால்களுக்கு ஓய்வு கொடுக்க விருதுநகர்க்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என்று குடும்பமே கேட்டுக் கொண்டதால், திருமங்கலம் வரை உள்ளூர் பஸ், அங்கிருந்து விருதுநகர் க்கு இன்னொரு பேருந்து, உட்கார்ந்து செல்வதில் பிரச்சனை ஏற்படாவண்ணம், டெர்மினஸ் சென்று ஏறி, பண்டிகைக்கு முடிந்த அளவு ஒத்தாசை செய்து, கொண்டாடிவிட்டு தீபாவளிக்கு மறுநாள் விருதுநகரில் இருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
பயணங்களில் அரசு பேருந்தை தேர்வு செய்யக் காரணம், ஏதேனும்
ஆகிவிட்டால் நஷ்ட ஈடு கிடைக்கும் என்பதற்காக அல்ல, பலரும் நேரத்தை
மிச்சப்படுத்தி தங்கள் சாதனை கோட்டை தொட்டு, பதக்கம் பெறப் போவதற்காக
தனியார் பேருந்துகளையே அதிகம் பயணிக்க பயன்படுத்துவதால், அரசு
பேருந்துகளில் காற்றாட உட்கார்ந்து போகலாம். பத்து, இருபது நிமிடங்கள்
தாமதமாக சென்றாலும் குறைவான அலுப்பை மட்டுமே பெற்று கொண்டு இறங்கலாம்
என்பதாலேயே அரசு பேருந்துகளே முதல் தேர்வாக இருக்கும்.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த பேருந்தில் ஏறிய பிறகு
பதினைந்தாவது நிமிடத்தில் வண்டி புறப்பட்டது. வலது புறத்தில் ஓட்டுனரின்
இருக்கைக்குப் பின்னால், இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தோம். அதற்கு
பின்னால், நான்கு வரிசைகள் தாண்டி, நேரடியாக டாஸ்மாக்கில் இருந்து வந்து
அமர்ந்து இருந்தனர் இருவர். முகம் சுளித்தபடி, முந்தைய இருக்கையில் வந்து
அமர்ந்த பெண்ணாலேயே, அந்த இருவர் கவனத்திற்கு வந்தனர். இருபது பேர் வரை
இருந்தும், எவரும் அதை பொருட்படுத்தவில்லை. வழியில் இருந்த PRC டெப்போவில்
டீசலை நிரப்பிக் கொண்டிருந்த பொழுதே ஒருவன் வெளியே தலையை நீட்டி, வாந்தி
எடுத்தான். டீசல் நிரப்பியவர் திட்டியதை, அவன் பொருட்படுத்தவே இல்லை.
பக்கத்தில் இருந்தவன் மட்டும் சாரி கேட்டான். நான்கு வழிச்சாலையில் பயணத்தை
ஆரம்பித்தது பஸ். அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் ஒரு சத்தம் மீண்டும் அவனே
கீழே குனிந்து இருக்கைக்கு முன்பு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். டீசல்
நிரப்புகையில், அது வேறு இடம், நிதானமாக தலையை வெளியே நீட்டியும்,
இப்பொழுது தலையை நீட்டினால் முந்தி செல்லும் ஏதேனும் பேருந்து அடித்து
விடலாம் என்று சர்வஜாக்கிரதையாக உள்ளேயும் அசிங்கப்படுத்தியவனின் அறிவு,
இந்த நேரத்தில் பயணிக்காமலும் இருக்க சொல்லி இருக்கலாம். நடத்துனர் சாதாரண
முகபாவத்தில், ' கீழே இறங்கினதும் மண்ண அள்ளி போட்டுட்டு போங்க' என்று
சொன்னதை அவர்கள் கேட்டுக்கொண்டதாக கூட தெரியவில்லை. அருகில் வந்த
நடத்துனரிடம், ஓட்டுனர், ' என்ன பஸ் குள்ளேயும் எடுத்திட்டானா?' என்று மிக
சாதாரணமாக விசாரித்ததில், எப்படியோ தன் அருகில் அசுத்தம் செய்யவில்லை என்று
தப்பித்த உணர்வே மேலோங்கி இருந்தது.
பதினைந்தாவது நிமிடத்தில் கள்ளிக்குடி வந்துவிட்டது. ஏறிய
ஐவரில் இருவர் உளறிக் கொண்டேயும், ஒருவர் தடுமாறியபடி உள்ளே ஏறியும்,
மிகவும் கஷ்டப்பட்டு இமைகளை திறந்து எங்கே நிற்பது என்று இடத்தை
தேடிக்கொண்டு இருந்தார். மட்டமான நாற்றம் சில நிமிடங்களில் கடந்து பேருந்தின் கடைசி இருக்கைகளை அடைந்து இருந்தது.
விரைவாக கடந்து செல்ல விரும்பிய மணித்துளிகள் மெதுவாகவே கரையத்தொடங்கின.
அதற்கடுத்த
பதினைந்தாவது நிமிடத்தில் திருமங்கலம் வர, பெரிய விடுதலை உணர்வுடன்
இறங்கி, வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
அரைமணி
நேரம் நரகத்தின் வாசலில் கொஞ்சம் உலாத்திய உணர்வு, அங்கங்கே ஒட்டி இருந்த
சின்ன சின்ன சந்தோஷங்களையும் துடைத்து விட்டிருந்தது.
அந்த நேரத்தில் பல எண்ணங்கள்...........
1.
யாரிடம் போய் இதை முறையிடுவது? இது மாதிரி எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே செல்லும் ஆட்களிடம் வாங்கிக்கட்டி
கொள்ளாமல் தப்பிக்கும் ஓட்டுனர், நடத்துனர்களை எப்படி குறை சொல்வது?
2. கால் குணமாகாமல் இருந்திருந்தால், இந்த பிரயாணத்தையே தவிர்த்திருந்திருக்கலாம்.
3. அமைதியான பயணத்தை கெடுத்தவர்களின் மேலிருந்த கோபத்திற்கு
சமமான கோபம் பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறத்தில் டாஸ்மாக் கடைகளை
திறந்து வைத்திருக்கும் அரசின் மீதும் வந்தது.
4. ஒரு வகையில் பார்த்தால், கேடு என்று தெரிந்தும் விற்பவனின் பேருந்திலேயே
பயணம் செய்தால், இது மாதிரி இம்சைகளை அனுபவிக்க வேண்டும் போல.
6 கருத்துகள்:
பதிவு கால்வலியைப் பற்றியதுதான் என்று நினைத்துப்படித்தேன். இறுதியில்தான் `மெசெஜ்’ வேறு என்பதைப் புரிந்துகொண்டேன்.
யாரும் சொல்லியும் திருந்துவதாகத்தெரியவில்லை. அழகிய எழுத்துநடை.
முகநூலில் காணோமே. கால்வலி காரணமா?
சும்மா... சின்ன இடைவேளை எடுத்துக்கொள்ள தோன்றியது!
இன்று மதியம் FACEBOOK இலும், ஆஜர்! :)
வழக்கம் போல பாராட்டிக் கொண்டே இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி க்கா! :)@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
நீங்கள் சந்தித்த அவலத்தினை சமூக அக்கறையோடு எடுத்து இயம்பியிருக்கிரீர்கள் ஒவ்வொருவரும் அவரவர் குறை அறிந்து செயல்பட்டாலே போதுமானது இதை நான் என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன் சகோதரி...
By Antony Santha Kumar
நிஜம் தான், குடிகாரார்களின் தொல்லை தாளவில்லை. யாரை நொந்து கொள்ள, மற்ற கடைகளெல்லாம் லேட்டாக திறக்கிறார்கள். இவர்கள் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், வெயில், மழை, பந்த் எல்லாம் கவலையில்லை. வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் நிற்கிறார்கள். இப்படியே சென்றால் இவர்களின் ஆயுள் 50க்குள் தான். இவர்களது குடும்பத்தினர் நிலை வேதனை தான். அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Deepa Nagarani
ஒரே மனிதர், இரு வேறு களத்தில் கிடைக்கும் அனுபவம். ஒன்றில் புற வலி ,எரிச்சல் மற்றதில் மனதளவில். ஓய்வுக்குப் பின் நச் என்ற பதிவு:)
பத்து மாத்திரையும் ஒரே நாளில் எடுத்தால் அடுத்து வரும் தலைவலியும் தீர்ந்துவிடுமோ ? உடம்பின் உபாதை உபத்திரவமாய்ப் போவதற்கு பெரும்பாலும் நம் புத்திசாலித்தனமே காரணம்.
குடிகாரனே வெட்கப்பட்டு மறைவாய் செய்த காலம் போய் சுற்றி இருப்பவர்களே அதனை சாதரணமாக எடுக்கும் காலம் வந்து விட்டது . இனி அடுத்து :(
நல்ல எழுத்து நடை!
கருத்துரையிடுக