வெள்ளி, 28 மார்ச், 2014

மிரட்டும் வெயிலில், ஒரு கண்ணாடிக் கடையில் சில நிமிடங்கள்...!



அடிக்கிற வெயிலில், கண் கண்ணாடி விற்பனை செய்யும் கடையின்  உள்ளே நுழைந்ததும் பாய்ந்து சூழ்ந்து கொண்ட குளிர்ச்சியை, அதே வேகத்தில் அனுபவித்தவாறே தேர்ந்தெடுத்த நாற்காலிகளில் அமர்ந்தோம். மெல்லியப் புன்னகையின் ஊடே எங்களை வரவேற்றவாறே, என்ன மாதிரியான கண்ணாடி வேண்டும் என்று கேட்டார் கடைக்காரர்.

" கண்ணாடி போட்டு இருக்கதே தெரியக்கூடாத மாதிரி ஃப்ரேம் இருக்கணும் ", என்றதும் பதினைந்து வகைக்கும் மேற்பட்டக் கண்ணாடிகளை வரிசைப் படுத்தினார்.

" ஆனா, சைட் ல உள்ளக் கம்பி கொஞ்சம் பட்டையா இருக்கணும் ", என்றவுடன் பலவித வண்ணங்களில் பக்கவாட்டில் இலேசாக பட்டையாக உள்ள கண்ணாடிகளை அடுக்கினார்.


" கருப்பு இல்லாட்டி காப்பி கலர் ல தான் இருக்கணும்", சொன்னவுடன், மீண்டும் நான் கேட்ட வண்ணங்களில் தேர்ந்தெடுத்த சில கண்ணாடிகளை பிரித்து காண்பித்தார். அதில், சிறப்பாகத் தெரிந்ததை, கிட்டத்தட்ட ஏற்கனவே ராம் அணிந்திருந்தது போன்ற ஒன்றை தேர்ந்தெடுத்து அணிய சொன்னேன்.

" கண்ணாடி உங்களுக்கு இல்லையா?" என்று கேட்ட கடைக்காரரிடம்
" இருக்கிற ரெண்டு கூலர்ஸ் வச்சு இன்னும் பத்து வருஷம் ஓட்டிருவேன்", என்றேன்.

கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ராமிடம்,
" சரி சார், உங்களுக்குப் பிடிச்சிருக்குல, அப்போ இதே கண்ணாடியை பேக் பண்ணிடலாமா?,",
" அதான் சொல்லிட்டாங்கல்ல, பில் கொண்டுவாங்க", என்றார்.


பில் கொண்டு வந்து கொடுத்த கடைக்காரரிடம், உரியத் தொகையைக் கொடுத்து, கண்ணாடிப் பெட்டியை வாங்கிய பிறகு,
" கண்ணாடி போட்டு இருக்கவங்க, கண்ணாடில அவங்க முகத்தை ஒரு நாளைக்கு 1,2 வாட்டி தான் பாப்பாங்க, மீதி நேரம் சுத்தி இருக்கவங்க/கூட இருக்கவங்க தானே பாக்கணும், அப்போ எங்க சாய்ஸ் தான் பர்ஸ்ட்", என சிரித்தவாறே சொன்னதிற்கு பலமாக சிரித்தார்.


கடையை விட்டு வெளியே வந்ததும்,
" இதே மாதிரி கண்ணாடி வேணும்னு வந்ததும் முதலேயே சொல்லியிருக்கலாம்ல", என்ற ராமிடம், " வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதில சரி டயர்ட், கூட்டமே இல்லாத இந்த கடைல ஒரு பத்து நிமிஷம் சில்லுனு ரிலாக்ஸ் செய்திட்டே, புதுசா வந்திருக்கிற மாடல் எல்லாம் ஒரு பார்வையும் பார்த்திட்டு நம்ம வேலையையும் முடிக்கத்தான் ", என்றேன்.


வெளியே வந்த சில நொடிகளிலேயே, அதெப்படி என்னிடமிருந்து தப்பிக்க முடியும் என ஆக்ரோஷத்துடன் வேகமாக பாய்ச்சிய வெயிலை, மெது மெதுவாக உடல் தாங்கிக் கொள்ளப் பழகிக்கொண்டிருந்தது. இன்னுமும் இரண்டு, மூன்று மாதங்கள் தொடரவும், அதிகரிக்கவும் தயாராயிருக்கிற வெப்பத்தை சமாளிக்கப் போவதை நினைத்து எழுந்த அச்சம், கூலர்ஸ் அணிந்த கண்களுக்குள் மிதந்தது. போக்குவரத்து நெரிசலில், சாலையில் பயணித்தவர்களிடம் பகிர்ந்து வாங்கிய வெக்கையுடன், வீடு வந்து சேர்ந்தோம்.



5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடுத்த இரு மாதங்களை நினைத்தாலே வேர்த்துக் கொட்டுது...!

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
அருமை மகளுக்கு வாழ்த்துகள்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

பதிவு சிறிதாயினும் பளிச்.... இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயிலைத் தாங்க வேண்டும்...

thambu சொன்னது…

// இதே மாதிரி கண்ணாடி வேணும்னு வந்ததும் முதலேயே சொல்லியிருக்கலாம்ல", என்ற ராமிடம்//புதுசா வந்திருக்கிற மாடல் எல்லாம் ஒரு பார்வையும் பார்த்திட்டு நம்ம வேலையையும் முடிக்கத்தான் ", என்றேன்.//ஒரு கடைக்குச் செல்கையில் ஒரு ஆண் மற்றும் பெண் இருவரின் தேர்ந்து எடுக்கும் தன்மையை அழகாய் ,சுருக்கமாய் வெளிப்படுத்திய விதம் அருமை தீபா . வெயிலைப் பற்றிய கருத்து துணை புரிந்தாலும் அது இல்லாவிட்டாலும் நிகழ்வு இவ்வாறே இருந்திருக்கும் என்பது என் கருத்து :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா... வெயிலுக்காக கண்ணாடிக்கடைக்காரரை படுத்தியிருக்கிறீர்கள்..