திங்கள், 23 ஜூன், 2014

ஒரு வார்த்தை - ஒவ்வொரு காலத்திலும் அர்த்தம் மாறும் விசித்திரம்!



ஒரு சில வார்த்தைகள், பலவித உணர்வுகளையும், செயல்களையும், அனுபவங்களையும், நம் நினைவுப் பரப்பில் சேமித்து வைத்திருக்கும். அவ்வார்த்தைகளை, விளக்கி எழுதினாலோ, பேசினாலோ எளிதில் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே போகும். அப்படிப்பட்ட வார்த்தைகளில், கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் ஈர்ப்பை ஏற்படுத்திய ஒரு வார்த்தை காதல்.



ஐந்தாம் வகுப்பில் வரும் ஆங்கிலப் பாடத்தை ஆசிரியையின் ஆணைக்கு இணங்க வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது இருந்த உற்சாகம், இரண்டாவது பத்தியில் இருந்த love என்ற சொல்லை உச்சரிக்க வேண்டி இருக்குமே என்று சரியாக அந்த வார்த்தைக்கு முன்பு பதட்டமாகி, அந்த சொல்லை மட்டும் விட்டுவிட்டு அதற்கடுத்த சொல்லில் இருந்து வாசிக்க, வகுப்பறையில் பலத்த சத்தம். ஒரு வார்த்தையை விட்டுவிட்டு வாசிக்கிறாள் என்று மற்ற மாணவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியை அப்பொழுது தான் கையிலிருந்த புத்தகத்தை நோட்டமிட்டார்.
எந்த சொல்லை விட்டாள் என்று கேட்டபடி வகுப்பைப் பார்த்தார். அதுவரை தயங்கி நின்று கொண்டிருந்த நான், எங்கே நீங்களே சொல்லுங்க பார்ப்போம் என்றேன். மெலிதான சிரிப்புகளும், குசுகுசு வென்று பேச்சுகளும் நீடித்த தொடர்ச்சியான நொடிகளை, ஆசிரியையின் அதட்டல் முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்படி என்ன வார்த்தை அது என்று மீண்டும் புத்தகத்தைப் பார்த்த பொழுது, ஒரு மாணவி மட்டும் எழுத்துகளை உச்சரித்தாள். இதுக்காகவா இவ்ளோ சத்தம், லவ் னு சொன்னா என்ன? அது அம்மா, அப்பா மேல நமக்கு இருக்கிற அன்புன்னு அர்த்தம் வர்ற இடத்தில இருந்து எல்லா இடத்துக்கும் பொருந்தும். என்று நீண்ட விளக்கம் அளித்தார். அத்தனை நெளிந்து தவிர்க்க வேண்டிய சொல் இல்லை என்ற எண்ணம் அந்த கணம் ஏற்பட்டது என்னவோ உண்மையே.

வீட்டில் இது போன்ற சொற்களுக்கு விளக்கம் கேட்டால், தெரிய வேண்டிய வயதில் தெரிந்து கொள் என்பது மட்டுமே பதிலாக  இருக்கும் என்பதால், இது சார்ந்த கேள்விகளைத் தவிர்த்திருக்கிறேன். அந்த வயதில் மிக அபூர்வமாக வீதிகளில் விழிகளால் பேசிக்கொள்ளும் ஒரு சில காதல் கதைகளை, சம்பந்தப்பட்டவர்களை விட அத்தனை வெட்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் வேடிக்கைப் பார்த்துள்ளோம். இவை பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்தலே அந்த நாட்களில் பெரிய  சுவாரசியத்தை அளிக்கும் ரகசியங்களாய் இருந்துள்ளன.
ஏழு, எட்டாவது படிக்கும் பொழுது, சித்ரகார், சித்ரமாலா என்று இரவு எட்டு மணிவாக்கில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சில பாடல்களைப் பார்த்து விட்டு, ' அதெப்படி இத்தனை பேர் இருக்கிற இந்த பார்க்ல யாரையும் கண்டுக்காம ஹீரோ, ஹீரோயின் பாட்டெல்லாம் பாடி கை எல்லாம் பிடிச்சுக்கிறாங்க , நம்புறமாதிரியே இல்லியே ', என்றெல்லாம் பேசி உள்ளோம்.

பத்தாவது படிக்கையில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில் ஒரு மாணவியைத் தனியாக அழைத்த ஆசிரியை பேசிக்கொண்டிருந்ததில் தெரிந்தது, அவள் யாரையோ காதலித்துக் கொண்டிருப்பது. "சீ, அவள் மோசமானவ அதான் லவ் எல்லாம் பண்றா", என்று வகுப்பில் பெரும்பாலான மாணவிகள் அவளை ஒதுக்கி வைத்த பொழுது, நானும் அந்தக் கூட்டணியில் இருந்திருக்கிறேன்.

பதினோராம் வகுப்பின் ஆண்டு இறுதித் தேர்வு நேரத்தில் எனது வகுப்பை சேர்ந்திராத, ஹாக்கி விளையாட்டில் உடன் விளையாடிய தோழியான சத்யா, மாலை பயிற்சி முடிந்த நேரத்தில் தனியாகக் கூப்பிட்டு, தான் ஒருவனைக் காதலிப்பதாகக் கூறிய பொழுது, கோபம்  வருவதற்கு பதிலாக ஆள் சரியானவனா என்று மட்டும் பார்த்துக் கொள் என்பதை மட்டுமே நீண்ட நேர யோசிப்பிற்கு பின் பதிலாக சொல்ல முடிந்தது. மெது மெதுவாக ஒவ்வொரு வகுப்பிலும் இது போன்று சில மாணவிகள் இருந்ததை, அவர்கள் தாங்கள் காதலிக்கிறோம்/ காதலிக்கப்படுகிறோம் என்பது குறித்துப் பெருமையுடன் திரிந்ததை  பயமும், ஆர்வமும், கொஞ்சம் பொறாமையும் கலந்து வேடிக்கைப் பார்க்கிற பெரும்பான்மைக்  கூட்டத்திலேயே இருந்திருக்கிறேன்.


பனிரெண்டாம் வகுப்பில் ஆண்டுத்  தேர்வு நெருகிக் கொண்டிருக்கின்ற வேளையில், இருக்கின்ற சில முக்கிய  வீதிகள் மற்றும் ஒன்றிரண்டு சந்திக்கும் இடங்களை மட்டுமே கொண்ட மதுரையில் சுற்றிக் கொண்டிருந்த சத்யா, ஒரு நாள், அவள் காதலனுடன் வண்டியில் பயணிக்கையில் அவளது பெற்றோரால் நேரடியாக பார்க்கப்பட்டாள். அதற்கடுத்த நாள், கை, கால் என்று உடலின் பல பாகங்களிலும் ரத்தம் கன்றிப் போய் இருக்கும் அளவு அடிபட்டு, மதிய உணவு இடைவேளையில் தேடி வந்து, தேம்பியபடி கதை சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.

வீட்டில் உள்ளோர் தன்னை அதிகப்படியாகக் கண்காணிப்பதையும், தான் மிரட்டிக் கொண்டிருந்த தங்கை எல்லாம் ஏளனமாக தன்னைப் பேசுவதாகவும் சொல்லி அழுதவள், ' என்ன இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா ஒன்னு அவன் விட்டுருப்பான் இல்லாட்டி நானே விட்டிருப்பேன், அதுக்குள்ளே பெரிசா கண்டுபிடிச்ச மாதிரி இவிய்ங்க கொடுக்கிற டார்ச்சர் தாங்க முடியல', என்ற பொழுது என்னால் அதிர்ச்சியைக் கண்களில் காட்டாமல் தொடர்ச்சியாக கேட்க முடியவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் அதிகமாக நடத்தப்பட்ட வகுப்புத் தேர்வுகளில், திருத்தித் தரப்பட்ட பரீட்சைத் தாள்களுக்கு இடையே மறைத்து பைலில் அவளுக்கு வந்திருந்த காதல் கடிதங்கள் இருந்தன. ட்வைன் நூலால் கட்டப்பட்ட தேர்வு விடைத் தாள்களை விட கூடுதல் பக்கங்களைக் கொண்ட,  எழுத்துக்களின் ஆயுள் அத்தனைக் குறைவானதா என்று எனக்குள் மட்டும் கேள்வி எழுப்பிக் கொண்டேன்.

கல்லூரியில் சேர்ந்த பொழுது இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் உள்ள மாணவியர் இதில் விழுந்திருந்தனர். இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது, நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் கலந்து கொள்ள வந்த வேறொரு கல்லூரியை சேர்ந்த சுப்பிரமணி ஏதேனும் விவாதம் என்று வந்தால், அத்தனை விரக்தியாக தொடர்ந்து எதிர்த்துப் பேசுவான். என் உடன் படித்த தோழி கோகிலா மிக சாதாரண எளிய தோற்றம் உடையவள். சமயங்களில் தன் தோற்றம் குறித்துத் தாழ்வு மனப்பான்மையையும் பகிர்ந்துள்ளாள். அவளின் முகவரியை பதிவேட்டில் இருந்து குறித்துக் கொண்டு அவள் வீடு இருக்கும் வீதியில் தினந்தோறும் முகத்தைக் காட்டுவதை, தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக மாற்றி இருந்தான் சுப்பிரமணி. கோகிலா ஒவ்வொரு தினமும் பதட்டத்துடன், அவன் வந்து போனதை விவரிப்பாள். மெலிதாக உண்டான மகிழ்ச்சியை, அவள் கவனமாக, தவிர்ப்பது தெரிந்தது. ஒரு நாள் வழியை மறைத்து சுப்பிரமணி கொடுத்தான் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்து காண்பித்தாள். அழகாக அட்டைப் போட்டு முதல் பக்கத்தில் வண்ண வண்ணப் பூக்கள் வரையப்பட்டு அன்பு கோகிலாவிற்கு என்று இருந்தது.....
அடுத்தடுத்த பக்கங்களில் பெரிய பெரிய எழுத்துகளில் கவிதை என்ற பெயரில் எழுதித் தள்ளி இருந்தான்...

ஒன்றிரண்டு மட்டும் இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது.....
' எல்லா விதமான உடைகளும் பொருந்தும் ஒரே பெண் இந்த உலகத்திலேயே இவள் தான் என்று தொடங்கும் ஒரு கவிதையாவது மன்னித்து விடலாம்...... ஆனால்,
மதுரையின் புகழ் பெற்றக் கோவிலை சொல்லி....
கும்பிடுவதற்காக சென்றேன்
அங்கு தெய்வமில்லை
என்று ஆரம்பித்து
கோகிலா வீட்டின் எண், தெருவைக் குறிப்பிட்டு,
தெய்வம் இங்கு இடம் மாறி இருக்கிறது ....
என்பதை படித்து அனைவரும் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தாலும், என்ன தைரியம் இருந்தால்  இவன் நம் கடவுளை எல்லாம் இழுப்பான் என்று லேசாக கோபமும் வந்தது.
கடைசியாக எழுதி இருந்த கவிதையில்
இவள் தான் தேவதை........ தேவதை தான் இவள் என்று முடித்திருந்த பொழுது..................
தேவதைகளுக்கான இலக்கணம் மெலிதாக புரியத் தொடங்கி இருந்தது. ஏதோ ஒரு நாளில் காதலிக்கத் தொடங்கியவர்கள், சேராமல் பிரிந்து போன பெருங்கூட்டத்தில் கடைசியில் சேர்ந்து போனார்கள்.
கல்லூரிக்குப்  பின் சில நாட்கள் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பொழுது அஸ்வினி பக்கத்திலிருந்து வகுப்பிற்கு ஆசிரியையாக இருந்தாள். காலை இடைவேளை, மதிய உணவு இடைவேளையின் பொழுது, குழந்தைகளை கவனித்துக் கொண்டே அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம், அவளின் தலை தரையை நோக்கியே இருக்கும். நிமிர்ந்திருக்கும் முகத்தைப் பார்க்கையில், வருத்தம், கவலை, எரிச்சல், இவற்றை எல்லாம் இவள் ஒருத்தி மட்டுமே இந்த உலகத்தில் குத்தகைக்கு எடுத்திருப்பது போல இருக்கும். ஒரு நாள் அஸ்வினியின் மதிய உணவு டப்பாவில் இருந்த உணவு கீழே கொட்டியிருந்ததை, அவள் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, ' என் லஞ்ச் ஷேர் பண்ணிக்றீங்ளா?", என்று கேட்டதும், '  நோ, தேங்க்ஸ்', என்று லேசாக புன்னகைத்தாள். சில நாட்கள் கடந்து நட்பாகிய பிறகு அவள் பகிர்ந்தது, "அந்தமானில் குடியிருக்கையில் பக்கத்து வீட்டில் குடியிருந்த வட இந்தியனை காதலித்து இருக்கிறாள். அவன் வேலை விஷயமாக மும்பை சென்றிருக்கையில், அஸ்வினியை மிரட்டி, மதுரையில் உள்ள அத்தை, மாமா இருக்கும் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு சென்ற அவளது பெற்றோர், இன்னும், சில மாதங்களில் நிரந்தரமாக இங்கு வந்துவிடுவர். இந்தப் பள்ளிகூடத்திற்கும் கொண்டுவந்து விடுவது, பிறகு அழைத்து செல்வது அவளின் மாமா தான். மும்பையில் அவன் எங்கு இருக்கிறான் என்பதுவும் தெரியாமல், அவனின் அந்தமான் வீட்டிற்கு அழைத்த பொழுது, அவனுடைய அம்மா இனி தொடர்பு கொள்ளக் கூடாது என்று திட்டியதையும் அழுகையினூடே சொல்லி முடித்தாள். " 2,3 மாசம் தானே ஆகுது பிரிஞ்சு, இன்னும் 4,5 மாசம் போகட்டும், நீ வேணும்னு உறுதியா இருந்தா அந்தப் பையன் தேடி வருவான், இல்லாட்டி காலம் சரிப்படுத்திடும் உன்னை", என்றேன். சில நாட்களிலேயே வேலையை விட்டு விலகி விட்டேன். இரண்டு வருடங்கள் கழித்து அஸ்வினி அவளது திருமணப் பத்திரிகையை கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தாள். பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளை பற்றி பெருமையாக ஓரிரு விஷயங்களை சொல்லிவிட்டு, மெலிதாக புன்னகைத்து விடைபெற்றாள். அழுது, புலம்பி குணமாகிய காயத்தின் வடுவை மறைக்க செய்த முயற்சி அந்தப் புன்னகையில் ஒளிந்திருந்து இருக்கலாம்.

இன்று பள்ளிக்கு செல்லும்  குழந்தைகள் கூட வெகு சாதாரணமாக புழங்கும் வார்த்தைகளில் ஒன்றாக லவ் என்ற சொல் மாறிவிட்டது. தெளிவான நிலையிலோ தெளிவற்ற நிலையிலோ  மனதில், உடலில் தோன்றும் மாற்றங்களை ஏற்று காதலாகி கசிந்து உருகியதெல்லாம், ஏதோ ஒன்றை அடைந்தபின், மெல்லிய முரண்பாடுகளைக் கூட சகிக்காமல் விலகியோ, சுற்றத்தில் எதிர்ப்பு வந்ததும்  பிரிந்து செல்வதையும்  நிறையப் பார்க்கிறோம். காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்த பின், அவர்களுக்குள் இருந்த காதலை தொலைத்தவர்களையும் பார்க்கிறோம். கூடுதல் புரிதலுக்கு இணையாக, சுயநலம் தூக்கலாக இருக்கும் இந்த தலைமுறையினருக்கு கூடுதல் விரைவாக அலுத்துப் போய் விடுகின்ற ஒன்றாக இந்த காதல் மாறி வருகிறதோ என்றும் தோன்றும்.

எது எப்படி எனினும்......
இரு புறங்களிலும்
ஒரே நேரத்தில் மலர்ந்து
ஒரே நேரத்தில் உதிரும்
பூக்களால்
துன்பங்கள் குறைவு .... என்பதை மறுக்க முடியாது.
சொல்வதை விட செயலில் காதலை நிரூபிக்கும் அரிய நல்லவர்கள், தங்கள் செயல்களின் மூலமாக முன்னுதாரணமாக வாழ்கின்றார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

ஏதேனும் இது போன்று ஒரு வார்த்தை தயங்கி உச்சரித்து, ஒரு கட்டத்தில் இயல்பாக உபயோகப்படுத்தப்படும் காலத்தில், சாதாரண வார்த்தையாகிவிடலாம். அத்தனை வேகமாக பிரியமான வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்தி, சாதாரண சொற்களாக்கி, களைத்துப் போய் அமர்ந்து இருக்கும் பொழுது, வேறொரு சொல்லுக்காக காத்திருக்கிறோமா என்றும் தெரியவில்லை.

ஒரே ஒரு வார்த்தை......
ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான அனுபவங்களை இன்று வரை என்னுள் நிறைத்துக் கொண்டே வருகிறது.

  (ஜூன் 1 - 15 ... குங்குமம் தோழியில் வெளியானது )

4 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிகவும் அருமையான கட்டுரை...
இன்று காதல் பள்ளிப்பருவத்திலேயே முளைத்து விடுகிறது...
லவ் என்ற வார்த்தை இன்று எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.

Rathnavel Natarajan சொன்னது…

Interesting. அற்புதமான பதிவு. கோர்வையான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். திறமை மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள் அருமை மகள்
Deepa Nagarani.

Kousalya Raj சொன்னது…

//எதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... //

உண்மை !!! எதையும் எதிர்பாராமல், பேஸ்புக்கில் ரத்னவேல் ஐயா பகிர்ந்திருந்ததை பார்த்து வாசிக்க வந்தேன், ஒன்றல்ல நிறைய தட்டுப்பட்டது...!! :-) அப்படியே எடுத்து மனதை நிறைத்துக் கொண்டேன் தோழி.

அழகான எழுத்து, அருமையான விவரிப்பு ...மிக பிடித்துவிட்டது எனக்கு !! கொஞ்ச நேரம் மலரும் நினைவுகளுக்குள் மூழ்கி விட்டேன்.

வாழ்த்துகள் !!!

thambu சொன்னது…

தொடர்ந்து படிக்கும் வாசகனாய், இது உங்கள் எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என எனக்குத் தோன்றுகிறது . தடையில்லாத ,ஆரவாரமற்ற ,அழுத்தம் குறையாத சுவாரசியமான நடையாக இந்தப் பதிவு ,அருமை.

ஒரு குறிப்பிட்ட வர்க்கக் கட்டமைப்பில் வளரும் ஒரு பெண்ணின் பார்வையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சொல் உண்டாக்கும் உணர்வுகளின் தாக்கத்தை மிகச் சரியாக வார்த்தைகளில் பதிந்திருக்கிறீர்கள் . அந்த அந்த காலக்கட்டத்தில் சம்மந்தப்பட்டவர்களின் புறச்சூழல் பொறுத்தே அது எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதையும் அழகாக //ஒரு கட்டத்தில் இயல்பாக உபயோகப்படுத்தப்படும் காலத்தில், சாதாரண வார்த்தையாகிவிடலாம். அத்தனை வேகமாக பிரியமான வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்தி, சாதாரண சொற்களாக்கி,// சொல்லியுள்ளீர்கள் .

// ஒரே நேரத்தில் மலர்ந்து
ஒரே நேரத்தில் உதிரும்
பூக்களால்
துன்பங்கள் குறைவு// இன்றைய சூழ்நிலையில் இது மிகச் சாதரணமாய் நடந்தேறிவருகிறது .
.
//தேவதைகளுக்கான இலக்கணம் மெலிதாக புரியத் தொடங்கி இருந்தது// லைலாவின் அழகு தெரிய மஜ்னுவின் கண்கள் வேண்டும் :)

//சொல்வதை விட செயலில் காதலை நிரூபிக்கும் அரிய நல்லவர்கள், // எத்தனை மாறுதல் வந்தாலும் மாறாது செயல்படும் இவர்களைப் போன்றவர்களால் சில வார்த்தைகள் அது தரும் உணர்வுகளை தக்க வைத்துக்கொள்கின்றன .

ஒரு பதிவு இவ்வளவு இயல்பாய் மனதில் அமரும் வகையில் படைத்துக் கொடுத்த உங்களுக்கு ஒரு நன்றி தீபா. உங்கள் பதிவுக்கான சித்திரம் வரையும் சித்திரக்காரருக்கு ஒரு சிறப்பு நன்றி. பதிவின் கரு மட்டுமல்லாது கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழகாய் தீட்டுகிறார் :)