அருவி, குளம், ஏரி என நீர்நிலைகள் அனைத்துமே ஈர்க்கும் இயல்புடையன. குறிப்பாக கொட்டும் அருவியில், நேரம் போவதே தெரியாமல் நிற்கையில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையில்லை. ஆனால், இந்த கடல் ஏனோ என் மனதிற்கு அத்தனை நெருக்கமாக இருந்தது இல்லை. இன்னும் தெளிவாக சொன்னால், ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சென்றிருந்தோம். சுற்றுலாவில் உடன் வந்தவர்களிடம் இருந்து விடுபட்டு, மிக வேகமாக நான் மட்டும் கடலை நோக்கி முன்னோக்கி சென்றேன்.வெளிறிய நீலவானத்தை ஒட்டி இருந்த பிரம்மாண்டமான கடல், அலையோசையுடன் வரவேற்று கொண்டிருந்தது. சந்தோஷத்துடன் தொற்றிக்கொண்ட ஆர்வம் வேகமாக கடலை நோக்கி ஓட செய்தது. பக்கத்தில் செல்ல செல்ல, வெளிறிய நீலத்தில் இருந்த கடலின் இரைச்சல் மனதை என்னவோ செய்தது. சற்று தொலைவில் கரையை ஒட்டியபடி சிலர் கடலில் விளையாடிக் கொண்டிருக்க, நான் சென்ற பகுதியில் கிட்டத்தட்ட எவருமே இல்லை. உடன் வந்தவர்கள் மிகத் தொலைவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். ஏதோ ஒரு வேகத்தில், ஓடி வந்து கொண்டிருந்த அலைகளில் கால் நனைத்தபடி, ஒரே வண்ணத்திலிருந்த வானையும், கடலையும் உற்று பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், வேகமாக பின்னோக்கியவாறே மணலில் ஏறினேன். எல்லையில்லாமல் நீண்டிருந்த அதன் விரிந்த பரப்பு, சொல்லவியலாத பயத்தை ஏற்படுத்தியது. என்னை உள் இழுத்துக் கொள்ளும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால், சட்டென கடல் திகிலூட்டியது போல உணர்ந்தேன். அன்றிலிருந்து கடலும், கடற்கரையும் மனதிலிருந்து தூரம் போயின. இத்தனை வருடங்களில் சில கடற்கரைகளில் அமர்ந்திருந்தாலும் உடன் சிலர் இருக்கும் போது மட்டும் அலைகளில் பெயருக்கு காலை நனைப்பேன். மிக குறைவான நொடிகளில் கடலின் மீதுள்ள பார்வையைத் திருப்பும்படியும் பார்த்துக் கொண்டுள்ளேன். இதுதான் காரணம் என்று தெரியாமல் இன்றுவரை விலகி, தூர நின்று, குறைவான நேரத்தில் மட்டுமே இருக்க விரும்பும், கடல் மீதான எனது பார்வை, இனி மாறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்!
3 கருத்துகள்:
கடல் அனுபவம்
மனிதரின் ஆதி பயத்தில் ஒன்று இது. பிரம்மாண்டம் நம்மை அதிசயிக்க, பயப்படுத்த, மதிக்க,வணங்கவே தூண்டும். இதன் தாக்கம் குறைய நான் அறிந்த வரையில் ஒரே வழி அதனை அனுபவிப்பதே. அதனோடு நாம் செலவழிக்கும் நேரம் கூடக் கூட எதிமறை எண்ணங்கள் குறைய வாய்ப்புண்டு.
ஆனாலும் பயத்தை பயமில்லாமலும், பயமுறுத்தாமலும் சொன்னதுக்கு நன்றி :)
ஆற்றுக்கு அந்த பக்கம்
கரை இருக்கும்.
குளத்துக்கோ,
ஏரிக்கோ ஒரு எல்லை இருக்கும்.
ஆனால் கடலுக்கு எல்லை இருக்காது.
ஆற்றிலோ ஏரியிலோ நீந்தி அக்கரைக்கு செல்ல முடியாது என்றாலும்,மூழ்கி விடுவோம் என்ற பயம் குறைாகவே இருக்கும்.
ஆனால் கடலை கடக்கமுடியாது
என்ற பயமே பூதாகரமாகி,
நாம் கடலை பார்த்ததும்
இன்னதென்று சொல்லமுடியாத பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
கருத்துரையிடுக