செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

மரணத்தில் மிதக்கும் சொற்கள்

மரணத்திற்கு அப்பால், மரணத்திற்கு பின்...
போன்ற புத்தகங்களை ஆர்வ மேலீட்டால் படித்திருக்கிறேன். சில வினாக்கள் மறைந்தன. புதிதான பல கேள்விகளை உள்ளே கொண்டு வந்து சேர்க்கவும் செய்தன...
அந்த வரிசையில்,
மரணத்தில் மிதக்கும் சொற்கள்' சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே வாசிக்கத் தூண்டியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வாசித்துவிட்டு நூலாசிரியரிடம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். விரைவில் இந்தப் புத்தகத்திற்கான விமர்சனத்தை எழுத இருக்கிறேன் என சொன்னேன். இந்த தகவல் எப்படி எட்டியதோ தெரியவில்லை, சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற பொங்கல் புத்தகத் திருவிழாவில், சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதை இப்புத்தகம் பெற்றது. :P   

தனக்கே உரிய புதிர்த்தன்மையை காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற மரணம் மைய இழையாக  சில கதைகளில் ஓடுகிறது. மீதி கதைகள் அதற்கு இணையான வலியை சொல்வதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும், பல இடங்களில், வழக்கமாக கலக்கும் நையாண்டியுடன் விரியும் புதுவிதமான அனுபவங்கள் வாசித்த இடத்தை விட்டு நகர  மறுக்கிறது  . தொடர்ந்து வாசிக்கின்ற வரிகளில் வழியும் துயரம் நம் உள்ளே ஊடுருவுவதைத்  தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் மாறுபட்ட கதைக்களங்களும், கதாப்பத்திரங்களும் புத்தகத்தை கீழே வைக்கவும் விடவில்லை. 

இதில் கதாப்பாத்திரங்கள் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பதும், நடந்து கொண்டிருக்கின்ற நிஜத்துக்கும் இடையே காட்சிகளாக நம் முன்னே ஓடிக்கொண்டிருப்பதை  இக்கதைகளின் பொது அம்சம் எனலாம். 

கண் நிறையத் தெரியும், ஜிகர்தண்டா, பிரியாணியைத் தாண்டி தொங்க விடப்பட்டுள்ள பர்தாவை ஒதுக்கிப் பார்த்தால், புதிதாய் தென்படுகின்ற பல காட்சிகள் வியப்பூட்டுகின்றன.  




நிகழும் சம்பவங்கள் மூலம் தெரிய வரும் அவர்களின் வாழ்வியல் முறை, தட்டுப்படும் மெல்லிய வேறுபாடு பல இடங்களில் ரசிக்கவைக்க செய்கிறது.   

இதுவரை அவ்வளவாக கண்டிராத கோணத்தின் பக்கங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை, ரத்தமும், சதையுமாக கண் முன்னே பார்த்ததில் சிலரைப் பற்றி சில வரிகளைப் பகிர நினைக்கிறேன்...  பெரும் செல்வாக்கு, பண பலம் உள்ள ஒருவரின் மகள் மாற்று மதப் பையனைத் திருமணம் செய்து கொண்டதற்குப் பின் சில வருடங்களில் இறந்து விடுகிறாள். எவ்வாறேனும், அவளது உடலைத் தருவித்து தங்களது வழக்கப்படி அடக்கம் செய்ய நினைக்கும் தந்தையின் வலியை விட அதிகமாக இருக்கிறது அந்த மகளின் உடலுக்காக கபர் குழியைத் தோண்டி வைத்துவிட்டு தனது மகளின் கல்வி செலவிற்காக அல்லாடும் தந்தையின் வலி. 
மௌனச்சுழி என்றொரு கதையில்  தங்கள் பள்ளிவாசலில் பயான் செய்வதற்காக வந்த உலகப் பிரசித்த பெற்ற ரஹ்மானியைத் தன் மகளாகவே பாவிக்க, வந்த அவரோ மரித்துப் போகிறார். அதன் தாக்கத்தால்,  தன் மகளை அவளுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற தந்தையின் தவிப்பில் தெரியும் பெரும்பிரியம் மகள் மீது பிரியம் கொண்ட அத்தனைத் தந்தைகளுக்குமான உணர்வு...

மாற்றம் தேவைப்படும் வழக்கத்தை துணிச்சலுடன் மாற்ற நினைக்கும் அஸ்கர், அவனது முடிவு வீட்டினராலேயே வேறுவிதமாக தடுக்கப்படும் நிலையின், எதார்த்தம் மனதை வருத்துகிறது.

ஒருவனது இறப்பை ஊரில் உள்ள உறவும் நட்பும் சொல்லி சொல்லி அழுகிறது. ஒவ்வொருவரின் ஒப்பாரியின் போதும் தனது கடந்து காலத்தில் நடந்த அதற்கொப்பான சம்பவங்களை ஓட விட்டுக் கொண்டிருப்பாள். தூக்கிக் கொண்டு போகும் போது, ' அண்ணன், அண்ணி, தங்கச்சி அவங்க பிள்ளைகனு இருந்த நீங்க என்னைக்காச்சும் என்னை நெனச்சாவது பார்த்திருக்கீங்களா?  எல்லாருக்கும் நல்லவரா இருந்த நீங்க எனக்கு எப்படி இருந்தீங்க?  என பெருங்குரலெடுத்து பொங்குகிறவளின் வலிக்கான காரணம், அவளது கணவனின் மரணத்தை விட, அவன் வாழ்ந்த காலத்தில் அவளை சக உயிராக பாவிக்காமை தரும் ரணமே. 

கழைக்கூத்தாடிப் பெண்ணிடம் பார்க்கும் பலரின் பார்வைக்கு மத்தியில், அந்த குடும்பத்தின் தேவைக்காக, திருடனாக இருந்தாலும் நல்ல நோக்கத்தில் மட்டுமே ஐநூறு ரூபாயைத் தரும்  சேதுராமன் கதாப்பாத்திரம் சமகால தமிழ் சினிமாவில் நம் மக்கள் ரசிக்கும் கதாநாயகனின் பிம்பம்.

ஒரு கதையை மட்டும் எடுத்து ஒரு மணிநேரம் விவாதிக்கலாம். ஒவ்வொரு கதையிலும் கதாப்பாத்திரங்களின் அருகாமையில் நம்மை  நிற்க வைக்கும் விறுவிறுப்பான நடை. கதையின் ஓட்டத்தில் எங்கேனும் ஓரிடத்தில் நாமும் நிற்பதை அரிதான எழுத்துகளில் மட்டுமே காண முடியும். இரு முறை எழுத முயற்சித்த போது தொடர்ச்சியாக வந்த காய்ச்சல், இருமல் மூன்றாவது முறை எழுத அமர்ந்த போது, பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டது.

ஒரு சொல்லுக்கு இணையான மாற்று சொற்கள், அங்கங்கே நீளும் கவித்துவமான வரிகள், வித்தியாசமான உவமைகள், இவற்றுடன் மதுரையில் விடிய விடிய எங்கெங்கே, என்னென்ன சிறப்பான உணவுகள் கிடைக்கும் என்பது மாதிரியான பல  தகவல்கள்,  எழும் கலவையான உணர்வுகளுடன்  கலந்து மொத்தப் புத்தகத்தின் கனத்தைக் கூட்டுகின்றன. ஒரே மாதிரியான விஷயம், அலுப்பூட்டும் சொற்கள் என்ற வழமையிலிருந்து மாறுபட்டு நிற்கும்  ' மரணத்தில் மிதக்கும் சொற்கள்', வித்யாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.


ஆசிரியர் : அர்ஷியா 
பதிப்பகம் : புலம் 

கருத்துகள் இல்லை: