சனி, 20 பிப்ரவரி, 2016

மங்களூரு!



மலைப்பிரதேசம், மிகக்குறைவான தூரத்தில் கடல், அருகில் ஆறு, எங்கு பார்த்தாலும் மரங்களும், பூக்களும் என  பசுமையும், அழகும் கண்களை நிரப்பும் இடங்களை பாஸில் படங்களில் பார்த்திருப்போம். இவை அனைத்தையும் நேரில் அனுபவித்து மகிழும் அனுபவத்தை மங்களூரு வழங்கியது. 

மேலே ஏறும், பக்கவாட்டில் இறங்கும், என கிளைகளாகப் பிரிகின்ற சாலைகள் நம் நாகர்கோவிலின் சாலைகளை நினைவுபடுத்துகின்றன. 

மூடபித்ரி ... மங்களூருவில் இருந்து 37 கி.மீ தூரத்தில் இருக்கிறது சமணர்களின் காசி என அழைக்கப்படும் மூடபித்ரி கோவில். மிக உயரமான, வலுவான கோட்டை சுவர்கள், வேலைப்பாடு மிகுந்த கதவுகள், தூண்கள் அதில் நாளெல்லாம் ரசிக்க செய்யும் நுண்ணிய வேலைப்பாடுகளாலன எண்ணற்ற சிற்பங்கள் கண்களை குதூகலப்படுத்தும். சிறிய தூண்கள் அனைத்தையும் சேர்த்து, ஆயிரம் தூண்கள் உள்ள கோவில் எனவும் இதை அழைகின்றனர். சற்று அண்ணாந்து பார்த்தால், கொஞ்சம் பருமனான தூண்களை குறுக்காக அடுக்கி, அதனை விட எடை குறைந்தவற்றை அதற்கடுத்து அடுக்கி என முற்றிலும் பாறைகளால் வேயப்பட்டுள்ள நேர்த்தி மிக்கக் கூரை பிரமிக்க செய்கிறது.

அதற்கடுத்து  கர்காலா செல்லும், வழியிலேயே, முந்திரிப்பருப்பை சுத்தப்படுத்தி பிரித்து அனுப்பும் தொழிற்சாலைக்கு சென்றோம். எடையை சோதித்த, பெரிய சாக்குப் பைகளைக் கிழித்து அவற்றில் இருக்கும் நிறம் கருத்திருக்கும் முந்திரிகளை கொட்டுகின்றனர். அதை அப்படியே உள்ளே இழுத்துக் கொள்கிறது உருளை வடிவில் இருக்கும் ஒரு இயந்திரம். சிறிது நேரத்திற்கு பின் அவித்த முந்திரிக்கொட்டைகளை கீழே தள்ளுகிறது. அவற்றை வாரி அள்ளி, பெரியப் பாத்திரங்களில் சேகரிக்கின்றனர். கொஞ்சம் தள்ளி சில பெண்கள் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தனர். தங்களது கைகளில் இருந்த திருப்புளி அல்லது அதைப் போன்ற இரும்பு கம்பிகளால் வேகவேகமாக இந்தக் கொட்டைகளை உடைத்து வெளியே வரும் பருப்புகளை தங்களது பக்கத்தில் இருக்கும் டப்பாக்களில் சேமித்தனர். ( இதை அளவிட்டு தான் சம்பளம்) இன்னும் உள்ளே சென்றால் வரும் அறையில் ஒரு இயந்திரம் முந்திரிப்பருப்புகளை வெளியே தள்ளுகிறது சில அடிகள் நீளும் அதன் பாதையில் வரிசையாக அமர்ந்திருக்கின்ற பெண்கள், ரக வாரியாப் பிரித்து தங்கள் அருகில் உள்ள கூடைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர். சந்தை விலையை விட அங்கு விலைக் குறைவு என்பதால் முந்திரிப்பருப்புகளை தேவைக்கு ஏற்ப வாங்கலாம்.

அடுத்து சென்ற இடம் கர்கலாவில் உள்ள பாகுபலி கோமதீஸ்வரா கோவில், நாற்பத்தி இரண்டு அடி உயரமுள்ள இந்த சிலை ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டதாகும்.  கர்நாடகாவில் இரண்டாவது உயரமான சிலை இது. ( முதல் இடத்தில் இருப்பது சிரவனபெல்கோலா) 500 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சிலையின் பின்னால் சில தீர்த்தங்கரர்களின் சிலைகளும் அட்டென்சனில் வரிசையாக நிற்கின்றன. வெவ்வேறு பெயர்களிட்டு இருந்தாலும், என் கண்ணுக்கு ஒரு வித்யாசமும் தெரியவில்லை. அப்பிராணியான எனக்கு தெரிந்ததெல்லாம் உட்கார்ந்திருந்தால் புத்தர், நின்றால் மகாவீரர் அவ்வளவுதான். 

தெற்கு கனரா மாவட்டத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணன் கோவில் பற்றி கேள்விப்பட்டு அங்கும் சென்றோம். கோவிலை சுற்றிலும் விளக்குகள் இருக்க, வரிசையில் சென்றால், ஜன்னல் வழியே உள்ளே இருக்கும் கிருஷ்ணன் சிலையைப் பார்க்கலாம். 

அங்கிருந்து மீண்டும் மங்களூர் திரும்பும் வழியில் வருகிறது மால்பே கடற்கரை. தந்நிர்பவி, கௌப், பனம்பூர், சுரத்கல், உல்லால் என பல கடற்கரைகள் இங்கு இருந்தாலும், இந்த மால்பேக்கே மக்கள் அதிகம் வருகின்றனர். தூய்மையாக காட்சியளிக்கும் கடற்கரையில், ஒரு ஓரத்தில் பாராஷூட், இன்னொரு பக்கம் குதிரை சவாரி, சற்று தள்ளி பெரிய, பெரிய ராட்டினங்கள், தவிர்த்து அருகில் இருக்கும் செயின்ட் மேரி தீவிற்கு செல்ல படகு சவாரி என கலகலக்கிறது கடற்கரை. புதிதாகப் பிடித்த மீன்களை வறுத்து தருவது, வேகவைத்த நிலக்கடலைப்பருப்பு, சுட்டசோளக்கருது என நாக்கிற்கு தேவையானவையும் கிடைக்கின்றன.

அடுத்த நாள் சென்ற 104 கி.மீ தொலைவில் இருந்தது குக்கே சுப்ரமண்யம் கோவில். திருவிழாக்காலம் என்பதால், கோவிலின் முன்ன இருந்த தேர்கள், வண்ண வண்ண முக்கோணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்கு இடையே சீரியல் விளக்குகளும் இணைந்திருந்தன. இதற்கடுத்து சென்ற,  தர்மசாலா (மங்களூருவில் இருந்து 75 கி.மீ) மஞ்சுநாதர் கோவிலிலும் கூட்டம். உடுப்பி மற்றும் இந்த கோவில்களிலும் நீண்ட வரிசை இருந்தது. இந்தக் கோவில்களில் எல்லாமே உள்ளே இருக்கும் சிலை மிக சிறிய அளவில் ( 1 -11/2 அடிக்குள் ) இருக்கின்றன. பொதுவாக அன்னதானம் நடைபெறுகிறது. உடுப்பி தவிர்த்து மீதி இரண்டு கோவில்களும் மலைப் பாதையில் தான் செல்ல வேண்டும். ஆனாலும், அத்தனைக் கூட்டம். யாராவது தன்னை, தன் குடும்பத்தை சரி படுத்தமாட்டார்களா என்ற ஏக்கமும், இந்தக் கோவில்களாலேயே முடியும் என்ற நம்பிக்கையுமே அத்தனை ஜனத்திரளை அங்கே இழுத்து வந்திருக்கும். 

சுற்றுலாப் பயணம் என திட்டமிட்டு ஆன்மீகப் பயணமாகிவிட்டதோ எனக் குழம்பிவிட்டோம். 

அதற்கு அடுத்த நாள் சுல்தான் பத்திரி ( Sultan Bathery ) சென்றோம்.
குர்பூர் ஆற்றில் வரும் போர்க்கப்பல்களை தடுக்க, திப்பு உருவாக்கியது இந்தக் கட்டிடம். படிகளில் மேலேறி செல்ல வட்டமான பகுதி வருகிறது. ஓரடி இடம் இடைவெளி விட்டு, விட்டு அமைக்கப்பட்டிருக்கிறது சுவர்.  ஏறுகின்ற வழியிலும், சுற்றிலும் இருக்கின்ற சுவரிலும் தூரத்தில் வருபவர்களை, அவர்கள் அறியாவண்ணம் பார்க்க நீளவடிவில் துளைகள் உள்ளன. இந்த கண்காணிப்புக் கட்டிடம், பீரங்கித் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படிகளின் பக்கவாட்டில் உள்ள இரும்புக் கதவின் உள்ளே சுரங்கப் பாதை இருப்பதாக சிலர் சொன்னார்கள். திப்புசுல்தான் ஏறியப் படிகளில் ஏறி, மேலிருந்து எப்படித் தாக்குதல் நடத்தி இருப்பார் என மனம் போன போக்கில் கற்பனை செய்து இறங்கிய போது, என்னுள் ஒருவித பெருமிதம் படர்ந்திருந்தது. 


சயத் மதானி தர்ஹா... 500 வருடங்களுக்கு முன்பு மதினாவில் இருந்து வந்தவர். பல அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படுபவரின் தர்ஹா உல்லால் கடற்கரை அருகில் இருக்கிறது. அதற்கு முன்பாக சதுர வடிவில் நிதானமாக இறங்கி செல்ல எதுவாக படிக்கட்டுகளால் சூழப்பட்டுள்ளக் கிணறு கால்களை சுத்தப்படுத்தி செல்வதற்கு கட்டப்பட்டிருக்கிறது.

மதநல்லிணக்கம் எங்களுக்கும் இருக்கிறது என்பதற்காக விடுபட்டிருந்த ஒரு தேவாலயத்திற்கும் சென்று வந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறது மிளக்ரேஸ் சர்ச் ( Milagres church). 300 வருடங்களுக்கு முன்பு, கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் st Antony of paduva, உருவ சிலை இருக்கிறது.

மங்களூரை உள்ளால் பகுதியுடன் இணைக்கும் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆறு அத்தனை அழகு. பாலத்தில் செல்லும் போதும் பார்க்கலாம். தெற்கு கனரா மாவட்டத்தில் இருந்து கிளம்பி வருகின்ற இந்த நதி கேரளாவிற்குள் செல்கிறது.

பெஜாய் அரசு அருங்காட்சியகம்...
ஓலைச் சுவடிகள், காசுகள், செப்புப் பட்டயங்கள் எல்லாம் கால வாரியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றைத் தவிர, கொகாலு போன்ற இசைக்கருவிகள், மரங்களில் செதுக்கிய சிலைகள், விதவிதமான வாள்கள்,  பீரங்கிகள், குண்டுகள், வகைவகையான விளக்குகள் என நிறைந்து கிடைக்கிறது இங்கு. 11வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பார்சவநாதசிலை ஹொய்சாளர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. 12 வது நூற்றாண்டில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிற சரஸ்வதியின் சிற்பம் கொள்ளை அழகு. நுணுக்கமாகப் பார்த்தால் நுண்ணிய வேலைப்பாடுகள் பிரமிக்கவைக்கின்றன. சிலையை சுற்றிலும் இடைவெளி, அதனை ஒட்டி மிக சிறிய சிற்பங்கள், அற்புதமான அணிகலன்கள் என மெருகேற்றப்பட்டிருக்கும் சிலை நம்மை எளிதில் நகரவிடுவதில்லை. 13வது நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ள யோகா நிலையில் உள்ள சிவன் சிலை சாளுக்கியர் காலத்தியது. 

இந்த அரசு அருங்காட்சியகத்தின் வெளியே வந்தால், திறந்த வெளியில் கை, கால், மூக்கு உடைந்து, சிதைந்த நிலையில் இருக்கின்ற சில சிற்பங்கள் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சிதைந்தவைதானே, இன்னும் சிதைந்தால் என்ன என்ற எண்ணமோ என்னவோ...

பிலிகுலா ( Pilikula Nisargadhama ) துளு மொழியில் பிலி என்றால் புலி, குலா என்றால் ஏரி, முன்பு, புலிகள் இங்கிருக்கும் ஏரியை பயன்படுத்தி இருப்பதால் இப்பெயர் வந்தது. 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் குழந்தைகள் ரசிப்பதற்கென்று வாகனத்தில் சென்று விலங்குகளை கண்டு ரசிக்கும் வசதி,  படகு சவாரி போன்றவை  உள்ளன. 

உணவகங்களில் சாப்பாடு டோக்கனை கொடுக்கும் போது சிவப்பு அரிசியா, வெள்ளை அரிசியா என கேட்கின்றனர். ஒரு சிலரைத் தவிர பலரும் சிவப்பு அரிசி சோற்றையே சாப்பிட்டுக் கொண்டு இருப்பது தெரிந்தது. குழந்தைக்கு உணவூட்டும் அளவில் வருகின்ற வெள்ளை அரிசி சோறு, கொளகொளவென வைத்துள்ள கூட்டுகளில் பிசைந்து ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இத்துடன் கொடுக்கப்படும் சிறிய மூன்று பூரிகளே வயிற்றை நிரப்பிவிடும் எனக்கு.

நான்கைந்து கிலோமீட்டர் வரை மாலை வேளைகளில் நடந்த போதும் சரி, வாகனத்தில் சுற்றும் போதும் சரி, ஒரே ஒரு டீக் கடை கூட தென்படவில்லை. ஒரு டீக்கடை, ஓரத்தில் தட்டிப்போடும், வடை, பஜ்ஜி, போண்டா இல்லாமல் ஒரு ஊரா என அதிர்ச்சி, விரட்டி விரட்டி விசாரித்ததில்,  சிறிய உணவங்களில் உள்ளேயே அமர்ந்து நொறுக்குத் தீனிகளுடன் காபி,டீ போன்ற பானங்களை அருந்துகின்றனர். கோலி பஜே, (கோதுமை மாவு போன்டா) , பொடி ( பஜ்ஜி) இவற்றுடன் பேல் பூரி, பாவ்பாஜி போன்ற வகைகளும் அதிகம் விற்பனை ஆகின்றன. இது வரை கர்நாடகா ஸ்பெசல் என நினைத்திருந்த பிஸிபேளாபாத், வாங்கிபாத் மங்களூரில் தேடிய அளவில் கிடைக்கவேயில்லை. 

ஊரெல்லாம் தென்னை மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், குழம்பு, சட்னி, கூட்டு, பொரியல் என அத்தனையும் தேங்காய் அரவைக்கு மத்தியிலேயே தட்டுப் படுகின்றன. நாக்கில் படர்ந்த மழுமழுப்பு மிளகாய் சட்னிக்கு ஏங்கியது சோகக்கதை.

சுத்தமான சாலைகளில், ஒரே ஒரு சிலை கூட இல்லையே என யோசித்துக் கொண்டிருந்தேன். உல்லால் கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்த சிலையை, Rani Abbakka Chowta என்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்றனர். உல்லாலின் அரசியாக இருந்த இவர், போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக 16வது நூற்றாண்டிலேயே போராடியிருக்கும் முதல் சுதந்திரப் போராட்டப் பெண்மணி. உள்ளுக்குள் மெல்லிய மகிழ்ச்சி பரவியது. 

சிம்லா, கேங்டாக், பெங்களூர் போலவே இங்கேயும் உள்ள MG ரோடு, மக்கள் பொருட்களை சுற்றிப் பார்த்து வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது.

புது சூழல், காலநிலை, மக்கள் எல்லாம் சேர்ந்து அடர்ந்து போய் மனதின் உள்ளே கிடந்த சோர்வை நீக்கியது. இது தான் என இலக்கின்றி மூன்று நாட்களும் மனம் போல நடந்தும், வாகனத்திலும் சுற்றிய பயணம் கொடுத்த புத்துணர்வு பல நாட்களுக்கு நீடிக்கும்.


பிப்ரவரி 21 - தீக்கதிர் - வண்ணக்கதிர் இணைப்பில் வெளியான கட்டுரை. 

5 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஏற்கெனவே நான் இத்துணை இடங்களுக்குப்
போய் வந்திருந்ததால் உணர்ந்து படிக்க முடிந்தது

பாயசத்து முந்திரியாய் இடை இடையே
அள்ளித் தெளித்திருந்த நகைச்சுவை வரிகள்
இரசிக்கத் தக்கதாய் இருந்தது
(புத்தர், மகா வீரர், தென்னை மரம் )

பயணமும் பகிர்வும் தொடர நல்வாழ்த்துக்கள்

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

வண்ணக்கதிரிலேயே பார்த்தேன் அட நம்ம தீபா மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்.
நகைச்சுவையோடு பயண அனுபவம் படிக்கவும் பகிரவும் சுவையானது. தொடருங்கள். (ஏன் இப்பல்ல்ாம் ரொம்ப எழுததுறதில்ல..?) நாங்க எழுதுறதயாவது பார்க்கிறீங்களா?

Rathnavel Natarajan சொன்னது…

மங்களூர் பயணம் - இன்னும் நிறைய படங்கள் சேர்த்திருக்கலாம. ஒவ்வொரு இடங்கள் பற்றியும் விரிவாக 3 அல்லது 4 பகுதிகளாக, படங்களுடன் எழுதியிருக்கலாம். அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani

thambu சொன்னது…

மிக நேர்த்தியான பதிவு. இடை இடையே இழையோடும் நகைச்சுவை உங்கள் எழுத்தை அடையாளப் படுத்துகிறது .சென்ற இடத்தின் விஷேசங்களை மிகுந்த ரசனையோடு பார்க்கத் தூண்டும்வகையில் பதிவு இருப்பதால் அடுத்த முறை போக விரும்பினால் நாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சுற்றுலா மையம், அல்லது சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் பற்றிய தகவல்களும் தர முடிந்தால் அவசியம் பதியவும்.

பிரம்மாண்டமான கற்சிலைகள், சரித்திர நாயகர்கள் இருந்து புழங்கிய கோட்டை, கொத்தளங்கள் இவை தரும் உணர்வுகள் ஒரு வகை என்றால் இயற்கை எழில் கொஞ்சும் நதித் தீரமும், கடற்கரையும், மலைப் பிரதேசமும் தரும் உணர்வுகள் வேறு விதம்.இரண்டின் கலவையாய் ஒரு பதிவு, அருமை. சுற்றுலாப் பிரியர்களில் ஒரு வகை சாப்பாடு மற்றும் அங்கு மட்டுமே கிடைக்கும் பிரத்தியேகப் பொருட்கள் பற்றி அதிகம் யோசிப்பார்கள். உங்கள் பதிவுகள் என்றுமே அவர்களை மறப்பதில்லை :)

சென்றதால் உங்கள் மனது இலகுவானது போல் படிக்கையில் வாசகர்களான எங்களுக்கும் அதே நிலை. மேலும் செலவின்றியே இலகானதால் அடிக்கடி உங்கள் மனதை இலகுவாக்க பல ஊர்களுக்கும் சென்று அவசியம் அதைப் பற்றி பதிவிடுங்கள் :)

பாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான அனுபவங்கள், பகிர்வுக்கு நன்றி