சனி, 4 மே, 2013

நாகர்கோவில், திருவனந்தபுரம்...


by Deepa Nagarani (Notes) on Monday, May 14, 2012 at 1:58pm ( facebook )


மாடு மேச்ச மாதிரியும் ஆச்சு, மச்சினனை பார்த்த மாதிரியும் ஆச்சு", என்ற பழமொழிக்கேற்ப, ஓரிரு முறை மட்டும் பேசிப் பழகியுள்ள ராமமூர்த்தியின் தோழியின் திருமணத்திற்காக ஏப்ரல்  18 ஆம்  தேதி  நாகர்கோவில் சென்று, அப்படியே திருவனந்தபுரத்தையும்  சுற்றிப் பார்க்க கிளம்பிட்டோம்.

நாகர்கோவிலில், நிறைய இடங்களுக்குப் பின்னால், ஜங்ஷன் ஒட்டி கொண்டிருக்கும்.செட்டிக்குளம்  ஜங்ஷன், கோட்டாறு ஜங்ஷன் என்று. ஒரே ஊரில் இத்தனை ஜங்ஷன்களா, என்று குழம்பி, உள்ளூர்வாசியிடம் கேட்ட பொழுது, அவரின் பதில், நகர் என்ற அர்த்தத்திலேயே இந்த ஜங்ஷன் உபயோகிக்கப்படுகிறது என்று விளக்கினார்.

நாகர்கோவிலில் பெண்கள்  கேரளப் பெண்களைப் போலவே, தளர்வாய் தலை வாரி இருந்தனர். பெரும்பாலும், வயிற்றைத்தொடும் டாலர் சங்கிலிகளை அவர்கள் அணிந்திருந்தது வித்தியாசமாகப் பட்டது.

பார்க்கும் ஆண்களில் பாதி பேருக்கும் மேல், வேட்டி அணிந்திருந்தனர். ஒரு மாவட்டத்தின் தலை நகரில், இது போன்று பார்ப்பது அரிது.

கூர்ந்து கவனித்தால் ஒழிய, அம்மக்கள் பேசும் மொழி தமிழ் என்பது தெரியாது. கேரள ராகத்துடன், சிற்சில மலையாள வார்த்தை கலப்புடன் வசீகரிக்கிறது நாஞ்சில் வட்டார வழக்கு.

சென்ற முதல் நாள், திருமண உணவு விருந்தில், ரசம் முதல் பாயசம் வரை, அனைத்திலும், சுக்கு சேர்க்கப் பட்டிருந்தது. செரிமானத்திற்கு நல்லது என்றாலும், அந்த நேரம் சாப்பிட முடியவில்லை.  'சுக்குக்கு மிஞ்சின சொக்குப் பொடி இல்லை' என்பதை கடை பிடிக்கும் சமையல் போல.  படு இனிப்பாக பரிமாறப்பட்ட பருப்பு பாயாசம், அதன் மேலேயே , இனிப்பற்ற பால் பாயாசம் ஊற்றி சென்றது வித்யாசமாக இருக்கிறதே என்று எண்ணி முடிக்கும் வேளையில், என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, அதில் இனிப்பு பூந்தியை தூவி சென்றனர். அனைத்தையும் கலந்து சாப்பிட வேண்டுமாம்.
ஒரு வழியாக உணவை முடித்துக் கொண்டு  அறைக்கு திரும்பினோம்.

நாங்கள் தங்கி இருந்த விடுதியில், ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரே ரூம் சர்வீஸ்களில் ஈடுபட்டது மனதை சங்கடப் படுத்தியது.

சமமான சாலைகளிலேயே பயணப் பட்ட எனக்கு, அரை கிலோமீட்டர் கூட சமமில்லாத, ஏற்ற இறக்கம் நிறைந்த சாலைகள், அதில், ஒழுங்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், சீராக செல்லும் வாகனங்கள் வியப்பேற்றியது. இன்னொரு குறிப்பிடப்பட்ட வேண்டிய அம்சம், காணும் வீடுகள் அனைத்திலுமே ஏதேனும் செடிகள், மரங்கள் சூழ காணப்பட்ட பசுமை சூழல். ஒவ்வொரு வீட்டிலுமே, மா, பலா, தென்னை மரங்கள், குறைந்தபட்சம் இருந்தன. ஊர் மொத்தமும் வெக்கை குறைவாக இருந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அடுத்த நாள், காலை ஆறு மணிக்கெல்லாம், வாடகைக்கு அமர்த்திக் கொண்ட வண்டியில் கிளம்பி, திற்பரப்பு அருவிக்கு அதீத எதிர் பார்ப்போடு சென்றோம். நாகர்கோவிலிருந்து, நாற்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஒரே மாதிரியான வேகத்துடன், குறைவான அளவு உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர், பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. கீழே  போய் நின்றவுடன், சிறு சிறுக்கற்களை தாங்குகிற வலியில் எறிந்தால் ஏற்படும் உணர்வு, களைப்பை களைவது போல உணர்வை தந்தது. கூட்டம் மிக குறைவாக இருந்ததால், அதிக நேரம் அருவியின் நீரை மேலே வாங்கி கொண்டு அமைதியாக நிற்க முடிந்தது.

அங்கு இருந்த, உடை மாற்றும் அறை, புதிய உள்ளாடைகளில் ஒட்டி இருந்த நூற்றுக்கணக்கான ஸ்டிக்கர்களால் அழகு படுத்தப்பட்டு இருந்தது. யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை, இது போன்ற ஸ்டிக்கர் களை எல்லாம், குப்பையில் போட்டால் தோஷம் வந்து ஒட்டிக் கொள்ளும் என்று.

அங்கிருந்து கிளம்பி, மாத்தூர் தொட்டிப்பாலம் அருகில் செல்லும் பொழுதே வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. தரையில் இருந்து முப்பது மீட்டர்  உயரத்தில் அமைந்திருந்த ஒன்றரை கிலோமீட்டர் நீளமான பாலம், சுற்றில் நிறைந்து காணப்படும் மரங்கள், மலைகள், கீழே இருந்த பூங்கா என்று வேறு ஒரு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வை அளித்தது.

திருவனந்தபுரம் நோக்கி சென்ற வழி எங்கும், ரப்பர் தோட்டங்கள், இடை இடையே வீடுகள், குளிர்ந்த காற்று என்று அனுபவித்துக் கொண்டே சென்ற சாலையில், ஏகப்பட்ட திருப்பங்கள், வளைவுகள், சில இடங்களில் மிக குறுகலான சாலைகள் என்று திக் திக் பயணத்தை சாமர்த்தியமான ஓட்டுனரால், பாதுகாப்பாகத் தொடர்ந்தோம்.

மார்த்தாண்டத்திலிருந்து சாலைகள் அகலமாக இருந்தன, அதே ஏற்ற இறக்கங்களோடு இருந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த பல விதமான கடைகள், கட்டிடங்கள், போன்றவை நாகர்கோவிலுக்கு அடுத்த பெரிய ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் என்பதை சொல்லின.

எல்லைப் பகுதியில் இருக்கும் இடங்களில் உள்ள நல்ல விஷயங்களில் ஒன்று, அங்கு வசிக்கும் மக்கள், குறைந்தபட்சம் இரு மொழியில் திறமைப் பெற்றவர்களாக இருப்பர். களியக்காவிளை என்ற பகுதியில் பல இடங்களில், ஆங்கிலத்தையும் சேர்த்து மும்மொழிகளில் விளம்பரப் பலகைகள் இருந்தன. குழித்துறை என்ற இடத்தை தாண்டியதும், கேரளாவின்  பாரசாலா ஆரம்பாகிறது. இது வரை தமிழுக்குப் பழகி கொண்டிருந்த கண்கள், சடாரென மலையாளத்தை சந்திக்கின்றன, சில கிலோமீட்டர்கள், தூரத்தில். அரைகுறையாக அறிந்திருக்கும் மொழியை, எங்கு நோக்கினும், சரி பார்த்துக் கொள்வது நம்மில் அநேகருக்கு இருப்பது போல,  கீழே இருந்த ஆங்கிலத்துடன் தவறை சரி செய்து கொண்டே திருவனந்தபுரம் மிருக காட்சி சாலைக்கு சென்றோம்.

மிருக காட்சி சாலையில், அதிக கூட்டம், உள்ளே செல்ல, எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை, ஆனால், இவ்வளவு தூரம் வந்து விட்டு, இதனைப் பார்க்காமல் போனால் நன்றாக இருக்காது என்ற ஒரே காரணத்திற்காகவே உள்ளே போனேன். விரிந்த பரப்பில், சீரான இடைவெளியில், காட்டில் இருப்பது போன்ற அமைப்புடன், விலங்குகளின் அரிய வகைக்கு ஏற்ப அமைக்கப் பட்டிருந்த கூண்டுகளின் வரிசையில் சிங்கம், புலி போன்றவை கடைசியில் இருந்தன.
கூண்டில் அடைபட்டிருந்த புலி ஒன்று சில நிமிடங்கள்  எங்களுக்காக பூனை நடை நடந்து போனது, பிரத்யேக பயிற்சி இல்லாமல், வெகு அழகாக.
உள்ளே பாதி தின்று போட்ட இறைச்சியின் எச்சம் ஓரத்தில் கிடந்தது. என்ன சிங்கம், புலி என்று இருந்து என்ன செய்ய, மொத்த சுதந்திரமே இந்த ஐம்பது அடிக்குள் தான் அதற்கு என்று எண்ணிய பொழுது பரிதாபமே மேலோங்கியது.

அப்படியே சற்று தொலைவு சென்றால் வரவேற்கிறது வேலி பார்க் ....
சிற்பங்கள், பூச்செடிகள், தோட்டத்தால் ஆனது.  நடந்தால் கடல் மணல் கால் எங்கும் பரவுகிறது, நேராக சென்றால் படகு சவாரி செல்லலாம், இடது புறத்தில்,கொஞ்சம் நடந்தால், சிறுபாலம், அதனை கடந்தால், மிகக்குட்டி தீவு, அங்கு குதிரை சவாரி உட்பட, கடற்கரைக்கு உரிய அனைத்து அம்சங்களும் அனுபவிப்பதற்கு உண்டு.

சீரற்ற சாலைகள், சீரான கட்டிடங்கள்,  பார்க்கும் இடமெல்லாம் மரங்கள் செடிகள் என்றுத் தொடர்ந்த பயணத்தின் அடுத்த கட்டமாக கோவளம் கடற்கரை; மிக அழகாக இருந்தது . கிட்டத்தட்ட ஒரு  நெட்டு குத்தலான பாதையில் இறங்கினால் அடையலாம்.(ஓட்டுனர் அந்த வழியில் தான் சென்றார்)  அங்கு, ஒரு புறம், பாறை, மரம், செடி, மலை உடன், எல்லையற்ற கடலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் அலைகள், குதித்து ஆட்டம் போடும் மக்கள் என்று வண்ணமயமாக இருந்தது. லேசாக தூறல் ஆரம்பிக்க, சட்டென்று மாறிய வானிலை அனுபவிக்க ஆரம்பித்தோம்.

கேரளாவில் நிறைய இடங்களில் காணப்பட்டது, கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தமான விளம்பரப் பலகைகள், கொடிகள். சிறிய அளவில், காங்கிரஸ் கட்சியின் விளம்பரங்களும் காணப்பட்டன. கோவளம்  கடற்கரை செல்லும் வழியில் கார்ல் மார்க்ஸ் சிலை. இவை எல்லாமே நாம் தமிழ் நாட்டில் இல்லை என்பதை நினைவுபடுத்தின.  :)

திரும்பிய சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த திரைப்பட சுவரொட்டிகளில், மம்மூட்டி, மோகன்லால், ப்ருத்வி ராஜ், கலாபவன் மணி உள்ளிட்டோருடன், நம்மூர் சசி குமாரும் சிரித்து கொண்டிருந்தார். ஒரே ஒரு போஸ்டரில் மட்டுமே அழகான நடிகையின் படம் இருந்தது, யார் அது என்று உற்று நோக்கும் பொழுதுதான் தெரிந்தது, அது நடிகர் திலீப் பெண் வேடமிட்டு நடித்தப் படம் என்று. என்ன ஆயிற்று கதாநாயகிகளுக்கெல்லாம்? ஊர், உலகத்துக்கே (சிறந்த!?) கதாநாயகிகளை வழங்கிக் கொண்டிருக்கும் கேரளாவில், அவர்கள் ஊரில் வெளியாகும் படத்தில் ஒருவரைக் கூட காணவே காணோமே... எல்லாரும், கோலி வுட், பாலி வுட் , என்று பரபரப்பாக இருக்கின்றனரோ? :P

கோவளம் கடற்கரையில் கண்ட அரபிக்கடலும் சரி, கன்னியாகுமரியில் பார்த்த இந்து மகாசமுத்திரமும் சரி, சென்னையில் காணும் வங்காள விரிகுடாவும் சரி, நீர், குணம் எல்லாம் ஒன்று தான். பேர் தான் வேறு வேறு வைத்திருக்கிறோம்.

எந்த மாநிலத்தில்/நாட்டில்  இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒன்று தான்.
நீராய் இல்லாமல் போனதாலோ,என்னவோ பல காரணிகளால் மாற்றப்பட்ட மக்களின் மனங்கள்.

மகிழ்ச்சியாக/வசதியாக இருப்பதற்காக என்று  பிரித்து வைக்கப்படும்  சில  விஷயங்கள், சில நேரங்களில்  சங்கடத்திலே கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன.

சற்றே கனத்த இதயத்துடன் ஊர் திரும்பினேன்.

அப்பாவின் இளவரசி !


by Deepa Nagarani (Notes) on Monday, April 2, 2012 at 11:11am ( facebook )
 
 
18.12.1977 அன்று ஞாயிற்றுகிழமை. மதுரையில் நான்  பிறந்த பொழுது, என் அப்பா ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதற்காக  சென்னைக்கு  சென்றிருந்தார். தொலைபேசி வசதி அபூர்வமாய் இருந்த நாட்கள்  ஆதலால், அம்மா, அன்றைக்கே நான் பிறந்த செய்தியை கடிதத்தின் வாயிலாக தெரியப்படுத்தி அனுப்ப செய்திருந்தார். ஒரு வாரம் கழித்து வந்த பதிலில், " என் வாழ்கையின் முதல் தோல்வி எனக்குப் பிறந்த பெண் குழந்தை, ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று எண்ணி இருந்த என்னை ஏமாற்றி விட்டாய் " - என்கிற ரீதியில் தொடரும் அந்த கடிதம் இன்றும் எங்கள் வீட்டில் உள்ளது. கடிதத்தை வாசித்த அம்மா, அழுது கொண்டிருந்ததை கவனித்த உறவினர் ஒருவர் "தலைப் பிள்ளை பெண் பிறந்ததற்கா இப்படி? நீ கவலைப் படாதம்மா, உன் மகள் பெரியவளானதும் இதை பத்திரப்படுத்தி காட்டு " என்றிருக்கிறார்.

போட்டிகள் எல்லாம் முடிந்து வந்த அப்பா, தொட்டிலில் இருந்த என்னைப் பார்த்து,  எடுத்து கொஞ்சி, அம்மாவை சமாதானப்படுத்தினார். அதன் பின் எத்தனையோ போட்டிகள் என்று பல ஊர்களுக்கு சென்ற பொழுதும்,  அனுப்புகிற கடிதங்களில் எல்லாம், "மக எப்படி இருக்கிறா, என்ன செய்றா, அவளை நல்லா கவனிச்சுக்கோ " என்று தவறாமல் எழுதி இருப்பார்.

எனக்கு மூன்றரை வயதான பொழுது, தம்பி பிறந்தான். அப்போது, அம்மா, சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் அவரது தாய் வீட்டில் இருந்தார், நான் அப்பாவுடனே இருந்தேன். மாலை வேளைகளில் மட்டும், மிதி வண்டியில் என்னை முன்னால் உட்கார வைத்து அம்மாவைப் பார்க்க அழைத்து செல்வார். தம்பியைக் கொஞ்சி விட்டும் திரும்பும் பொழுது இருட்டிவிடும். போக்குவரத்து குறைவான சாலைகளில், முன்னால் உட்கார்ந்து கொண்டே "அந்த வண்டியை முந்துங்க, இந்த வண்டியை, என்று கத்திக் கொண்டே சொல்ல சொல்ல, ஒவ்வொரு வண்டியாக என் சொல்லுக்காக முந்திக் கொண்டே  சென்ற  அதே குருவிக்காரன் சாலையில் சமீபத்தில், அப்பாவை பின்னால் உட்கார வைத்து நான் சென்ற பொழுது, " பார்த்து மெதுவா போ " என்றார் கனிவுடன். :)
நான் சைக்கிள் ஓட்டக் கற்று கொண்டதிலிருந்து என் ஒவ்வொரு சின்ன சின்ன கற்றுக் கொள்தலையும்   பெருமையுடன் பாக்கிறார் இன்று வரை.  பள்ளி நாட்களில், நானும், அவரது ஹாக்கி விளையாட்டை விளையாடி மாவட்ட அளவில் வென்ற பொழுது, அளவில்லாத சந்தோஷத்துடன், தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும் பொழுதெல்லாம் அடிதடியில் இறங்கி விடுவோம். (அடி அவன் தான் வாங்குவான், ஆனால், அழுவது மட்டும் நானாக இருக்கும்  )  ஏற்கனவே பரபரப்பான,காவல் துறையில் பணி புரியும் பொழுது, அவர் வீட்டில் இருக்கும் ஓய்வு நேரத்தில், எங்கள் இருவரின் கூச்சல் எரிச்சல் கிளப்ப, மொத்த அடியும் தம்பிக்கு  தான் விழும். பேருக்கு, வலிக்காமல், என் முதுகில் ஒன்று விழும்.

ஒரு நாள், கேட்டேன்,

ஏன், நான் பிறந்த பொழுது அப்படி ஒரு கடிதம் என்று

"இல்லம்மா, அப்போ, பொண்ணு பிறந்தாலே, நீ சேட்டை பண்ணின அதான் பொண்ணு பிறந்திருக்குன்னு கிண்டல் பண்ணுவாங்க, எனக்கு அதான் முதலில ஓடுச்சு, அதான் அப்படி எழுதினேன்"  - என்ற பொழுது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இன்று வரை, என் தம்பியையும் என்னையும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் தான் கவனிக்கிறார்.

பள்ளி இறுதி ஆண்டு பயிலும் பொழுது, ஒரு முறை அப்பாவிடம் கேட்டேன் " யாராவது  இது எங்க குழந்தை, மாறி விட்டது என்று சொன்னால், என்ன செய்வீங்க? " , அதற்கு " ஒரு நாள் மட்டும், இங்க இருந்து உன்னை கவனிக்க சொல்வேன், அப்புறம் என்ன அவங்க கிளம்பறப்போ, எவ்ளோ பணம்னாலும், வாங்கிக்கோங்க, எங்களுக்கு வேணாம்னு  ஓடிடுவாங்க " என்று விளையாட்டுக்கு சொன்னாலும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது கூட  தினந்தோறும் பள்ளியில் இருந்து நான் திரும்புவதைக் கூட, " என் பொண்ணு  ஸ்கூல் ல இருந்து வந்துட்டா " என்று  மகிழ்ச்சியுடன் பகிர்வதைப் பலர் பொறாமையுடன் கூட பார்த்துள்ளனர்.

பத்தாம் வகுப்பில், எண்பது சதவீத மதிப்பெண் பெற்றிருந்த பொழுதும், கணக்குப் பிடிக்காது என்ற காரணத்திற்காக, மூன்றாவது க்ரூப் எடுத்த பொழுதும், மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த கல்லூரி , என்ன படிப்பு, நாட்டு நலப்பணித்திட்ட முகாம், சுற்றுலா என்று எதையுமே தகவலாக மட்டும் சொல்லும் அளவிற்கு எனக்கு சுதந்திரம் இருந்தது. திருமணப் பேச்சு வந்த பொழுது, எனக்கு வெறும் இருபது வயது. இன்னும் இரண்டு வருடம் கழித்து தான், என்று நான் சொன்ன பொழுது, வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்த பொழுதிலும், சரி என்று என் பக்கம் நின்றார்.

இருபத்து மூன்று வயதில், மீண்டும் திருமணப் பேச்சு வந்த பொழுது, வருகின்றவர்களை ஏதேனும் காரணம் சொல்லி  மறுத்து வந்தேன் ஒரு வருடமாக. வெறுத்துப் போன, என் அப்பா,

 " ஏன் வேணாம்னு சொல்ற?...

சரி..என்ன? எந்த மதம், சாதியை, சேர்ந்தவராக இருந்தாலும், சரி, உனக்குப் பிடித்திருந்தால் போதும்..." என்று முழு சுதந்திரம் அளித்தார். (அப்படியும்  ஒரு அப்பாவியும் சிக்காததால், பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணமே நடந்தது வேறு கதை ... :P  )

டிசம்பர், 2002  , திருமணம் முடிந்து சென்னையில் புதுக் குடித்தனம் வைப்பதற்காக வந்த பொழுது, ஆவடியில்,  சற்று நேரம் ஒரு நடை போய் விட்டு வந்த பின் வந்த அப்பா , " இந்த தெரு முடியற இடத்தில browisng centre  இருக்கு, நீ பகல் நேரத்தில போர் அடிக்கிறப்போ போய்க்கலாம் " என்றார்.



ஏதேனும் விஷேசங்களுக்கு செல்லும் பொழுதும்  உடை பற்றி அவ்வளவு அக்கறை எடுத்து கொள்ளாமல்,  எதையாவது அணிந்து இருப்பதை மாற்றும்படி என் அம்மா எவ்வளவு கூறினாலும் கேட்கமாட்டார்.  நான் நல்லா இல்லை என்று சொன்னால் போதும் உடனே மாற்றிவிடுவார்.

சமீபத்தில், அப்பா, போக்குவரத்துத்துறை  காவல் ஆய்வாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தேனி மாவட்டத்திற்கு ஒரு திருமணத்திற்கு சென்றிந்தோம். வீட்டுக்கு வந்தவுடன், பேருந்து நிறுத்தத்திலிருந்து, சில கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்த மண்டபத்திற்கு ஆட்டோவில் செல்ல  ஐம்பது ரூபாய் கொடுத்தேன் என்று சொன்னதும் என் அப்பா, " ஐம்பது ரொம்ப அதிகம் " என்றார்.

என் தம்பி, " நீ அப்பா அங்க என்ன  வேலை பார்த்தார்னு சொல்லி இருக்கலாம்ல" என்றான்.

நான், " எதுக்கு சொன்னதுக்காகவே, நூறு ரூபாய் கேட்கவா.. " என்று சொல்லவும், சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு புரை ஏறியது சிரித்து சிரித்து. என் எளிய நகைச்சுவைக்குக் கூட அதிக அளவில் சிரிப்பார்.

என் உணர்வுகளை நான் சொல்லாமலே கூட பல நேரங்களில் அறிந்து இன்று வரை என்னை நான் உயர்வாக நினைக்கும் வண்ணம் நடத்தும் என் தந்தை..

என் பையனுக்கு ஆறு வயது ஆன பின்னும் கூட, என்னைக் குழந்தையாக தான் பார்க்கின்றார் .

இங்கு இணையத்தில் அடிக்கடி பார்க்கிற  ஒரு மேற்கோள்,
"அப்பாவுக்கு, மகள் எப்பொழுதுமே  இளவரசி "
எவ்வளவு சரியான வார்த்தைகள் இது...

நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. ஆனாலும், என் தந்தைக்கு மகளாக இருப்பதை விட பெரிய பெருமை எதுவும் இல்லை.

ம்ம்...  இப்பொழுது அறுபத்து நான்கு வயதாகும் என் அப்பாவுக்கு நான் என்றுமே இளவரசி தான்!  :)



பயணங்கள் முடிவதில்லை


by Deepa Nagarani (Notes) on Wednesday, December 14, 2011 at 1:28pm ( facebook )




இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதி கிருஷ்ணகுமாரின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தோம் .
பிரம்மாண்ட நதிகளின் சங்கமத்தில் ஒற்றை மழைத் துளியாய் நானும்...
நிறைய எழுத்தாளர்கள் விழாவைப் பற்றி எழுதியும், எழுதிக் கொண்டும், எழுதவும் இருப்பதால்,  எழுத்தாளர் வரிசையில் இல்லாத நான் குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் எடுத்து எழுதுவோம் என்று,  சென்னையில் இருந்து மதுரை வரை ரயில் பயணத்தை எடுத்துள்ளேன்.
12.12.2011, மதியம் 12 .15க்கு, பல்லவனாக வந்த ரயில், வைகையாக திரும்பியது... (நம்மிடம் ரயில் தோற்றுப் போய்விடும், ஒரு நாளில் குறைந்தது இரண்டு வேடங்கள் மட்டுமே என்றால்  நமக்கு பத்தாது)
மாதத்திற்கு  ஒரு முறையாவது ரத்தம்சிந்தி மருத்துவரை ச் சந்திப்பதை நோக்கமாக வைத்துள்ள எங்களது ஐந்து வயது மகன் விழாவிற்கு முதல் நாளே, மாடியில் விளையாடி தலையின் ஓரத்தில் ஒரு தையல் போடும் அளவு காயத்தை பெற்று, தலையைச் சுற்றிப் போட்ட கட்டுடன் ஏறினோம். விருப்பமான ஜன்னல் ஓர இருக்கை ஒதுக்கப்படாததால், வருத்தத்துடன் அமர்ந்திருந்தேன்.
கூட்டம் மிக அதிகமாக இருந்தததால், எங்கள் பெட்டியிலும், ரிசர்வ்  செய்யாமலே ஏறியவர்களால் கை கால் கூட அசைக்க முடியாமல், மிகுந்த வெப்ப காற்றுடன், ”இனிமே ரயில்ல வருவ?” என்ற கேள்வியைக் கேட்டு கொண்டே மிரட்டலுடன் ஒரு திகில் பயணத்தை ஆரம்பித்தோம். எத்தனை பேரிடம் இது  ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கை என்று கூறுவது.

TTE என்ற ஒருவர் விருதாச்சலம் தாண்டியபின் தான் உள்ளே வர முயற்சித்தார். ஒரு வழியாக திருச்சி வந்தபின் ஓபன் டிக்கெட் எடுத்தவர்களை வேறு பெட்டிக்கு மாறி செல்லுங்கள் என்று அவர் சொன்ன பொழுது, பெரும்பாலானோர் அவரவருக்கான நிறுத்தங்களில் இறங்கி சென்றிருந்தனர். திண்டுகல்லை நோக்கி சென்று சென்று கொண்டிருந்த பொழுது, எதற்கு என்றே தெரியாமல், squad  என்ற பெயரில், ஒரு பெண், அனைவரின் பயணசீட்டுகளையும் பரிசோதித்து கொண்டிருந்தார். திருச்சியில் இருந்து மதுரை வரை வசதியான பயணத்தை வழங்கிய தென்னக ரயில்வேக்கு எத்தனை நன்றி(!) சொன்னாலும் பத்தாது.

மகனின் தலையில் இருந்த கட்டைப் பார்த்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு  பெண்மணி,  தன் பிள்ளைக்கும் இப்படி ஒரு காயம் ஏற்பட்ட பொழுது தான் என்ன செய்தேன் என்பதை கூறி என்னையும் பின்பற்றச் சொன்னார், காதுகளில் பொருத்திய வயரில் பாட்டு  கேட்டு  கொண்டு இருந்த நான் சரி , ஆம் என்று மட்டும் சொல்லியும், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாகப் பேசி, என் கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்த துயர நாட்களை நினைவூட்டினார். 

முடியல... அடுத்து அடுத்து என்று அவராகவே, ஒரே பையனா என்றார் ஆம் என்றவுடன், காலகாலத்தில இன்னொண்ணு பெத்துக்கோ என்றார், நான் சிரித்ததும்,  ஜாதகம் பார்த்தியா, அதில சொல்லி இருப்பாங்களே என்று  இலவச ஆலோசனையும் வழங்கினார். அதற்கும் ஒரு புன்சிரிப்புடன் பாட்டு கேட்பதைத் தொடர்ந்தேன்.(கடவுளே சொன்னாலும் இன்னொரு பிள்ளை எல்லாம் விருப்பம் இல்லை என்று விளக்கி, அவருக்கு  விளங்க வைப்பதற்கு திறன் இல்லாததால் மௌனமாகவே இருந்தேன். வழக்கமாக இது போன்ற கேள்விகள் வரும் பொழுது,   உங்களுக்கு
ஏன்  இரண்டு, மூன்று பிள்ளைகள் என்று கேட்க உரிமை எனக்கு இல்லாத பொழுது... உங்களுக்கும் அந்த உரிமை என்னைக் கேட்க இல்லை என்பதே) ஒரே ஒரு கேள்வி கேட்டேன் "எங்க இறங்கனும் நீங்க".   "திருச்சி" என்றார்...
இனி 15 நிமிடங்களாவது ஆகும்.



எழுந்து கூட்டத்துக்குள் மிகவும் கஷ்டப்பட்டு கழிப்பறைக்குள் சென்றேன். இங்க தான் ஒரு ஆச்சர்யம். நீங்க நம்பித்தான் ஆகணும். எந்த ஒரு அசிங்கமான எழுத்துக்களும் இல்லாத கழிப்பறை. இது போன்று சுத்தமாக வைத்திருக்க உதவிய அந்த முகம் தெரியாத சகோதரர்களுக்கு நன்றி சொன்னேன் மனதுக்குள்.



கட்டுக்கடங்காத கூட்டத்திலும், நிலக்கடலை, சுண்டல், பழங்கள், புத்தகங்கள், இன்னும் பல பொருட்களை விற்று கொண்டு இருந்தனர் சில வியாபாரிகள். ஒருவர் அவர்களை திட்டியப்பொழுது, பழம் விற்கும் பெண் சொன்ன பதில் " எங்க பொழப்பே இது தான் ".

கால் நடக்க முடியாதவரும், கண் தெரியாத ஒருவர் பாடி கொண்டே யாசகம் பெற்றதும், வழக்கமாக காண்கின்ற காட்சிகள் தான் என்றாலும், இதற்கு ஒன்றுமே செய்ய முடியாதா  என வருத்தம்  ஏற்பட்டது. எப்பொழுதும் போலவே.

ரயில் ஒவ்வொருவரும் இருக்கைக்கு போட்டிப் போட்டு அமரும் பொழுது, ஏதோ, நிரந்தரமாக ரயிலிலேயே குடியிருக்கப் போவதைப்போல ஆயுத்தம் செய்கின்ற காட்சிகள் நகைச்சுவையாக இருந்தது.

காணும் இடம் எங்கும் தொங்க விட்டிருந்த மூட்டைகள் மற்றும் மனித தலைகளுக்கிடையே  வேடிக்கை பார்த்ததில், நீர் நிறைந்த ஏரியும், ஆறுகளும், குளங்களும் மனதை நிரப்பின.  வயல் வெளிகளையும் , தோப்புகளையும்  பார்க்கும் பொழுது எழும் மகிழ்ச்சி,  ஒரு செடியும் இல்லாத சில இடங்களை கடக்கும் பொழுது வடிந்து போனது.

கதவின் அருகில் நின்று வெளியே   வேடிக்கைப்  பார்ப்பது எனது எப்பொழுதுமான பயண வழக்கங்களில் ஒன்று. திருச்சியை கடந்திருப்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. பத்து நிமிடங்கள் வெளிக்காற்றை வாங்கியவாறே அடர்ந்த இருட்டில் எதையோ தேடிக் கொண்டு இருந்தேன்.  இந்த மகிழ்வைப் பொறுக்க முடியாத ஒரு நல்ல உள்ளம்,  சென்னையில் இருந்து எங்களுடன் பயணித்த  எண்பது வயது மதிக்க தக்க முதியவர், எழுந்து வந்து, "இங்கே நிக்காதம்மா, போய் உட்காரு" என்றார், கோபமாக சொல்லி இருந்தால், கேட்டு இருக்க மாட்டேன். குணமாக சொன்னதால், வேறு வழியின்றி, இருக்கைக்குப்  போய் அமர்ந்தேன்.


8 .50   க்கு வந்து சேர வேண்டிய வண்டி,  8 . 15 க்கே கூடல் நகரை அடைந்ததும், சந்தோசம், ஏனெனில், இன்னும், ஐந்து நிமிடங்களில் இறங்கி விடலாம் என்று.  ஆனால், அளவுக்கதிகமாக நேர்மையாகப்  பணியாற்றும் ரயில்வே  துறை சார்ந்த ஊழியர்களால்,  இருபது நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு, அலுங்காமல், குலுங்காமல், உண்மையிலேயே ரயில் போகிறதா என்று நம்மை குழம்ப வைக்கும் வேகத்தில் ஊர்ந்தது. நான் பந்தயம் கட்டுகிறேன், இப்பொழுதுதான், நடக்கப் பழகி இருக்கும் குழந்தை, நிச்சயம் நாங்கள் சென்ற ரயிலுடன் நடத்தால், எளிதாக ரயிலைத் தாண்டிச் சென்றுவிடும்.
ஒரு வழியாக மிகச்  சரியாக 8 .50  க்கு, மதுரையில் நின்றது.