ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

திருப்பரங்குன்றம் சென்ற சுய வரலாறு + 31வது பசுமை நடை!வழக்கம் போல இன்று காலை அலாரம் வைத்து, அது அடிப்பதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் ஐந்து நிமிடங்கள் முன்னதாக எழுந்து, அலாரத்தை அணைத்து, இருந்த ஓரிரு வேலைகளை முடித்துவிட்டு, பசுமை நடையின் 31வது நடைக்காக, வண்டியைத் திருப்பரங்குன்றம் நோக்கித் திருப்புகையில், ஆறுமணியைத் தாண்டி விட்டது.

அந்த நேரத்திலும் உலாப் போகின்றவர்களை தரிசிப்பதற்காக மேல் எழும்பியத் தூசியை கண்களிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு குளிர் கண்ணாடியை அணிந்திருந்தது, இரவு வேளையில் பயணிப்பது போல இருந்தது. செல்லூர் செல்லும் வரையில் ஓரிரு வண்டிகள் மட்டுமே சென்று கொண்டிருந்தன. செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள திருமண மண்டபங்களின் ஒலிப்பெருக்கியில் அந்த நேரத்திலேயே திரைப்படப் பாடல்கள் அலறிக் கொண்டிருந்தன.

அடுத்து வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து இறங்கியதும், பாதி மோசமான சாலையாகவும், மீதி சுமாரான சாலையாகவும் இருக்கும் ராஜா மில் ரோடில், எதிரில் அவ்வளவாக வண்டிகள் வராததால், எதிரில் சுமாரான சாலையில் ஏறி செல்ல முடிந்தது. இதே ரீதியிலான சாலையே  வடக்குவெளி வீதி, கீழ வெளிவீதி சந்திக்கும் இடம் வரை பரிதாபத்துடன் பார்க்கும். அப்படியே ரயில்வே ஸ்டேஷன் ஐ நெருங்கும் பொழுது, எங்கெங்கோ கிளம்பிய வாகனங்கள் நெருக்கி அடிக்க ஆரம்பித்தன. ஒரு பேருந்தை ஓவர் டேக் செய்து, முன்னேறும் ஒரு வாகனத்தின் பின்னாலேயே நூல் பிடித்தது போல செல்லும் பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளின் மனதிற்குள் தாங்கள் ஏதோ பெரிய திறமை சாலி என்ற நினைப்பிருக்கலாம். :)

அங்கிருந்த கட்டபொம்மன் சிலை, பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஐ சுற்றி, மதுரைக் கல்லூரி அருகில் உள்ள பாலம், மதுரையில் வேறு எங்கும் பார்க்க முடியாத சிறப்பு பெற்றது. அத்தனை வாகனங்கள் கடக்கின்ற பரபரப்பான முக்கியமான பாலம், குண்டும் குழியுமாக பாதி இருந்தால், மீதி குழியும், குண்டுமாக இருக்கும். (ஒரே ஒரு டோல் கேட்டில் வசூலிப்பதில், ஒரு நாள் வருவாயை ஒதுக்கினால் என்ன? கேட்டால், அது வேறு துறையாம், இது வேறு துறையாம்? )

காலை வேளையில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு குறைவாக இருந்ததால், விரைவாக திருப்பரங்குன்றம் சென்று, வண்டியைப் பூட்டி விட்டு, கூட்டத்தினரோடு கலந்தேன்.


 1056 அடி உயரத்தைக் கடக்க வேண்டும். கீழே இருந்து ஏற ஆரம்பிக்கையிலேயே, ஒவ்வொரு மலைப்படிகளின் உருவமும், கண் காணும் வரைத் தெரியும் பாதையும் சற்று அச்சத்தைக் கொடுத்தன. மற்ற மலைகளைப் போல் இல்லாமல் மேலே செல்லும் வரை, சீரான இடைவெளிகளில், மரங்களும், செடிகளும், தங்கள் இலைகளை அசைத்து, நம்மைக் குளிர்வித்து மேலே ஏற்றின. இளைப்பாறுவதற்கு என்று தனி இடம் தேவையே இல்லை. பாறையின் எந்தப்பகுதியிலும் சற்று கவனத்துடன் அமர்ந்து கொள்ளலாம்.


மேலே செல்ல செல்ல, வித விதமான வடிவங்களில், பெரிய அளவில் நம்மைத் தாங்கிக் கொள்ளப் பாறைகள் இருந்தன. செங்குத்தாக இருந்த பாறைகளில்,  பாறையை பெரிதாக சேதப்படுத்தாமல் ஒருவர் மட்டுமே நடக்கும் அளவிற்கு, மெலிதாக செதுக்கப்பட்ட படிக்கட்டுகள் இருந்தாலும், பழக்கமின்மையால் கூடுதல் விழிப்புணர்வுடன் நடக்க வேண்டி இருந்தது.


அரைமணி நேர நடைக்குப் பின் வரும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் கொஞ்சம் சமதளமானத் தரை நம்மை அமர அழைக்கும். அப்படியே உட்கார்ந்து விட்டால், வந்த வேலை என்ன ஆகும் என்று, சில நிமிடங்களிலேயே எழுந்து, அப்பா, அம்மா என்று வெளிப்படையாக வாய்விட்டு சிலரும், உள்ளுக்குள் உச்சரித்துக் கொண்டே பெருமூச்சை விட்டுக் கொண்டே பலரும் ஏறினோம்.


வளைந்து, நெளிந்து ரகரகமாக, எத்தனையோ வகையான மனிதர்களின் பாதங்களை தீண்டி இருந்தப் பாறைகள், எங்களையும் குறித்துக் கொள்ளும் என்று தோன்றியது.
வழக்கம் போல அங்கங்கே தங்கள் ஜோடிகளின் பெயர்களையும் சேர்த்து
 செதுக்கி இருந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, நிஜமாகவே அவர்கள் இணைந்து வாழ்கின்றார்களா என்று வினவத் தோன்றியது.


அந்தக் குன்றின் மேல், மாறுபட்ட உயரங்களில் உள்ளப் படிகளும், சில சரிவுகளுமே சற்றே எளிதாக்கின நடையை. அங்கங்கே நம் பாதங்களை தாங்கி உதவிய அத்தனைப் படிக்கட்டுகளையும் செதுக்கியவர்களின் முகம் தெரியாத கைகளைத் தொழுதேன்.


அழகர்கோவிலுக்கு அடுத்தப் படியாக இங்கு அதிக குரங்குகள் உள்ளன. எந்தத் தொந்தரவும் இல்லை. நாம் அவற்றைப் பார்ப்பது போல, அவைகளும், 'இவங்கல்லாம் வந்திருக்காங்க போல', என்பது போல பார்த்தன.
வியர்க்க விறுவிறுக்க உச்சியில் அமைந்திருந்த சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவை அடைந்தோம்.
பள்ளிவாசலுக்கும், தர்ஹாவிற்கும் உள்ள வேறுபாடு பற்றி, அங்கு உள்ள பெரியவர் விளக்கினார்.


கி.பி.1182 இல், மதுரை சுல்தானாக 12 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்தான் இந்த சிக்கந்தர் பாஷா. இவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்த தர்ஹாவிற்கு வருகை தரும் கேரள மக்களின் பின்னணி என்று விளக்கிய எழுத்தாளர் அர்ஷியாவின் உரை தெளிவானப் பல தகவல்களைத் தந்தது. இது வரை பல நூறு தடவைகளுக்கு மேலே கடந்தும், உச்சியில் தெரியும் தர்ஹா பற்றி தெரியாத தகவல்கள், நேரில் சென்று, அமர்ந்து உள் வாங்கிய இன்றைய நொடிகள்..... இனி கடக்கும் பொழுதெல்லாம், எனக்கும் இதைப் பற்றி தெரியுமே என்ற பெருமையுடன் மின்னி மறையும்.

திருப்பரங்குன்றத்தின் கீழே கந்தர்... மேலே சிக்கந்தர்...
பக்கவாட்டில் சமணர் சிலைகள்...... இவை எல்லாம் சமய நல்லிணக்க சின்னமாக திருப்பரங்குன்றத்தைக் காட்டுகின்றன.
நீண்ட உரைக்குப் பின், கீழே இறங்க ஆரம்பிக்கையில், மதுரையில் இருந்து கொண்டே, இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை இங்கு என்பது போல, தகிக்க ஆரம்பித்த சூரியனை, வழக்கம் போல செடிகளும், மரங்களும் தாங்கிக் கொண்டு, அவற்றின் பாதுகாப்பில் எங்களை இறக்கின. :)4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் பகிர்வின் மூலம், இன்னொரு முறை சென்று வந்த உணர்வு... நன்றி... பயணம் தொடர வாழ்த்துக்கள்...

Rathnavel Natarajan சொன்னது…

திருப்பரங்குன்றம் சென்ற சுய வரலாறு + 31வது பசுமை நடை! = அருமையான பதிவு. அற்புதமான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Deepa Nagarani

thambu சொன்னது…

//அத்தனைப் படிக்கட்டுகளையும் செதுக்கியவர்களின் முகம் தெரியாத கைகளைத் தொழுதேன்.// ஒவ்வொரு முறையும் பழைமையான கட்டிடங்களைப் (கோவில்,கோட்டை, கட்டிடம் மற்றும் பல ) பார்த்து ரசித்து சுற்றி வரும்பொழுது தோன்றும் ஒரு அற்புதமான உணர்வு இது. அதைப் போன்றே ஒவ்வொரு மத ஆதிக்கத்தின் பொழுதும் தங்களின் அடையளத்தை குறிக்க பெரும்பாலும் ஒரே இடத்தை தேர்வு செய்யும் மனித மனம் பற்றிய எண்ணம் எழுவதும் உண்டு எனக்கு.
ஊர் சுற்றி பல வருடங்கள் ஆகி விட்டது . அந்த நினைப்பை மீண்டும் துளிர்விடச்செய்து விட்டது உங்கள் நடைப்பயண பதிவு தீபா :)

s.arshiya சொன்னது…

அழகியலுடன்கூடிய நேர்த்தியான பதிவு தோழர். அருமையாக வந்திருக்கிறது. நன்றியும் வாழ்த்தும்.