திங்கள், 24 பிப்ரவரி, 2014

கறுப்பு ரிப்பன்...


தினந்தோறும் காலை வேளையில், தலையில் எண்ணை வைத்து, சிக்கெடுத்து, கோணலாக வகிடெடுத்து இரண்டாகப் பிரித்து பின்னிய ஜடையின் நுனியில் கறுப்பு ரிப்பனை வைத்து மீண்டும் பின்னி முடிச்சு இட்டு, மடக்கிய ஜடையை மேலே ஏற்றி, ஒரு சுற்று சுற்றி இறுக்கக் கட்டி,  விரிந்த பூ போல நான்கு இதழ்களுடன் சிரிக்கும் கறுப்பு ரிப்பன் பள்ளி நாட்களில் மிகவும் பிடிக்கும். விடுமுறை நாட்களில் மட்டுமல்ல, கல்லூரி சென்ற பிறகும் கூட வீட்டில் இருக்கையில் எல்லாம், கறுப்பு ரிப்பன் கொண்டு இரட்டைப் பின்னல் பின்னுவது வாடிக்கை. அப்பொழுதெல்லாம், எங்கள் பகுதியில் உள்ள, பேன்சி கடைக்கு சென்றாலே, எதுவும் நான் கேட்காமலேயே கறுப்பு நெற்றிப் பொட்டு, ரிப்பன் இரண்டையும் கவரில் போட்டு கொடுத்து விடுவர். வேறு எந்த வண்ணத்தையும் விட, கறுப்பு தலையில் இருப்பது தனியாகத் தெரியாது என்பதால் பிடித்த வண்ணமாகி இருக்கலாம். ரிப்பன் கட்டிய இரட்டைப் பின்னல் காலத்தைத் தொலைத்து பனிரெண்டு  வருடங்களுக்கு மேலாகி விட்டது. அடுத்த மாதம் வரப்போகும் வருணின் பள்ளி ஆண்டு விழாவில், அவன் நடிக்கின்ற கதாப்பாத்திரத்திற்கு தேவையானப் பொருட்களில் இந்த கறுப்பு ரிப்பனும் ஒன்று. இனிதான் கடைக்கு போய் வாங்க வேண்டும். ஆண்டு விழா முடியவும், ஏதாவது ஒருநாளைத் தேர்ந்தெடுத்து, இரட்டைப் பின்னலுடன் வீட்டிற்கு உள்ளேயே இருக்கப் போகும் மணித்துளிகளுக்காகக் காத்திருக்கிறேன். ரிப்பனின் வழியாக பள்ளிநாட்களை அப்படியே கையில் தூக்கி பரிசளித்து விடாது காலம் என்பது தெரியும். ஆனால், அந்த நாட்களில் பொங்கிய மகிழ்ச்சியின் சில துளிகளாவது, புதிய ரிப்பனை கட்டிக் கொள்கையில், ஒட்டிக் கொள்ளும் என்று நம்புகிறேன். :)

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய நினைவுகள்...

வாழ்த்துக்கள்...

thambu சொன்னது…

வாழ்வின் பசுமையான நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பலவற்றில் பின்னலுக்கும் இடமுண்டு. எளிமையான அதே சமயத்தில் அசைபோடும் மனதின் அழுத்தமான ஏக்கப் பதிவு. கொண்டாடுங்கள் தீபா :)

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அட அருமையான நினைவுகள்..அதில் ஒரு ஜடையை முன்னாலும் ஒரு ஜடையைப் பின்னாலும் போட்டுக்கொள்வோம்..ஆனா இப்போ முடியெல்லாம் கொட்டிப்போச்சு..
ரிப்பன் கட்டிப் பழைய நினைவுகளில் களிக்க வாழ்த்துக்கள்!