புதன், 18 பிப்ரவரி, 2015

தமிழ் கற்கவும் உதவும் டிவி

ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்காமல் உடைந்து கிடக்கும் பலூன்கள் ஊதப்படாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ' வேணாமா? அப்படியே வச்சிருக்க? ' என்றதும் 
' எனக்கு சரியா வரல, ' என்றான் வருண். ஏதேனும் வேலை பார்த்திருப்பானோ என்ற சந்தேகத்தில்  ஓட்டை இருக்கிறதா என பலூன்களை ஆராய்ந்தேன். குறையில்லாமல் இருந்தது. எடுத்து ஊத ஆரம்பித்தபோது தான் தெரிந்தது, கடைசியிலிருந்து உப்பி வராமல், ஊதும் இடத்திலிருந்து விரிவாகி லேசாக குறுகி மீண்டும் பெரிதாகி சிறுத்து என நீண்டு முடிந்தது பலூன். ஒவ்வொரு சிறிய பகுதியும் பெரிதாக பெரிதாக, 
' பிரம்மாதம், 
அற்புதம், 
வாழ்த்துக்கள், என்று குதூகலித்து உச்சரித்தபடி கைதட்டிய வருண், இறுதியில் 
'நீங்க சாதிச்சிட்டீங்க' என்றான். தமிழ் படிக்கத் திணறி திட்டு வாங்குபவன் பேசியதைக் கேட்டு,  கட்டுப்படுத்திய சிரிப்புடன் சற்றே யோசித்தேன். பிறகே தெரிந்தது அவன் தொடர்ந்து டிவியில் பார்க்கும் நிஞ்சா ஹட்டோரி, டோரேமான், போன்ற கதாப்பாத்திரங்களில் இருந்து கற்றது என. எப்படியோ நல்லபடியாக தமிழ் கற்று கொண்டால் சரிதான். :)

3 கருத்துகள்:

ezhil சொன்னது…

ஆமாம் தீபா என் கொழுந்தனார் மகன் நான்கு வயதுதான் அவன் பேசும் தமிழை என்னால் புரிந்து கொள்ள முடியலை விரைவாகத் தயாராகுங்கள் நேரத்திறகுள் சென்றடைய வேண்டுமல்லவா என்கிறான் நாம அவங்ககிட்ட தமிழ் கற்றுக்கொள்ளணும் போல

'பரிவை' சே.குமார் சொன்னது…

எப்படியோ கற்றால் சரி...
அருமை.

thambu சொன்னது…

உண்மையிலேயே என் அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்டது, பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டதால் உடன் படித்தவர்களை விட என்னால் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளவும், பேச்சு நடையை எளிதாக்கிக் கொள்ளவும் முடிந்தது. இந்திக்கும் அதே. பள்ளியில் படிக்கும் சூழலலை விட மனதுக்குப் பிடித்த சூழலில்,மனதைக் கவரும் வகையில் வடிவமைக்கப் பட்ட ஊடக படிப்பு உண்மையிலேய அருமை.
இன்னும் படக்கதைகள் என்ற அற்புத உலகுக்குள் வருண் சென்று சிறு வாக்கியங்களின் அமைப்பு,பிரயோகம் என மேலும் வளம் பெற வாழ்த்துக்கள். என்ன ஒன்று அதற்க்கான நேரம் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும். இந்த மாறுதல்களை உடன் இருந்து ரசித்து வழி நடத்தும் நேரம் எல்லா பெற்றோர்களுக்கும் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. மிக இயல்பான, சில பழைய நினைவுகளை தூசி தட்டிப் பார்க்க வைத்த பதிவு. அருமை :)