வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பசுமை நடை... (GREEN WALK)

பேஸ்புக், பிரபல பத்திரிக்கைகள், விஜய் டிவி என்று ஊடகங்கள் மூலம் அறியப்பட்டாலும், கடந்த 21.07.2013, அன்றே  பசுமை நடைக்கு (Green walk) செல்லும், சந்தர்ப்பம் எங்களால் உருவாக்கப்பட்டது. 

மாதம் ஒரு முறை, ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, மதுரையை சுற்றி உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, சிறுவர்கள் உட்பட நூறிலிருந்து, இருநூறு பேர் வரை வாகனத்தில் அழைத்து சென்று, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை பற்றி பேராசிரியர்கள், வரலாறு நன்கு அறிந்தவர்கள், தொல்லியல் நிபுணர்கள் மூலமாக விளக்க செய்து, நாம் நம்மை சுற்றி உள்ளவற்றின் சிறப்பை அறிந்து கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதே இந்த நடையின் நோக்கம். வெற்றிகரமான இந்த நிகழ்வின், இருபத்து நான்காவது நடையில் கலந்து கொண்டோம்.

இந்த நடைக்கு தேர்வு செய்யப்பட்ட இடம், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி என்னும் சிற்றூர். மதுரையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது.


அதிகாலையில் எங்களை பேருந்து உட்பட, நான்கு வண்டிகள் திணித்துக்கொண்டு சென்றன. மேலூர் செல்லும் வழியில் வரும் பாலத்தில், ஏறுவதை தவிர்த்து, கீழ் வழியாக சென்றால், அரிட்டாபட்டி என்ற பெயர் தாங்கியப் பலகை இடது நோக்கிய அம்புக்குறியிட்டு பாதை காட்டுகிறது. அதன் வழியே சென்றால், சில நிமிடங்களில் ஊர் வருகிறது. மிக குறுகலான சாலை, அதை ஒட்டியே அமைந்திருந்த வீடுகளின் முன்புறம், பாத்திரங்களை கழுவிக்கொண்டும், அடுப்பை ஊதிக் கொண்டும் பெண்கள், பல் துலக்கி கொண்டிருந்த சில சிறுவர்கள், கையில் பையோடு நடந்து கொண்டிருந்த சில ஆண்கள் என்று  இயல்பான காட்சிகளில் வரவேற்றது கிராமம். ஓரிரு தெருக்களின் வழியே ஊர்ந்து சென்ற பேருந்து, சில நிமிடங்களில், கண்மாயை ஒட்டிய இடத்தில் நின்றது. வழியெல்லாம் மரங்களுக்கு இடையே அரைகுறையாக பார்த்துக்கொண்டே வந்த மலையை பேருந்திலிருந்து இறங்கி, ஒரே பார்வையில் நோக்கும் பொழுதே உடனடியாக ஒட்டிக்கொண்டது ஒரு பிரியம்.

சமமான நிலத்தில் சில நூறு மீட்டர்கள் நடைக்குப்பின்பு, பிடித்துக் கொண்டு எளிதாக நடக்க  வேண்டும் என்பதற்காக இரண்டு புறமும் கம்பிகள் ஊண்டப்பட்டு, கீழேயும் கூட படி போல செதுக்கப்பட்டு, தான் எப்படி இருக்கிறோம் என்பதற்கான முன்னோட்டத்தை காட்டிவிடுகிறது மலையின் முகப்பு. உள்ளே சென்றதும் தொடரும் பாதை, ஆங்காங்கே செடிகள், மரங்கள், பாறைகள் என்று நீள்கிறது. பத்துநிமிட பயணத்தில் இருபது படிகளை ஏறி கடந்தால்,  கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பேரமைதியுடன் நமக்காக காத்திருக்கிறது. (இடைச்சி மண்டபம் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.) இந்த கோவில் சிறிய சதுரமான கருவறையில், லிங்க வடிவிலான சிவன் சிற்பத்துடன், சிறிய முன்மண்டபத்துடனும் அழகாக அமைந்துள்ளது. இரண்டு வாயிற்காவலர்கள் சிற்பங்களும், பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மாடங்களில், வலப்புறம் இலகுலீசர், சிற்பமும், இடப்புறம் விநாயகர் சிற்பமும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்துமே எழுத்து வடிவில் அதன் அருகிலேயே உள்ளன.

உட்காருவதற்கு ஏதுவாக இருந்த இடத்தில் ஒலிப்பெருக்கியின் துணையுடன், தெளிவாக அந்த இடத்தைப் பற்றின குறிப்புகளை சுவாரசியமான முறையில் எங்களுக்கு நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.

அதன் பிறகு மெதுவாக படிகளில் இறங்கி மீண்டும் வேகத்தைக் கூட்டி மண்ணும், பாறைகளும் கலந்த பாதையில் கவனமாக ஏறி சென்று கொண்டே இருந்தால், வலது பக்கம் திரும்பியதும் வரும் பெரிய ஆலமரத்தையும் கடந்த பின், இயற்கையாக அமைந்த குகையில் சமணர் உறைவிடம், உருவாக்கப்பட்டு இருப்பதையும், அதன் நெற்றியில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதையும் பார்க்கலாம். இங்கு, சமணர்கள் தவம் செய்திருப்பதையும் தவிர, வேறு எப்படி எல்லாம் அவர்கள் பொழுது போய் இருக்கும் என்று சிந்தனை பறந்ததை தவிர்க்க முடியவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நம் பாதங்களும் தற்பொழுது படிந்துள்ளது என்ற பெருமிதம் உள்ளே பரவுவதை உணர முடிந்தது. பொது மக்கள், இக்கற்படுகைகள் கொண்ட குகையைப் பஞ்ச பாண்டவர் படுக்கை என அழைக்கின்றனர்.

1. நெல் வெளிஇய் கிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்
2. இலஞ்சிய்எளம் பேராதன் மகன் எமயவன் இவ் முழ உகை கொடுபிதவன்

இவை இரண்டும், இங்கு மேலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ளவை. சங்ககாலப் பாண்டியர்களின் பேராதரவில் இக்கற்படுக்கைகள் கொடையளிக்கப்பட்டுள்ளன என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்குகைக்கு வலப்புறத்தில் சுமார் இருபது அடி தொலைவிலேயே பாறையில் மகாவீரர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

ஸ்ரீ திருப்பிணையன் மலைப் பொற் கோட்டுக் கரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக் குடியார் ரக்ஷை
- என்ற இவ்வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் இந்த ஊரின் பெயர் பாதிரிக்குடி என்பதும், இம்மலை திருப்பிணையன் மலை என பெயர் பெற்றிருந்தது என்பது நமக்கு தெரிய வருகிறது. மதுரைப் பகுதியில், கி.பி. 9 -10 ஆம் நூற்றாண்டில் சமணம் மறுமலர்ச்சி பெற்று எழக் காரணமாக இருந்த அச்சணந்தி என்னும் துறவியே இச்சிற்பத்தை உருவாக்கி இருக்கலாம்.

இடது புறத்தில் தெரியும், தற்பொழுது தண்ணீர் இல்லாமல், வறண்டு கிடக்கும் ஆனைக்கொண்டான் கண்மாயில் சமீபத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ள தகவல் முக்கியமான ஒன்றாகும்.

வந்த வழியே திரும்பி வந்து, ஒரு சிறிய வெளியைக் கடந்தால், ஆங்காங்கே உச்சியில் தனியாக நின்று கொண்டு  மிரட்டும் வெவ்வேறு வடிவிலானப் பாறைகள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகின்றன.

சற்று, சரிவாக உள்ள நீண்டு கொண்டே செல்லும் மலைத்தொடரில், திரும்பி பார்க்காமல், சில இடங்களில் நான்கு கால்களாக்கிக் கொண்டு ஏறினால், வேகவேகமாக மூச்சை விட்டுக்கொண்டே, ஓரளவு நன்றாக நின்று கொண்டு கீழே ஏறிக் கொண்டிருப்பவர்களுக்கு குறிப்புகள் கொடுக்கலாம்.

மெதுவாக நடக்க, நடக்க..... சற்று சரிந்து, சில இடங்களில் இயற்கையிலே பிளந்து, திரும்பும் இடங்களில் எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது தொடர்ந்து வந்து கொண்டே இருந்த பாறை. ஏறும் பொழுதே  நெருக்கமாக பேசும் பாறையின் மொழியை பாதங்கள் முழுவதும் உள்வாங்கிக் கொண்டே வர இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காக கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டேன் காலணியை. எப்பொழுதும் பேசிக்கொண்டே தான் இருக்கிறது இயற்கை. வெயில், மழை, பனி என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. நமக்கு தான் நேரமும், மனதும் வாய்ப்பதில்லை. :)




எண்ணற்ற காலங்களாக, எத்தனையோ வகையான மனிதர்களை சந்தித்து உறுதியோடு  நீண்டு கொண்டே செல்லும் மலைத்தொடரில், ஊற்று நீர் வடிந்து சென்ற தடங்கள் பல இடங்களில் உள்ளன. (ஊற்று நீர் பாசனம் அவ்வூரில் முன்பு இருந்தது)

மேலே நடந்து கொண்டே சென்ற பொழுது இடது புறத்தில் தூரத்தில் தெரிந்தது, சற்று முன் சென்ற குடவரைக் கோவில். இரண்டு புறங்களும் இயற்கைக் காட்சிகளை தரிசித்துக் கொண்டே காலாற நடக்க, நடக்க, பெரும் புத்துணர்வு காற்று ஐம்புலன்களின் வழியாக உள்ளே கலந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

எங்களை உற்று நோக்கிக் கொண்டே நின்ற சில பனைமரங்களை ஒட்டி தென்பட்ட பாறையில் மெது மெதுவாக,  கீழே இறங்கி, பெரிய வெளியை மிக கவனமாக நடந்து முடித்தால், நாம் உள்ளே நுழைந்த பொழுது கைபிடிக் கம்பிகளுடன் இழுத்துக் கொண்ட படிகள், இனி, உங்களுக்கு எங்கள் வசதி தேவையில்லை என்பது போல பார்த்தன.

குழந்தைகளை மால்களுக்கு அழைத்து சென்று செலவிடும் நேரத்தை விட, மலைகளுக்கு அழைத்து சென்று, வரலாற்றை நேரடியாக அறிய  செய்வது, பள்ளியில் சொல்லித்தராத அவசியமானப் பாடங்களை சொல்லித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

நிறைவான நடையுடன், செறிவான தகவல்களுடன், எளிமையான மனிதர்களுடன் ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுது, மதுரையிலேயே இத்தனை ரம்மியமாக கழிந்தது கண்டு பெரும் மகிழ்ச்சியுடன், தொடர்ந்து, இனி வரும் பசுமை நடையில், தவறாமல் கலந்து கொள்வேன் என்று விடை பெற்றேன்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 25 ஆவது பசுமை நடை, கீழக்குயில்குடியில், அரைநாள் கொண்டாட்டமாக நடை பெற உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.

பசுமை நடையில் நீங்களும் கலந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பசுமை நடை,
3 / 351, கார்த்திகா நகர், தணக்கன்குளம், திருநகர்,
மதுரை - 625 006
மின் அஞ்சல் : greenwalkmdu@gmail.com
அலைபேசி : 97897 25202, 97897 80105

1 கருத்து:

Unknown சொன்னது…

இது போன்ற செய்திகள் ஆர்வத்தை தூண்டுகின்றன, எனக்கும் இது போல் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை..... இதற்க்கு ஏதேனும் வெப்சைட் உள்ளதா ? இல்லையென்றால் உருவாக்கி உங்களது அடுத்த பசுமை நடை, சென்று வந்த இடங்கள் என்றெல்லாம் சேர்த்தல் பயனுள்ளதாக இருக்குமே. நன்றி !