வியாழன், 27 பிப்ரவரி, 2014

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை...

கடந்த சில நாட்கள் மட்டும் காலை உணவாக பழங்கள் எடுத்துக் கொண்டதில், மூன்று நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் பழங்கள் சாப்பிட்டேன். முதல் பழத்தை சாப்பிட்டு முடித்திருக்கையில் இடது கடைவாய்ப் பற்களுக்கு இடையே சிறிய அளவிலான சக்கை சிக்கித் துன்புறுத்திக் கொண்டிருந்தது. விரல் நகத்தாலேயே எடுத்துப் போட்டு விட்டு, மீண்டும் பழங்களை சாப்பிட்ட பொழுது ஒவ்வொரு முறையும் சிக்கிக்கொண்டு இருப்பது போல இருந்தது. நாவால் துளாவியும், கைவிரல் நகங்களாலும் எடுத்துப் போட்டுக் கொண்டே கடமையை முடித்தேன். அதற்கடுத்த நாளும், இடது தாடை சற்று வலி கொடுத்ததால் தவிர்க்கலாம் என்று எண்ணியதை தவிர்த்து, மீண்டும் ஆரஞ்சுப் பழங்களை உரித்து சாப்பிட, சாப்பிட வலியின் அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. காபி அருந்தும் பொழுது மட்டும், அதன் வெப்பம் பட்டு மட்டுப்பட்ட வலிக்காக, வழக்கத்தை விட கூடுதல் காபி அருந்தினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை வேளையில் வலி உச்சத்தை நெருங்கி இருந்தது. எங்கேயோ படித்த குறிப்பு நினைவுக்கு வர, சமையலறையில் கிராம்பை தேடி கடவாய்ப் பற்களுக்கு இடையே வைத்து அதக்கிக் கொண்டேன். மெதுவாக அழுத்திக் கடிக்கையில் இறங்கிய சாறு, எளிறுகளில் பரவ, வலி கண நேரத்தில் மறைந்து போனது. பரவாயில்லை என்று என்னையே பாராட்டிக் கொண்டிருந்த பொழுது, கிராம்பின் சாறு காலியாகி, அதன் உருவமும் தூளாகி இருந்தது. மீண்டும் அதே வலி. வரிசையாக ஏழு கிராம்புகள், அரைமணி நேரம் வலியை தாக்குப்பிடிக்க, பழையபடி அதே வலி, கூடுதலாக நாக்கின் ஓரங்கள், கடவாய்ப் பற்களின் எளிறும் பொத்துப் போய் இருந்தன. அரைகுறை தூக்கத்துடன் வலியை சுமந்து, நேற்று காலையில் கிரீன் வாக், மற்றும் கூழாங்கற்கள் கூட்டத்திற்கு தொடர்ந்து வருகை தரும் பல் மருத்துவர் ராஜண்ணாவை மொபைலில் தொடர்பு கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டே விஷயத்தை சுருக்கமாக சொன்னேன். இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிளினிக்கிற்கு, நேரில் வந்தால் தான், சரியாக சொல்ல முடியும் என்றார்.


விரட்டிய வலியால் காலை ஒன்பதே முக்காலுக்கு எல்லாம், கிளினிக் உள்ளே நுழைந்தேன்.
" முகம்  ஒரு பக்கம் வீங்கி இருக்க மாதிரி இருக்கே?"
" நீங்க போலி டாக்டர் இல்லைல, ஏன்னா, பொதுவா வீக்கம் இருக்குனு சொன்னாலும், அப்படியெல்லாம் இல்லையேனு தானே சொல்லணும்"

என்ற பதிலில் டென்சன் ஆன டாக்டர் முகத்தைப் பார்த்து, சற்று உள்ளே மிரண்டு, கடவாய்ப் பல்லை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பதறி,
"என்னை எப்படியாவது காப்பாத்திருங்க டாக்டர் , நெறைய வேலை பாக்கி இருக்கு, ப்ளீஸ் ... " என்றதும், சிரித்துக் கொண்டே பிரத்யேக இருக்கையில் அமர சொன்னார். ( நின்று கொண்டே வேலை பார்க்கும் மருத்துவர் - பல் மருத்துவர் :P )


விதவிதமாக, பற்களின் குறைபாட்டை கண்டறிய, சரி செய்யவென, ஏகப்பட்ட கருவிகளை அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஆ காட்ட சொல்ல, வாயின் உள்ளே சிறிய கண்ணாடி மாதிரி தெரியும் கருவியை வைத்து, சிறிய ஊசி முனையைக் கொண்ட மற்றொரு கருவியால், இரண்டு பற்களுக்கு இடையே இருந்த ஆரஞ்சு துணுக்குகளை எடுத்த பின், அதை விட இன்னும் மெல்லிய ஊசியால் எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, " உலகம் அழியப்போகுதுனு ஊர்ல இருக்கிற ஆரஞ்சை எல்லாம் சாப்பிட்டீங்களா?", என்று கேள்வி கேட்டார்.
(வாய் பேச முடியாத நிலையில் இது போன்ற கேள்வியைக் கேட்டவரிடம், சைகையில் பதில் சொல்ல முயற்சிக்கவில்லை. :P )


முதலில் சிக்கிய மெல்லிய துணுக்கு உள்ளே மாட்டிக் கொள்ள, தொடர்ச்சியாக சில துணுக்குகள் அடைத்துக் கொள்ள, நகத்தை உபயோகிக்கும் பொழுதெல்லாம், அது எளிறை அழுத்தி அழுத்தி உண்டாக்கிய வலியை, வழக்கம் போல, பட்டது போதாது இன்னும் வேண்டும் எனக்கு என்பது போல கிராம்பின் உதவியால் பொத்துப் போக செய்திருக்கிறேன். இறுதியில் ஸ்கேலிங் என்று பற்களை சுத்தம் செய்த பிறகு, முக்கால் வாசி வலி குறைந்திருந்தது.

எஞ்சி இருந்த பொத்துப் போனதால் ஏற்பட்ட வலியும் கூட இரண்டு  நாட்களுக்குள் சரியாகும் என்றவாறு மாத்திரை, மருந்து எழுதி கொடுத்தார். இது போன்று மீண்டும் நிகழாமல் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு, மாறுபட்ட அளவுகளில் அமைந்த மேற்பரப்பைக் கொண்ட ப்ரஷ் உபயோகிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.

"சரி, இந்த மாத்திரை எல்லாம் எங்க கிடைக்கும்?"
"எந்த மெடிக்கல் ஷாப் லயும் வாங்கலாம்."
"அய்யே, இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் கீழே விளம்பரம் கொடுத்திருக்கிற கடைல தான் வாங்க சொல்லணும், அப்போ தான், அவங்க திரும்பவும் உங்களுக்கு இது மாதிரி நோட்டு அடிச்சுக் கொடுப்பாங்க', "
என்றதும்,
'"வீட்டில தேட போறாங்க, கிளம்புங்க "
"இருபது நிமிஷத்தில வந்திருவேன்னு சொல்லியிருக்கேன். சரி எவ்ளோ பீஸ்?"
அதெல்லாம் வேணாம், ரத்னவேல் அப்பா, உங்களை மகள்னு சொன்னா, என்னை மகன்னு சொல்றார். அப்புறமென்ன... பீஸ், எல்லாம் வேணாம். மாத்திரை மறக்காம சாப்பிடுங்க"
" எல்லாம் சரிதான், ஆனா, பேஸ்புக் ல, இலவசமா வைத்தியம் பார்க்கிற டாக்டர்னு வால்ல ஹாஸ்பிடல் அட்ரஸ் போட்டுருவேன், ஒ.கே?".
"பீஸ் கொடுத்திட்டுக் கிளம்புங்க".
"குட்...  :)

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை - இந்தப் பழமொழி செயல்முறையில் நான் தெரிந்து கொண்ட நாள். எப்படியோ இப்பொழுது இரண்டாவது வலியும் சரியாகிவிட்டது. :)

5 கருத்துகள்:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

ஆஹா..இப்போதான் ஒரு ஆரஞ்சை உள்ள தள்ளிட்டு வந்தேன்..
உங்களுக்குச் சரியானதே..அதுக்கு மகிழ்ச்சி.

Rathnavel Natarajan சொன்னது…

பல் வலி வந்தது வேதனை தான். அதையும் விவரித்த எழுத்தாற்றல் அற்புதம். வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani அருமை மகன் Rajanna Venkatraman எனது பக்கத்தில் பகிர்கிறேன். I ask my Sons - Saravanan Rathnavel, Rajavel Ramarajan - to read & record their comments. Fantastic writing. Heartiest Wishes.

கார்த்திக் சரவணன் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க.... வாழ்த்துக்கள் சகோதரி....

thambu சொன்னது…

உங்கள் உடலின் நோவையும் நகைச்சுவை இழையோட எழுதும் பாங்கு உங்கள் எழுத்தின் வளர்ச்சியை உணர்த்துகிறது. இதில் இவ்வளவு அராத்து பண்ணியும் உங்கள் பல்லைப் பிடுங்காமல் விட்ட மருத்துவரின் தொழில் தர்மம் மெய் சிலிர்க்க வைக்கிறது . நடக்கட்டும் உங்கள் ராஜ்ஜியம் தீபா :)

Rathnavel Natarajan சொன்னது…

எங்கள் ராம்குமாருக்காக மறுபடியும் படித்தேன். இன்று (28 அக்டோபர்) திரு ராஜண்ணா பிறந்த நாளுக்காக போட்டிருந்த பதிவில் இந்தப் பதிவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவருக்காகத் தேடி link கொடுத்தேன்.
"சரி, இந்த மாத்திரை எல்லாம் எங்க கிடைக்கும்?"
"எந்த மெடிக்கல் ஷாப் லயும் வாங்கலாம்."
"அய்யே, இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் கீழே விளம்பரம் கொடுத்திருக்கிற கடைல தான் வாங்க சொல்லணும், அப்போ தான், அவங்க திரும்பவும் உங்களுக்கு இது மாதிரி நோட்டு அடிச்சுக் கொடுப்பாங்க', "
என்றதும்,
'"வீட்டில தேட போறாங்க, கிளம்புங்க " - கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை... = அருமையான பதிவு. வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani