வியாழன், 2 மே, 2013

ஒரு மொபைல் போனும், கார்டும்...


வாங்கிக் கொடுத்த எதையும், குறை சொல்லாமல் ஏற்றுக்கொள்ளவோ, தள்ளவோக் கூடாது என்ற என்  கொள்கையின் படி, எனக்கு பரிசளித்த, சாம்சங் (ஸ்மார்ட் போன்), மொபைலைக் கையாளத் திணறி, குறிப்பாக, அதன் திரையிலேயே டைப் செய்வது என்ற வசதிப் பிடிக்காமல், தேவையற்ற எண்ணில்லாத  ஆப்சன் கண்டுக் குழம்பி, எரிச்சலாகி, பழகி இருக்காத பெரிய ஸ்க்ரீன் விருப்பத்திற்கு மாறாக அந்நியப்பட்டு நிற்க, புதிய மொபைலை ஏற்றுகொள்ள முடியாமல், பத்திரமாக அது பெட்டியில் இருந்த வண்ணமே வைத்துவிட்டேன்.

நேற்று  பல நாட்களுக்குப் பின்னர், ஒரு இருபது பேர் நிம்மதியாக இருப்பது பொறுக்காமல் இடைவேளை விட்டிருந்த காலை வாழ்த்து sms அனுப்பும் சேவையைத் திரும்பத் துவக்கிய பொழுது மக்கர் செய்ய தொடங்கியது, பழைய்ய்ய மொபைல். போராடி, ஒரு வழியாக அனுப்பிவிட்டு, கீ பேட் தனியாக உள்ள மொபைல் வாங்க, கடைக்கு சென்றோம். வழியில் இருந்த இரண்டு ATM களும், பழுதடைந்து இருக்க, கார்டு, ஏற்றுக்கொள்ளும் கடையைத் தேர்வு செய்து சென்றோம்.

அமெரிக்கன் கல்லூரி அருகில் இருந்த, குளிரூட்டப்பட்ட சற்று பெரிய மொபைல் கடையில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல மொபைல்கள் கொஞ்சமும் ஈர்க்கவே இல்லை. பின்ன, அடுக்கி வைப்பட்டிருந்ததில் அதிகமாக இருந்தது தொடு திரை, வசதி உள்ள அலைபேசிகளே. எதிர்பார்க்கும் ஒரே ஒரு வசதி கண்டிப்பாக  அடங்கி, எப்படி இருக்க வேண்டும் எனக்கான அலைபேசி என்று சொன்ன என்னை, உனக்கெதுக்கு புது மொபைல் எல்லாம் என்பது போல பார்த்தார் கடைக்காரர். நோக்கியா வில், தான், நீங்கள் கேட்கும் வசதியுடன் வரும், என்று காட்டியவற்றில், பரிசோதித்து நல்லதாகப் பட்ட ஒன்றை எடுத்தேன்.



மெமரி கார்ட் எல்லாம் செருகி, அடைக்கப்பட்ட அலைபேசியைக் கொடுக்கப்பட்ட பையில் பெற்றுக்கொண்டோம். பதிலாக நீட்டியக் கார்டை சர்ரென்று இழுத்துவிட்டு, டிக்லைன் ஆகிவிட்டது, என்று அடுத்த நொடியில் மீண்டும் ஒரு இழு இழுத்தார் கடைக்காரர். அடுத்த நிமிடத்தில் தொடர்ந்து இரண்டு sms கள், மொபைல் க்கு வந்தன. அதன் படி, இரண்டு முறைகளும் பணம் கழிக்கப்பட்டிருந்தன. டென்ஷன் ஆன ராம், ''இரண்டு முறை கழிக்கப்பட்டிருக்கு, இங்க பாருங்க'', என்று  குறுந்தகவல்களைக் காட்டியதோடு, 'ஏன் இரண்டாம் முறை அவசரப்பட்டு, நீங்க தேய்ச்சீங்க', என்று கோபமாக எகிறவும், கடைக்காரரோ, டிக்லைன் என்று வந்ததாலே தான் அப்படி செய்ததாகவும், கையோடு  கஸ்டமர் காபியை கொடுத்ததோடு, அவர்களுக்குரிய ஸ்டேட்மென்ட் என்று அதன் படியை, எடுத்துக் கொடுத்து, 'நல்லா, பாருங்க, ஒரு முறை தான் இதே அளவுத் தொகை இந்த நேரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது', என்று வாதாடினார். 

தலைவரோ, வங்கிக்கு செல்லாமல், கணக்கில் இருந்து எடுக்கப்பட்டப்  பணம் மீண்டும் செலுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள தான் தான் அல்லாட வேண்டும் என்று ஏறிய உஷ்ணத்தில் ஒரு டிகிரி கூட குறையாமல் பேசுவதைப் பார்த்து, உள்ளுக்குள் நான், "ஏற்கனவே நிதம் ரெண்டு BP மாத்திரை எடுக்கிற நமக்கு இதெல்லாம் தேவையா", என்று வருந்தினேன். திடீரென்று தோன்றிய  யோசனையின் படி, கடைக்காரரிடம், நூறு ரூபாயை எங்களுக்கு கொடுக்க சொல்லிவிட்டு, அதே கார்டை மீண்டும் தேய்த்து நூறு ரூபாயைக் கழிக்க செய்தால், வருகிற குறுந்தகவலில் உண்மை தெரிந்து விடும் என்றேன். அவர்களும் உடனடியாக செயல்படுத்த, அடுத்த நிமிடத்தில் வந்த sms இல், முதன்முறை கழிக்கப்பட்ட பணத்துடன், நூறு ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டிருந்தது. ஒரு வழியாக இரண்டு புறமும் ஏறிய ரத்தக் கொதிப்பு இறங்கி, கடையை விட்டு வெளியே வந்தோம்.

ஒரே மாதிரி கோபத்துடன் மட்டுமே ஒரு செயலைப் பார்க்கும் பொழுது, தேவையானக் காரியங்களை மறந்து, உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டே தான் இருப்போம். ஓரிருவராவது, அதிலிருந்து விலகி, யோசிக்கும் பொழுது உருப்படியான விஷயம் எளிதாக நினைவில் வரும். அவசியமானதை, வெற்றிகரமாக செயல்படுத்தவும்  முடியும்.





2 கருத்துகள்:

vivasayee சொன்னது…

சமயோசித சிந்தனை பல தலை போகும் பிரச்சினைகளை கூட எளிதில் தீர்த்து விடும்.பிரச்சினை ஏற்பட்டவுடன் அதில் இருந்து விலகி சிந்தின்கும் போது வழி புலப்படும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.வாழ்க!

பெயரில்லா சொன்னது…

சமயோசித புத்தி கூர்மையையும், பொறுமையும் இருந்தாலே பல பிரச்னைகளை பறக்க செய்து விடலாம்..