ஞாயிறு, 12 மே, 2013

சமாளிக்கிறோமாம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு வானொலிப் பண்பலை (FM) நேரலையில், தொலைபேசியில் சமையல் குறிப்புகளை கேட்டுக்கொண்டு பதிலுக்குப் பாட்டை வழங்கும் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டேன். அதில் பேசியப் பெண்மணியிடம், சென்னா மசாலா எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டவுடன், ஓ, தெரியுமே, சொல்கிறேன் என்றவர்,
'அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, மஞ்சள் தூள் உப்பு, தேவையான அளவு நீர் சேர்த்துக்  கொதித்தப் பிறகு, வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால், சென்னா மசாலா தயார்', என்றார். அதிர்ச்சியில் உறைந்துப்  போன நிகழ்ச்சித் தொகுப்பாளர், இதில், சென்னாவே வரவில்லை என்றார். கொஞ்சமும் சளைக்காத அந்தப் பெண்மணியோ, எங்க ஊர்ல இதை தாங்க சென்னா மசாலா என்று சொல்வோம் என்று, ஊர் பேரை வேறு குறிப்பிட்டு தொடர்பை துண்டித்தார்.

கட்டுக்கடங்காமல் பொங்கிய சிரிப்புடன், அந்தப் பெண் சொன்ன ஊரின் திசைக்குப் பெரிய வணக்கத்தை வைத்தேன். பின்னே, என் இனமல்லாவா அவர்?! 

எப்படின்னு, தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலும் வாசிக்கவும்!

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, சுதந்திர தினவிழாப் பற்றி, ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக என்று வினாத்தாளில் பார்த்த எனக்கு, மற்ற மாணவர்களைப் போலவே குழப்பம், ஏனென்றால், ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை, கட்டுரை எழுதுவதைப் பற்றி. ஆனாலும், யோசித்து,

" ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தினவிழா கொண்டாடப்படும். அன்று பள்ளியில் கொடி ஏற்றி மிட்டாய்க் கொடுப்பார்கள். இதுவே, சுதந்திரதின விழா ஆகும். இதுவே, ஒரு பக்க அளவில் நீங்க கேட்ட ஒரு கட்டுரையும் ஆகும்."

என்று ஒரு முழுத் தாளிலும், மிகப் பெரிய்ய்ய்ய எழுத்துக்களில் இந்த வரிகளை வரைந்து நிரப்பி விட்டேன். பேப்பரைத் திருத்திக் கொடுக்கும் பொழுது, நன்றாக சிரித்துக் கொண்டே ஆசிரியர் கொடுத்த ஞாபகம் நேற்று நடந்தது போல தெளிவாக இருக்கிறது.
(சேட்டை செய்தாலும், திட்டாத ஆசிரியர்களே இப்பொழுது வரை எனக்கு வாய்த்திருக்கிறார்கள்!)

எப்பொழுது நினைத்தாலும், சிரிப்பு வரும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!

சமாளிக்கின்றோமோ, உள்ளதை உள்ளபடி உரைக்கின்றோமோ, எதற்கும் கவலைப்படாமல் வெளிப்படுத்தும் மன உணர்வுகள், எதிர்ப்புகளை சம்பாதிப்பதை ஒரு புறம் செய்தாலும், இன்னொரு புறம், நமக்கும், நம்மைப் பிடித்தவர்களுக்கும், அசை போட்டு ரசிக்கத்தக்கவையாக மாறி விடும் திறன் பெற்றவை!




2 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அட்டகாசம்:)))!

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
எனது நண்பர் (இப்போது இல்லை) ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். ஒரு தொழிற்சாலையில் குழந்தைகள் இருப்பதாக துணை ஆட்சியர் வந்து படம் எடுத்து நோட்டிஸ் கொடுத்தார். அதற்கு எப்படி பதில் கொடுக்கலாம் என கேட்டோம். அவர் சொன்னது, துணை ஆட்சியர் வந்து கொடி ஏற்றி மிட்டாய் கொடுப்பதாக சொன்னார்கள், அதனால் தான் வந்தோம், வேலை செய்ய வரவில்லை என்று குழந்தைகளைச் சொல்லச் சொல்லுங்கள் என்றார். தீபா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். வாழ்த்துகள் தீபா.