வலி என்பது துளியும் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனக்கு ஸ்கேன் எடுத்து மருத்துவர், குழந்தையின் கழுத்துப் பகுதியில் மட்டும் நீர் உள்ளது, உடனடியாக சிசேரியன் செய்தாக வேண்டும் என்றார். முதுகை வளைக்க சொல்லி, நடுவில் உள்ள நீளமான எலும்பின் மத்தியில் ஊசி குத்திய பொழுது ஒரு பெரிய 'ஆ' சத்தம், சில நிமிடங்களில் இரண்டாவது ஊசியை அதற்கும் கீழே குத்தும் பொழுது, பென்சிலால் அழுத்திய உணர்வு. நொடிகள் கரைய கரைய.... தலை, கைகள் தவிர எல்லா பாகங்களுமே மரத்துப் போனது போல இருந்தது. சிறிது நேரத்திலேயே, குழந்தை அழுகிற சத்தம், எதிரில் இருந்த காலண்டரில், 28.05.2006, கடிகாரத்தில் நேரம், அதிகாலை 2.33. பத்து நிமிட இடைவெளிக்குப் பிறகு, பவுடர் எல்லாம் பூசி, புது சட்டை அணிந்த வருணை கைகளில் ஏந்தி, வந்த மருத்துவர் ' உங்களுக்கு பையன் பொறந்து இருக்கான், நல்லா இருக்கான்', என்றார். குட்டிக் குட்டிக் கை கால்களுடன், மருத்துவரின் கைகளுக்குள், அழகாக படுத்திருந்த வருணைப் பார்க்க, சுகமான பத்து மாத காத்திருப்பின் பலனை நேரில் கண்ட தாள முடியாத மகிழ்ச்சியில், உள்ளே ஊசி மூலம் ஏற்றப்பட்ட மருந்தில் நிம்மதியுடன் கண் அயர்ந்தேன்.
அந்த நாள் முழுவதுமே, அதிகமாக எடை கூடி இருந்ததால், எழவோ, திரும்பி படுக்கவோ கூட முடியாமலும், கால் எங்கே இருக்கிறது என்பதை உணர முடியாமலும், சீரான இடைவெளிகளில் கொடுக்கப்பட்ட திரவ உணவு வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருந்தேன். இதன் ஊடே, குழந்தைப் பார்க்க வந்த உறவுகளும், நட்புகளுக்கும் புன்சிரிப்பை பதிலாக அளித்து, ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் இருந்தேன். ஒரே மாதிரி கேள்விகள், ஒரே மாதிரி பதில்கள் தான் பெரும்பாலும், இருப்பினும், அலுக்கவில்லை.
வலியை மறக்க செய்வதற்காக போடப்பட்ட ஊசி, 24 மணி நேரம் மட்டும் வேலை செய்யும் போல. மெது மெதுவாக, அடி வயிற்றில், தையல் போடப்பட்ட இடத்தில் வலி தெரிய ஆரம்பித்தது. இப்பொழுதாவது கால்களை உணர முடிகிறதா என்று அசைத்துப் பார்த்தப் பொழுது, லேசாக அசைந்தன. வலி குறைய மீண்டும், ஊசி குத்தப்பட்டது. இதில், அந்த நேரத்தில் சளி, இருமலால் வேறு பாதிக்கப்பட்டு இருந்ததால், லேசாக இருமினாலே, தையல் பிரிந்து போவது மாதிரி, உயிர் போகும் வலி ஒரு புறம். எப்போ, இருமல் வருமோ என்று பயந்து கொண்டே இருந்ததாலோ என்னவோ, அடிக்கடி இருமிக் கொண்டே இருந்தேன். இரண்டாம் நாளில் தான், உட்கார முடிந்தது. மூன்றாம் நாளில், 7,8 அடிகள் எடுத்து வைத்து, நடக்க முடிந்தது. நான்காம் நாளில், யார் உதவியுமின்றியும், சுயமாக குழந்தையைத் தூக்க முடிந்தது. ஐந்தாம் நாள் வீட்டுக்கு வந்தாகிவிட்டது. படிப்படியாக குறைந்த வலி, மறைந்து போனாலும், அந்த ஒரு மாதத்தில், லேசான, இருமலோ, தும்மலோ வந்தால், அப்பப்பா......
ம்ம்... இவ்வளவையும் கடந்தால், உயிரின் ஒரு பகுதி தனியாய் உருவெடுத்து புன்னகைப்பதைப் பார்க்க முடியும்! :)
நான் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தால் பின்னால் வந்து ஊஞ்சலை தள்ளி விடுவதாகட்டும்,
அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்தால், நீங்களே பாருங்கம்மா என்று ரிமோட்ஐ என் கைகளில் திணிப்பதாகட்டும், சக மாணவர்களிடம், புதிய பென்சில்க்கு பதிலாக, இத்துனூண்டு ரப்பரை எக்ஸ்சேஞ் என்று பெற்று கொள்வதாகட்டும், பென்டென், படம் போட்ட ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் சாமான்களைத் தவிர வேறு எதற்கும் மெலிதாக கூட அடம் பிடிக்காமல் இருப்பதாகட்டும், பல விஷயங்களில், 1950 இல், இருந்த குழந்தைகளைப் போல வெகுளியாக இருக்கிறானோ என்ற வருத்தம் உண்டு. படிப்பில் கெட்டி தான். ஆனாலும், இந்த காலப் பிள்ளைகள் மாதிரி ஓரளவாவது சுயநலத்துடன் இருந்தால் தானே, இங்கு போட்டி போடவே முடியும் என்ற ஒரு தாய்க்குரிய இயல்பான ஆற்றாமை ஒரு புறம் இருக்க தான் செய்கிறது.
இன்று வருணுக்கு ஏழாவது பிறந்த நாள்! நாட்கள் ஓடியதே தெரியவில்லை...
எனக்கு இந்த நாளில் சொல்லிக்கொள்வது இன்னும் பொறுப்புடன், பொறுமையுடனும் வருணை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே! :)
6 கருத்துகள்:
வருணுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
தாயுள்ளத்தை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வில் எல்லா வளமும் வெற்றியும் பெற வருணுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
வருணுக்கு வாழ்த்துக்கள்...
பதிவு அருமை..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
வருணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வருணுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
கருத்துரையிடுக